Enable Javscript for better performance
குடைமிளகாய் விளைச்சல் சாதனை!- Dinamani

சுடச்சுட

  

  குடைமிளகாய் விளைச்சல் சாதனை!

  Published on : 29th May 2019 10:24 AM  |   அ+அ அ-   |    |  

  CAPSICUM-FARMING

  பெங்களூரை அடுத்த ராம்நகரம் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமமான மாயகானஹள்ளியில் தங்களுடைய அரை ஏக்கர் நிலத்தில் பாலி அவுஸ் அல்லது கிரீன் அவுஸ் பார்மிங் முறையில் குடைமிளகாய் பயிரிட்டு ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் சம்பாதிக்கிறார் 38 வயதாகும் கமலம்மா. சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் இவரை "காப்சிகம் கமலம்மா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.
   பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கமலம்மா, தன் குடும்பத்துக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில் அடிப்படை தேவைக்கான பாரம்பரிய தானிய வகைகளையே தன் கணவருடன் சேர்ந்து பயிரிட்டு வந்தார். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இருந்தாலும், விவசாயத் துறையில் புதிய உத்திகளை புகுத்த நினைத்த கமலம்மா. அரை ஏக்கர் நிலத்தில் பாலி அவுஸ் முறையில் பருவ காலத்திற்கேற்ற காய்கறிகளை விளைவிக்க திட்டமிட்டார்.
   பாலி அவுஸ் அல்லது கீரின் அவுஸ் விவசாயம் என்பது பாரம்பரிய விவசாய முறையிலிருந்து மாறுபட்ட பாதுகாக்கப்பட்ட விவசாயமாகும். தாவரங்களை திறந்த வெளியில் வளர்க்காமல் பாதுகாப்புடன் பருவ நிலையை செயற்கை முறையில் கட்டுப்படுத்தி ஈரபதத்துடன் கூடிய திரை மற்றும் வென்டிலேட்டர் அமைத்து தாவரங்களை வளர்ப்பதாகும். மேற்கூரை மீது பாலிபிலிம் அமைக்கப்படுவதால் மழைநீர் ஒரு துளி கூட உட் பகுதிக்குள் வர வாய்ப்பில்லை.
   விவசாயக் கல்வி பற்றிய அடிப்படை அனுபவம் ஏதும் கமலம்மாவுக்கு இல்லாததால், விவசாயத்தை முழுமையாக அறிய குறுகிய கால வகுப்பு மூலம் தெரிந்து கொள்ள காந்தி கிரிஷி வித்யா கேந்திராவின் ( ஜி.கே.வி.கே) விவசாய அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார். ஏற்கெனவே இவரது கணவர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கேழ்வரகு பயிரிட்டு வந்தார். கூடவே பால் பண்ணை, கோழிப் பண்ணை, பட்டுத் தொழில் போன்றவைகளையும் செய்ய தேவையான பயிற்சிகளை கற்றுணர்ந்தார்.
   2005-ஆம் ஆண்டு தங்கள் நிலத்திலிருந்து அரை ஏக்கர் நிலத்தில் பாலி அவுஸ் முறையில் காய்கறிகளை பயிரிடும் திட்டத்தைத் துவங்க தன் குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்தார். கூடவே, மாநில அரசிடமிருந்து உதவித்தொகை மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி பெற தீர்மானித்தார். இவரது பிள்ளைகள். என்ஜினியரிங் கல்வி கற்று வந்ததால், வங்கி கடனுதவி பெற கையெழுத்திட மறுத்து விட்டனர். அவர்களிடம் பலமுறை பேசி ஒப்புதல் பெற்று பாலி அவுஸ் திட்டத்தை செயல்படுத்த துவங்கினார் கமலம்மா. பாலி அவுஸ் பண்னை தொடங்குவது. அத்தனை சுலபமல்ல, அதிக முதலீடு செய்ய வேண்டும். கமலம்மாவின் அதிர்ஷடம் தொடக்கத்தில் செய்த முதலீடு ஒரே ஆண்டில் லாபத்தை அளிக்கத் தொடங்கியது. குடைமிளகாய் செடிகளை பயிரிட ஒரே ஆண்டில் 40 டன் விளைச்சல் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதலாக 10 டன் உற்பத்தி அதிகரித்தது.

   மார்க்கெட்டில் குடைமிளகாய் தேவை அதிகரிக்கவே, சிலரது யோசனைப்படி கூடுதல் விலை கிடைக்க மஞ்சள், சிவப்பு நிற குடைமிளகாய்களை பயிரிடத் தொடங்கினார். வண்ண நிற குடைமிளகாய் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் ஆறே மாதத்தில் வங்கி கடன் ரூ. 6 லட்சத்தை கமலம்மாவால் திரும்ப தெலுத்த முடிந்தது. கூடவே ஜி.கே.வி.கே அறிவுரைப்படி மீதமுள்ள நிலத்தில் மாந்தோப்பு, கோழி பண்ணை, பால் பண்ணை, பட்டுத் தொழில் போன்றவைகளையும் தொடங்கியதால் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சமும், குடைமிளகாயுடன் வெள்ளரி, தக்காளி, சுரைக்காய், முட்டை கோஸ், ஸ்ட்ராபெரி, மற்றும் தேவை அதிகமுள்ள அலங்கார பூக்கள், ரோஜா போன்ற செடிகளையும் வளர்த்து வருவதால் ஆண்டுக்கு 15 லட்சம் லாபம் கிடைத்து வருகிறது.
   கமலம்மாவின் சாதனை மாநில மற்றும் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றதோடு, பக்கத்து கிராமப் பெண்களிடமும் பரவி இவரது ஆலோசனைகளை கேட்டுச் செல்கின்றனர். "காப்சிகம் கமலம்மா' என்ற சிறப்பைப் பெற்ற இவரை, அண்மையில் ஜி.கே.வி.கே கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திரமோடி அழைத்து பாராட்டியுள்ளார்.
   - அ.குமார்
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai