முதுமையிலும் இளமை!

இளமை இருக்கும்போதே, சம்பாதிக்கும்போதே என்னுடைய வயதான காலத்துக்கு என்று சேமித்து வையுங்கள்; இரண்டாவது, ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்
முதுமையிலும் இளமை!

இளமை இருக்கும்போதே, சம்பாதிக்கும்போதே என்னுடைய வயதான காலத்துக்கு என்று சேமித்து வையுங்கள்; இரண்டாவது, ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்; மூன்றாவது ரொம்ப முக்கியம்...மன ரீதியாக, மனதிலே இளமையோடு இருப்பது என் கையில் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
சமீபத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் சிலர் "பணி ஓய்வு' பெற்றதைக் கேள்விப்பட்டு, "இப்போது என்ன செய்கிறீர்கள்?' என்று இதே கேள்வியைத் தனித்தனியாக அவர்களிடம் கேட்டபோது, "அதுதான் பணி ஓய்வு பெற்றாகிவிட்டதே... வேறு என்ன வேலை இருக்கிறது? நேரத்திற்கு சாப்பிடுவது, தூங்குவது, டி.வி. பார்ப்பது' என்பதுதான் அனைவரிடமிருந்தும் வந்த பதில். 
அவர்கள் அனைவருமே "பணி ஓய்வு' என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. பணி ஓய்வு என்பது நாம் செய்துவந்த அலுவலகப் பணியிலிருந்துதானே தவிர, நம் உடலுக்கோ, மனதுக்கோ அல்ல. முதுமையில் பிறருக்குப் பாரமாக இருக்கக் கூடாது, உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இவர்கள் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ளும் தருணம் இது என்பதை அவர்கள் உணரவில்லை. 
வேலைக்குச் சென்றவர்கள் திடீரென்று பணி ஓய்வு பெறும்போது ஒருமாத காலத்துக்குத் தடுமாறுவார்கள். முழு நேரமும் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வது என்கிற கேள்வி எழும். முதுமையில் "தன் கையே தனக்கு உதவி' என்று வாழக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஓர் அற்புதப் பதிவு சமீபத்தில் எழுத்தாளர் சிவசங்கரியிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்கிறது.
"நரைகூடிக் கிழப்பருவம் எய்தினாலும்' அது உடலுக்குத்தானே தவிர, மனதுக்கு அல்ல. மனம் என்றைக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருக்க வேண்டும். பணி ஓய்வு பெற்றுவிட்டாலும், வீட்டிலும், வெளியிலும் நம்மால் பிறருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டும், அதற்கான வழிமுறைகளைத் தேடிப்பிடித்து இணைய வேண்டும்.
எழுத்தாளர் சிவசங்கரியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் முதுமையை எப்படிக் கையாள வேண்டும், ஒருபடி மேலே போய் எப்படி முதுமையை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை (காணொலி காட்சியாக) கற்றுக்கொடுக்கிறது. 
இதற்கு "மேரிக்கோ' எனும் அமெரிக்கப் பெண்மணிதான் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவரைப் பார்த்து வியந்துபோன எழுத்தாளர் சிவசங்கரி, முதுமைப் பருவத்தை நாம் எப்படி எதிர்நோக்க வேண்டும்; அதை எப்படி ரசிக்க வேண்டும் என்பதைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவு இங்கு மிகவும் அவசியமாகிறது.
அமெரிக்க அரசாங்கம் 1986-ஆம் ஆண்டு எழுத்தாளர் சிவசங்கரிக்கு எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது. அதை ஏற்று அவர் அங்கு சென்று மூன்று மாதங்கள் தங்கியிருக்கிறார். 
விருந்தினரான அவர் விரும்பிய இடங்களைப் பார்க்கலாம் என்றும் அமெரிக்க அரசு கூற, அவரும், "ஃபொனிக்ஸ்' (Phoenix) என்ற பாலைவனம் நிறைந்த ஒரு மாநிலத்திற்குப் போய் "செவ்விந்தியர்கள்' என்று சொல்லக்கூடிய "ரெட் இன்டியன்ஸ்'சைப் பார்க்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஏற்பாடு செய்த அமெரிக்க அரசு, "உங்களை உள்ளூர் ஆசாமி ஒருவர் வந்து அழைத்துச் செல்வார். மூன்று நாள்களும் உங்களுக்கு வேண்டியதை அவரே கவனிப்பார்' என்று கூறியிருக்கிறது. 
சிவசங்கரி மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடும், துள்ளலோடும் போய் விமான நிலையத்தில் இறங்கியபோது, உடம்பில் சுருக்கம் விழுந்த 82 வயதான பெண்மணி வந்து "ஹலோ சிவா, நான்தான் மேரிக்கோ. நான்தான் மூன்று நாளும் உன்னை கவனித்துக்கொள்ளப் போகிறேன்' என்று சொன்னவுடன் சிவசங்கரி பலூனில் ஊசி குத்தியதைப் போல (அப்படித்தான் அவர் கூறியுள்ளார்) ஆகிவிட்டார். எங்கெல்லாமோ சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர், இந்த முதிய பெண்மணியை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருக்கிறார். 
ஆனால், அந்த மூன்று நாள்களும் 82 வயதான அந்த மேரிக்கோ 18 வயது பெண்ணின் சுறுசுறுப்புடன் கார் ஓட்டிக்கொண்டு, அவரை ஒரு நாளைக்கு 15 இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய் அத்தனை இடங்களையும் சுற்றிக்காட்டியிருக்கிறார்.
இதைப் பார்த்து வியந்து போன சிவசங்கரி, "பாரதி சொல்வார் இல்லையா, "விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்' என்று.... அதேபோல அந்த அம்மாவைப் பார்த்தபோது அவர் மனதுக்கு ஏற்றமாதிரி அவர் உடலும் இருந்தது கண்டு வியந்தேன். கிழவியா இருக்கலாம், தோல் சுருங்கிப் போயிருக்கலாம், தினமும் எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய் காண்பித்துவிட்டு, இரவு 7 மணிக்கு என்னை அறையில் விட்டுவிட்டு, "சிவா... எனக்குத் தெரிந்த குழந்தைக்கு இன்றைக்கு பர்த் டே. நான் போய் 30, 40 பேருக்குக் கேக் செய்யணும்' என்பார். அடுத்த நாள், "அருகில் இருக்கும் ஆர்ஃபனேஜ் ஹோம் சென்று கணக்கு எழுதணும்' என்பார். மூன்றாவது நாள் முடிவதற்குள் மேரிக்கோவை கையெடுத்துக் கும்பிடலாம் போல ஒரு பரவசம் என்னுள் எழுந்தது' என்கிறார் சிவசங்கரி.
சிவசங்கரியை விமான நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த மேரிக்கோ அம்மா சொல்லியிருக்கிறார், "சிவா... நீ வந்ததுனால எனக்குள்ள ஒரு விழிப்புணர்வு வந்தது' என்று.
அதற்கு சிவசங்கரி, "என்னம்மா...' என்று கேட்க, "சப்பாத்திக் கள்ளிகள் உள்ள பெரிய பெரிய வனங்கள் - பொட்டானிகல் கார்டர்ன்ஸ் போனபோது நீ பல கேள்விகள் கேட்டாய். அதற்கெல்லாம் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அதனால் எனக்கு அறிவு போதாது என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்த வாரத்திலிருந்து இங்கிருக்கும் யுனிவர்சிட்டியில் சேர்ந்து பார்ட் டைம் கோர்ஸ் போகப்போறேன்' என்றாராம் அவர்.
"இந்த 82 வயது அம்மாவை "கிழவி' என்று இனி எப்படிச் சொல்ல முடியும்? இதுதாங்க மனது. மனது இளமையாக இருப்பது ரொம்ப முக்கியம். அந்த அம்மா முதுமைக்குத் தன்னை ரொம்ப அழகாகத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் அந்த மேரிக்கோவிடம், "மேரிக்கோ நான் 80 வயது வரைக்கும் உயிரோடு இருந்தால் உங்களைப் போன்று, உங்கள் மன முதிர்ச்சியோடு, உங்கள் மன சிந்தனைகளோடு நான் இருக்கணும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்'' என்று சிவசங்கரி பதிவு செய்கிறார். 
"நண்பர்களே.... முதுமை என்பது ரசிக்கக்கூடிய ஒன்று. நாம் கற்க வேண்டியது, நம் கடைசி மூச்சு நிற்கும் வரைக்கும் நிற்கக் கூடாது. உடம்பாலும், பொருளாதார ரீதியாகவும், மனதாலும் நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இளமை இருக்கும்போதே, சம்பாதிக்கும்போதே என்னுடைய வயதான காலத்துக்கு என்று சேமித்து வையுங்கள்; இரண்டாவது, ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்; மூன்றாவது ரொம்ப முக்கியம்... மன ரீதியாக, மனதிலே இளமையோடு இருப்பது என் கையில் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நான் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன், எனக்கே நான் பாரமாக இருக்கமாட்டேன்.. என் உறவினர்கள் என்னை நினைத்துப் பரவசப்படும்படி இருப்பேன் என்கிற முடிவோடு அதை எழுதி வைத்துக்கொண்டு, இரவு தூங்கப்போகும் முன்பு படித்து விட்டுத் தூங்குங்கள்' - இதுதான் எழுத்தாளர் சிவசங்கரி முதுமையை ரசிக்கச் சொன்ன பதிவு. 
- இடைமருதூர் கி.மஞ்சுளா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com