Enable Javscript for better performance
செவ்வாய் கிரக ஆய்வு குழுவில் குடும்பத் தலைவி- Dinamani

சுடச்சுட

  

  நான்காண்டுகளுக்கு முன் இந்திய விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய இந்திய விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக எல்லைக்குள் சென்றடைந்தபோது, இந்திய விஞ்ஞானிகள் அந்த சாதனையை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த குழுவில் சில பெண் விஞ்ஞானிகளும் இருந்தனர். அவர்களை ராக்கெட் பெண்கள் மற்றும் செவ்வாய் கிரத்திலிருந்து வந்த பெண்கள் என்று குறிப்பிட்டனர். அப்போதுதான் இந்த ஆய்வு குழுவில் பெண்களும் இடம் பெற்றிருப்பது தெரிந்தது. அவர்களுக்கு தலைமையாக இருந்த பி.பி. தாக்ஷாயிணி, இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கை கோள் எப்படி பாதை தவறாமல் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது என்பதை விவரித்த விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
   கடினமான விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஒரு குடும்பத்தலைவி ஈடுபடுவதென்பது சாதாரண விஷயமல்ல, பாரம்பரிய, நடுத்தர, வைதீக குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்தது ஆச்சரியம்தான். 1960-ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பத்ராவதியில் குழந்தை பருவத்தை தொடங்கிய தாக்ஷாயிணியின் ஆர்வத்திற்கு அவரது தந்தைதான் உறுதுணையாக இருந்தார். பத்ராவதியில் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்த ஒரே ஒரு பெண்மணியும் இவர்தான், பட்டம் பெற்றவுடன் பி.எஸ்.சி படிக்க வேண்டுமென்று தாக்ஷாயிணி விரும்பியபோது, படித்தவரை போதுமென்று இவரது தந்தை கூறினாலும், இவர் மேற்கொண்டு படித்து பட்டம் பெற்றார்.
   வேலைக்குச் செல்ல விரும்பியபோது, கல்லூரியில் கணித பேராசிரியை வேலை கிடைத்தது. ஆனால் இவருக்கு விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஆர்வமிருந்தது. அதற்கேற்றாற்போல் இஸ்ரோ விளம்பரமொன்றை பார்த்த இவர் வேலைக்கு மனு அனுப்பினார். இவரது, அதிர்ஷ்டம் இஸ்ரோவில் வேலை கிடைத்தது. 1984- ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் அடிப்படை தகவல்கள் அனைத்தையும் கற்றுணர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவராக விளங்கினார். ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற நவீன வசதிகள் அறிமுகமாகாத அன்றைய காலகட்டத்தில் தினமும் புத்தகங்களை படித்தே கம்ப்யூட்டர் புரோகிராம் தகவல்களை கற்றுணர்ந்தார்.
   தாக்ஷாயிணி இஸ்ரோ பணியில் சேர்ந்த மறு ஆண்டே அவரது பெற்றோர் ஆர்தோபடிக் சர்ஜனான டாக்டர் மஞ்சுநாத் பசவலிங்கப்பா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். குடும்ப தலைவியான தாக்ஷாயிணி, விண்வெளி ஆய்வு தொடர்பான பணியையும், வீட்டில் கணவருடன் உடன் பிறந்த ஐவர், மாமனார், மாமியார் மற்றும் தங்களது இரு குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
   தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து அனைவருக்கும் உணவை தயாரித்து வைத்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிச் செல்வாராம். மாலையில் வீடு திரும்பியவுடன் மீண்டும் வீட்டு வேலைகளை செய்வார்.
   "இப்படி நான் சிரமப்படுவதை பார்த்த உறவினர்களில் சிலர், வேலையை விட்டுவிடும்படி கூறியதும் உண்டு. அத்தனை சுலபமாக வேலையைவிட நான் தயாராக இல்லை. "முடிவு தெரியும் வரை முயற்சி செய்' என்று என்னுடைய தந்தை கூறுவதுண்டு. ஏதாவது புரியவில்லை என்றால் நான் திரும்ப திரும்ப புத்தகங்களை படிப்பேன். சில சமயங்களில் படுக்கச் செல்ல இரவு 2 மணி ஆகிவிடும். மறுபடியும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். இது குறித்து நான் யாரிடமும் சொல்லி குறைப்பட்டதில்லை. வாழ்க்கை - வேலை இரண்டிலும் பிரச்னைகளை சந்தித்து தீர்வு காண்பது எனக்கு பிடித்திருந்தது. சமையல் செய்வது அதிலும் சிறு மாற்றங்கள் செய்து ருசியான உணவுகளை சமைப்பது பிடிக்கும்.
   திருமணமான புதிதில் நான் என்ன பணி செய்கிறேன் என்பது குறித்து என் கணவருக்கு புரியவில்லை என்றாலும், விண்வெளி ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டிருப்பதை அறிந்து சந்தோஷ பட்டார். செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்படும் விண்கலம் எவ்வளவு தூரம் கடந்து எவ்வளவு நாட்களில் அதன் பாதையை சென்றடையும்? பின்னர் பூமிக்கு திரும்பும்போது பாதுகாப்பாக கடலில் எந்த பகுதியில் விழும் என்பதை நான் கணக்கிட்டு சொல்வதை ஆர்வமுடன் கேட்பார். ஒரு டாக்டர் என்ற முறையில் நான் தினமும் 18 மணி நேரம் உழைப்பதை போல், நீயும் விஞ்ஞானி என்ற முறையில் அலுவலகத்தில் அதிக நேரம் உழைப்பதில் தவறில்லை என்பார்.
   வீட்டைப் பொருத்தவரை இப்போது முன்னைப் போன்று பரபரப்பாக வேலை செய்யும் நேரம் குறைந்துவிட்டது. என்ஜினீயர்களான எனது மகன் மற்றும் மகள் இருவரும் தற்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் என்ன செய்ய போகிறீர்கள் என்று என்னிடம் சிலர் கேட்பதுண்டு. பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் உள்ள வித்தியாசங்கள், ஒற்றுமைகள் குறித்த பல தகவல்கள் என்னிடம் உள்ளன. அதை வைத்து தொடர்ந்து ஆய்வுகள் செய்வேன். பூமியை சுற்றிலும் உள்ள கிரகங்கள் என்னை கவர்ந்திருப்பது போல், பல இளம் பெண்களை கவர வாய்ப்புள்ளது. எனவே இந்த விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட பெண்களும் முன் வர வேண்டும்'' என்கிறார் தாக்ஷாயிணி.
   - பூர்ணிமா
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai