ரோல் மாடலாக இருக்க வேண்டும்!

கடந்த மே-12 -ஆம் தேதி உலக செவிலியர் தினத்தையொட்டி பெரும்பாலான மருத்துவமனைகளில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
ரோல் மாடலாக இருக்க வேண்டும்!

கடந்த மே-12 -ஆம் தேதி உலக செவிலியர் தினத்தையொட்டி பெரும்பாலான மருத்துவமனைகளில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையிலும் செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியாற்றும் அந்த மருத்துவமனையில் செவிலியர்களின் இயக்குநராக பணியாற்றுபவர் சி.நிர்மலா ஐயர். இவர், ராணுவ செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். செவிலியர் தினம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
செவிலியர் தினம் குறித்து? 
முதன்முதலில் செவிலியர்களுக்கு அடித்தளம் இட்டவரான நைட்டிங்கேலின் பிறந்த தினத்தின் நினைவாக ஆண்டு தோறும் மே 12 -ஆம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
உலகளவில், இன்டர்நேஷனல் நர்ஸிங் அமைப்பு ஒன்று இருக்கிறது. அந்த அமைப்பின் மூலம் ஆண்டு தோறும் ஒவ்வொரு செவிலியர் தினத்திற்கும், ஒரு தீம் கொடுப்பார்கள். 
W.H.O அமைப்பு, அதை முன்னிறுத்தும். அதை பின்பற்றி செவிலியர் அமைப்புகள் அனைத்தும் செவிலியர் தினம் கொண்டாடுவார்கள். அதன் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாக "ஏ வாய்ஸ் டூ லீட்' என்ற ஒரே தீமில் கொண்டாடி வருகிறோம். பணம் இருப்பவர்கள், இல்லாதவர், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
இந்த வாய்ஸ் டூ லீட் என்பதை பொருத்தவரை, செவிலியர்கள், நோயாளிகளிடம் அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி வாயை திறந்து பேச வேண்டும். ஏனென்றால், பொதுவாக மருத்துவரிடம் பேச தயங்கும் நோயாளிகள், செவிலியர்களிடம் நன்றாகப் பேசி பழகுவார்கள். மேலும், நர்ஸ் பணியில் இருப்பவர்கள், நோயாளியுடனும் பழகுவார்கள், குடும்பத்திலும் அவர்கள் பங்கு இருக்கும், சமூகத்திலும் அவர்களின் பங்கு இருக்கும். இதனால், உடல் ஆரோக்கியத்தைப் பற்றி எல்லோருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் செவிலியரின் பங்கு அதிகம். அதனால் அவர்கள் எல்லாரிடமும் வாய் திறந்து பேச வேண்டும் என்பதுதான் இந்த கான்சஃப்ட்டின் அர்த்தம். 
ராணுவ செவிலியராக பணியாற்றிய அனுபவம்?
எனது பூர்வீகம் தமிழகம்தான். பள்ளி படிப்பு முடித்ததும் நர்ஸாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட நர்ஸிங் படித்தேன். நர்ஸிங் முடித்ததும், ஆர்மியில் வேலை கிடைத்தது. நான் ரொம்ப ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள், இதனால் ஆர்மியில் சேர்ந்ததும், புரியாத மொழி, அசைவ உணவு இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு கட்டத்தில் ஆர்மியில் இருந்து ஓடி விடலாமென நினைத்தேன். 
அந்த சமயத்தில் ஓர் இடத்தில் பூகம்பம் ஏற்பட, அதில் சிக்கிய பொது மக்களைக் காப்பாற்ற சென்ற ஆர்மி ஆட்களும் பாதிக்கப்பட்டனர். அப்போது ஒரு நர்ஸ்ஸாக அவர்களுக்கு உதவ சென்றேன். அந்த சூழ்நிலைகளைப் பார்த்தபோது, இனி என்ன நடந்தாலும் ராணுவத்தில் இருந்து செல்லக் கூடாது என மனதிற்குள் உறுதி செய்து கொண்டேன். அதன்பிறகு, ஆர்மியில் நர்ஸாக இருந்து கொண்டே பரீட்சை எழுதி லெட்டினன்ட் ஆனேன். அப்போது எனக்கு 18 வயது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து லெட்டினன்ட் கர்னலாக ஆனனேன். 26 ஆண்டுகள் ஆர்மியில் பணியாற்றிவிட்டு குடும்ப சூழல் காரணமாக விருப்ப ஓய்வில் வெளியே வந்தேன். 
ஆர்மியைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் மல்டி பெர்ஸ்னாலிட்டியாக இருக்க வேண்டும். அதாவது நர்ஸாக வந்திருக்கிறேன், அதனால் நர்ஸ் பணியை மட்டும்தான் செய்வேன் என்று சொல்லக்கூடாது. டீச்சிங், நர்ஸிங், ரிஸர்வ்டு வேலை அதாவது தீடிரென்று தூப்பாக்கி எடுத்துச் சுட சொன்னாலும் செய்ய வேண்டும். தூப்பாக்கி சுடுவதற்கெல்லாம் பழக்கியிருப்பார்கள். அதனால், எல்லாருமே எல்லாமும் செய்ய வேண்டும். மல்டிபள் டாஸ்க்தான். 
ராணுவத்தில் பணியாற்றியபோது மறக்க முடியாத நிகழ்வுகள் இருந்திருக்குமே?
உண்மைதான்! ஒவ்வொரு நாளும் ஒரு சவால்தான். ஆனால், அவை எல்லாம் ராணுவ வீரர்களுக்கு பழகிப்போன ஒன்று. என்னை ரொம்பவும் நெகிழ வைத்த சம்பவம் என்றால் அது, நான் ஆர்மியில் இருந்து வெளியே வந்த பிறகு, பஞ்சாபில் உள்ள "பாட்னா' என்ற ஊரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸிங் பணியில் சேர்ந்தேன். அப்போது அங்கு வந்த சர்தார்ஜி இளைஞர் என்னைப் பார்த்ததும், என்னிடம் வந்து, என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டார். 
அவரது தோற்றத்தைப் பார்த்ததும், அவர் ஆர்மியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. ஆனால், யார் என்று எனக்கு நினைவில்லை. அதனால் யோசித்தேன். அதன் பிறகு அவரே சொன்னார். நான் புணேயில் பணியில் இருந்தபோது, குண்டு அடிப்பட்டு வந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய சென்றேன். அப்போதெல்லாம் ஆர்மியில் நர்ஸ்கள் மிகவும் குறைவுதான். அதனால், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பேரை ஒரேயொரு நர்ஸ் கவனிக்க வேண்டும். அதனால் லெட்டினன்ட் கர்னலாக, சீனியர் ரேங்கில் இருந்த நானும் உதவி செய்ய சென்றேன். ஒரு கர்னலாக இருந்து கொண்டு, அங்கு குண்டு அடிப்பட்டு கையை தூக்க முடியாமல் இருந்த ராணுவ வீரர்கள் பலருக்கும் உணவை ஊட்டிவிட்டு, அவர்களுக்கு தேவையான பணிவிடைகளும் செய்தேன். அப்படி உதவி செய்ததில் அந்த இளைஞரும் ஒருவர், சீனியர் ரேங்கில் இருந்து கொண்டு, நான் உதவி செய்ததை எண்ணி நெகிழ்ந்து போன அந்த இளைஞர், பல ஆண்டுகள் கழித்தும் அதை மறக்காமல் நினைவில் வைத்திருந்து என்னைப் பார்த்ததும், வந்து பாராட்டியது மறக்கவே முடியாது. 

திருமண வாழ்க்கை பற்றி?
ஆர்மியில் இருந்தபோதுதான் என் திருமணம் நடந்தது. பொதுவாக, ஒரு ஆண் ஆர்மியில் வேலை பார்க்கிறார் என்றாலே நமது ஊரில் பெண் கொடுக்க தயங்குவார்கள். அப்படியிருக்க, ஆர்மியில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். மாப்பிள்ளை கிடைத்தால், எனக்கு விடுமுறை கிடைக்காது, விடுமுறை கிடைத்தால் மாப்பிள்ளை கிடைக்க மாட்டார். எப்படியோ, 32 வயதில் திருமணம் ஆனது. ஆனால் அதிலும் சிக்கல், கணவருக்கு மத்திய அரசாங்கத்தில் பணி. அவருக்கும் அவ்வப்போது ஊர் ஊராக மாற்றல் வரும். இதனால், இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் பணி. ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதே சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், என் கணவர் என் பணிச் சூழல் குறித்து நன்கு புரிந்து வைத்திருந்ததால், என்னைப் புரிந்து கொண்டு உறுதுணையாக இருந்தார். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். எங்கள் குழந்தையை பத்து வயது வரை என் கணவர்தான் பார்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் என் பணியை விட வேண்டிய சூழல் ஏற்படவே விருப்ப ஓய்வு பெற்றேன். அதன்பிறகு, கணவர் பணியில் இருந்த புணேவிற்கே சென்று அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியைத் தொடங்கினேன். அதிலிருந்து தொடர்ந்து பல மாநில மருத்துவமனைகளில் வேலை பார்த்தேன். 
இப்போதுதான் என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் பிறந்த தமிழ்நாட்டிலேயே பணி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து ஓர் ஆண்டு ஆகிறது, தற்போது, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறேன். நர்ஸிங் சர்விஸ் இயக்குநராக இருக்கிறேன். எனக்கு கீழ் 400 நர்ஸ்கள் பணி புரிகிறார்கள். 
செவிலியர்களுக்கு இருக்க வேண்டிய குண நலன்கள்?
என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு செவிலியரும், ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும். என்னென்றால், செவிலியர் பணி என்பது மற்றவர்களுக்கு சேவை செய்யும் பணி. இதில் பொறுமை மிக மிக அவசியம். அப்போதுதான், அவர்களுக்கு அடுத்து பணியில் சேரும், இளம் நர்ஸ்கள், நோயாளிகளிடம் எப்படி பழக வேண்டும், எப்படி அவர்களை கவனிக்க வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொள்வார்கள். நாம் ஒரு விஷயத்தை வாய்வழியாக சொல்லிக் கொடுப்பதைவிட செயலில் காட்டினால், அவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். 
அதுபோன்று, செவிலியர் பணியில் இருப்பவர்களின், குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து, அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால் செவிலியரை பொருத்தவரை, நாள்தோறும் எமோஷனலாக இருப்பவர்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் நோயாளிகளும், அவர்களின் வலியும், அழுகுரலும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அதைப் புரிந்து கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. 
- ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com