சமையல் சமையல் (6/11/2019)

வாழைப்பழ சப்பாத்தி, பச்சைப்பயறு தோசை, ரவை புட்டு, ராகி கீரை அடை 

வாழைப்பழ சப்பாத்தி

தேவையானவை:
 வாழைப்பழம் - 2-3, கோதுமை மாவு - 3 கிண்ணம், காய்ச்சியப் பால் - 1 டம்ளர், பொடித்த சர்க்கரை - 2 தேக்கரண்டி, எண்ணெய் - சிறிதளவு
 செய்முறை:
 வாழைப்பழத்தை உரித்து, நறுக்கி அதனுடன் தேவையானப் பால், சர்க்கரை சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமானப் பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு அதில் அரைத்து வைத்த வாழைப்பழ கூழ் சேர்க்கவும். தேவைப் பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பிசையவும். சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி திரட்ட வேண்டும். சூடான தவாவில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான வாழைப்பழ சப்பாத்தி தயார்.
 பலன்கள்
 பொட்டாசியம் சத்து அதிகம். காலை நேர டிபனாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உடல் எடை அதிகரிக்கவும் உதவும். நீண்ட நேரம் பசி தாங்கும். இனிப்பு சுவை உள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

பச்சைப்பயறு தோசை

தேவையானவை
 பச்சைப்பயறு - 1 கிண்ணம், சின்ன வெங்காயம் - 5, காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 2 , சீரகம் - 1 தேக்கரண்டி, முந்திரி - 3 உப்பு - சிறிதளவு
 செய்முறை:
 பச்சைப்பயறை இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவேண்டும். காலையில் ஊறவைத்த பச்சைப்பயறை மிக்ஸியிலிட்டு, அதனுடன் மேற்சொன்ன அனைத்தையும் சேர்த்து அரைக்கவும். தோசை மாவுப் பதத்துக்கு மாவை கரைத்துக் கொள்ளவும். சூடான தவாவில், மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னி, வெங்காயச் சட்னியுடன் பொருத்தமாக இருக்கும்.
 பலன்கள்
 புரதம் மற்றும் நுண்ணூட்ட சத்துகள் அதிகமாக உள்ளன. வயிற்றுக்கு நல்லது. காலை நேர போஷாக்கான உணவாக அமையும். தேவையான எனர்ஜி கிடைக்கும்.

ரவை புட்டு

தேவையானவை
 ரவை - 3 கிண்ணம், தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம், வாழைப்பழம் - 2, நாட்டு சர்க்கரை - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு
 செய்முறை:
 ரவையை அகலமானப் பாத்திரத்தில் போடவும். கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழலில் தேங்காய்த் துருவல் கொஞ்சம் பிசைந்த ரவை, மீண்டும் தேங்காய்த் துருவல் என நிரப்பி வேக வைக்கவும். வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரைச் சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 பலன்கள்
 ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு. காலை உணவாக கொடுக்க சிறந்தது.

ராகி கீரை அடை

தேவையானவை
 முருங்கைக்கீரை - 1 கிண்ணம், ராகி மாவு - 2 கிண்ணம், தோசை மாவு - 1 கரண்டி, மிளகுத் தூள் - ணீ தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கேரட் துருவல் - 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - சிறிதளவு
 செய்முறை:
 முருங்கைக்கீரை சுத்தம் செய்து நன்கு அலசவும். லேசாக எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். அகலமானப் பாத்திரத்தில் எண்ணெய்யை தவிர அனைத்தையும் கொட்டி கெட்டியான மாவுப் பதத்துக்குத் தயாரிக்கவும். சூடான தவாவில் அடைகளாக தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவேண்டும். இதற்கு தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி நன்றாக இருக்கும்.
 பலன்கள்
 இரும்புச்சத்து உள்ளது. ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்கு நல்லது. பார்வைத்திறன் மேம்படும்.
 - கே.முத்துலட்சுமி, தொண்டி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com