சிகரம் தொடும் வேகம் இருந்தால் வெற்றி நிச்சயம்!

"அறம் செய்ய விரும்பு' என்பது ஒளவை பிராட்டியின் மொழி. "தொழில் செய்ய விரும்பு' என்பதாக மாறியுள்ளது. ஆண்களுக்கு மட்டுமே சொந்தமென கருதப்பட்ட தொழில், தற்போது பெண்களின் ஆளுமைக்கு ஆட்பட்டுள்ளது.
சிகரம் தொடும் வேகம் இருந்தால் வெற்றி நிச்சயம்!

"அறம் செய்ய விரும்பு' என்பது ஒளவை பிராட்டியின் மொழி. "தொழில் செய்ய விரும்பு' என்பதாக மாறியுள்ளது. ஆண்களுக்கு மட்டுமே சொந்தமென கருதப்பட்ட தொழில், தற்போது பெண்களின் ஆளுமைக்கு ஆட்பட்டுள்ளது. இன்று இளம்பெண்கள் தொழில்முனைவோராக உருவெடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் பொறியியல்  பட்டதாரியான கே.மதுமீனாட்சி. இவர், தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதற்கு தொழில் செய்யும் ஆர்வத்தையே அளவு கோளாக கருதி, இன்றைக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை கட்டமைத்திருக்கிறார்.  2008 -ஆ‍ம் ஆண்டு பெங்களூரில் டாட்டா கார்ப் டிராஃபிக் பிரைவேட் நிறுவனத்தை தொடங்கி, 1000 ஊழியர்கள், 10 ஆயிரம் திட்டப்பணிகளுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:

""என் தாத்தா பாலசுந்தரம் தான் வாழ்க்கையின் ஆணிவேர்.  அவரது மகள் எனது அம்மா கிருஷ்ணவேணி. குழந்தை பருவம் தொட்டே தாத்தாவின் நிழலில் தான் வளர்ந்தேன். செம்புக்கழிவுகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தாத்தா, வங்கிக்கு செல்வது, கணக்குகள் மற்றும் ரசீதுகளை எழுதுவது போன்ற வேலைகளுக்கு என்னை ஈடுபடுத்துவார். சின்னவயதிலேயே வங்கி போன்ற வெளியிடங்களுக்கு என்னைத் தனியாகவே அனுப்புவார்.

இது எனக்குள் தைரியத்தையும், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் தூண்டியது. மற்றவர்கள் செய்ய துணியாததை, செய்து முடிக்க வேண்டும் என்ற வேட்கை என்னை தொற்றிக் கொண்டது. 

என் தந்தை  தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வந்தார். தொழில் சூழலிலேயே வளர்ந்து வந்ததால், எப்போதும் தொழில்முனைப்பாற்றல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. 

படிப்பு முடித்தவுடன்  2006-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எனது கனவு நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் (ஜி.இ.) நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்தேன். 2 ஆண்டுகளாக பணி செய்து கொண்டிருந்தபோதும், வேலை செய்வதில் திருப்தியில்லை, "இளம் தலைமுறையினர் வேலை தேடுவதற்கு பதிலாக, வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்' என்ற அப்துல்கலாமின் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்க நிûத்தேன்.  

இந்நிலையில், தாத்தா எனக்கு  செந்தில் மாரியப்பனை  மாப்பிள்ளை பார்த்தார். அவர் அப்போது இங்கிலாந்தில் உள்ள கவுண்டோனஸ் நிறுவனத்தில் தரவு திறனாய்வு பணியில் இருந்து வந்தார். இருவரும் அவ்வப்போது பேசிக் கொள்வோம். அந்த உரையாடல்களில் தொழில் செய்ய வேண்டுமென்ற சிந்தனை இருவருக்கும் இடையே இருந்ததை உணரமுடிந்தது. கவுண்டோனஸ் நிறுவனம், போக்குவரத்து தொடர்பான தகவல்களை திறனாய்வு செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தது. அப்போது இத்தொழில் இந்தியாவில் இல்லாமல் இருந்தது. போக்குவரத்து மற்றும் வாகன நெரிசல் குறித்த தகவல்களை திரட்டி, அதை திறனாய்வு செய்து சம்பந்தப்பட்ட  அரசு அல்லது நிறுவனங்களுக்கு தருவது தான் தொழிலின் அடிப்படை. இது போன்ற தரவுகள், போக்குவரத்து திட்டங்களை வகுக்கும் அரசுகள், மாநகராட்சிகள், போக்குவரத்து நிறுவனங்களுக்கு பேருதவியாக இருக்கும். இத்தொழில் இந்தியாவில் இல்லை என்பதால், அதை தொடங்க வேண்டுமென்று திட்டமிட்டு இருவரும் ஒருவகையில் ஒப்பந்தம் செய்துகொண்டோம். 

இதன்படி, எங்கள் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் நடந்தது. ஆனால், செந்தில் மாரியப்பன் இங்கிலாந்தில் தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். அதனால், இங்கிலாந்தில் இருந்து திரையில் தோன்றி, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

அதுவரை இருவரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டது கூட இல்லை. திருமணத்திற்கு முன்பே டாட்டாகார்ப் பிரைவேட் நிறுவனம் என்ற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்துவிட்டோம். தொழில் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்த செந்தில் மாரியப்பனுக்கு நான் இங்கிருந்தே எல்லா தரவுகளையும் அளித்திருந்தேன். மேலும் நிறுவனத்தின் விளக்க கையேட்டை வடிவமைத்து தயாரித்து அனுப்பிவிட்டேன். அவரும் தான் வேலை செய்துவந்த நிறுவனத்திலும், மற்றொரு நிறுவனமான மோனிசிஸ்ட் நிறுவனத்திலும் தொழில் வாய்ப்பு கேட்டு விளக்க உரைகளை நிகழ்த்தினார். அவர் வழங்கிய தொழில் திட்டம் இருநிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் பிடித்துவிட்டது. 

இதனிடையே 2008-ஆம் ஆண்டு எங்கள் திருமணம் நடந்தது. அன்று ஸ்காட்லாந்தில் இருந்து மோனிசிஸ்ட் நிறுவனத்தின் உயரதிகாரியிடம் இருந்து எங்களுக்கு தொலைபேசி வந்தது. அதில் எங்கள் நிறுவனத்திற்கான முதல் தொழில் ஆர்டரை அளிப்பதாக கூறியது. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்க
வில்லை. திருமணம் நடந்த கையோடு தொழிலில் கவனம் செய்ய தொடங்கிவிட்டோம். 

வாகனங்களின் எண் பலகையை ஒப்பீடு செய்ய வேண்டுமென்பதே எங்களுக்கு கிடைத்த ஆர்டர்.  அதன்படி வாகனங்களின் எண் பலகைகள் பதிவாகியிருக்கும் கேசட் எங்களுக்கு வந்து சேர்ந்தது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் உதவியுடன் கேசட்டை  வி.சி.ஆர் கருவியில் போட்டுப்பார்த்து, தரவுகளை சேகரித்து உடனடியாக அனுப்பி வைத்தோம். 6 மாதம் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தோம் அதுதான் எங்கள் வெற்றியின் அடிப்படையாகும். 

தாத்தாவின் வழிகாட்டுதல், அவரிடம் கற்ற பொறுமை, கடின உழைப்பு தொழில்முன்னேற்றத்திற்கு பாதை அமைத்து தந்தது. மற்றவர்களால் செய்ய முடியாததை செய்து முடிப்பதில் அதிக மகிழ்ச்சி கிடைப்பதை உணர்ந்தேன். பெண்களால் முடியாது என்பதை சவாலாக ஏற்றுக் கொண்டு இரவுபகலாக கடினமாக முயன்றேன். தொழிலில் ஈடுபடும்போது ஏற்படும் ஆரம்பகால இன்னல்கள், சவால்கள், தோல்விகள், கடினமான பாதைகளை கடந்து தற்போது 11-ஆவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறோம்.
குழந்தைகள் பிறந்தபிறகும் தொழில் செய்வதில் எனக்கு இருந்த ஆர்வம் குன்றவில்லை. குழந்தைகளை வளர்த்துக் கொண்டே தொழிலிலும் முழுமையாக கவனம் செலுத்தி வந்துள்ளேன். 

5 பேருடன் தொடங்கிய நிறுவனம் தற்போது 1000 பேருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளதோடு, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், அயர்லாந்து, ஓமன், கஜகஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், அமெரிக்கா, வங்கதேசம், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட  28 நாடுகளில் தொழிலை விரிவுப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களிலும் எங்கள் நிறுவனத்தின் சேவைகளை வழங்க தொடங்கியிருக்கிறோம். இதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

எனவே, எல்லா வகையான தரவுகளையும் ஆய்ந்தறியும் சேவைகளை வழங்கி வருகிறோம்.  உலகின் அனைத்து நாடுகளிலும் நிறுவனத்தின் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். 

தரவுகள் திறனாய்வு தவிர மென்பொருள் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு தொழில்களில் கால் பதித்திருக்கிறோம். தமிழகத்தின் கிராமப்புறங்களில் எங்கள் கிளைகளை அமைத்திருக்கிறோம். அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். பெண்கள் தீட்டாத வைரங்கள். அவற்றை பட்டைத் தீட்டினால் விலை மதிக்க முடியாத ஒளிரும் வைரங்களாக மின்னுவார்கள். பெண்ணாக பிறந்து விட்டோம் என்று வருந்தாமல், உலகின் சிகரம் தொடும் வேகம் காட்டி தொழிலில் ஈடுபட முனைப்புக்காட்ட வேண்டும்'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com