கனவுகளைத் தொலைக்காதீர்கள்!

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் கோவையைச் சேர்ந்த சோனாலி பிரதீப் "திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் - 2019' என்ற பட்டத்தை வென்று
கனவுகளைத் தொலைக்காதீர்கள்!

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் கோவையைச் சேர்ந்த சோனாலி பிரதீப் "திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் - 2019' என்ற பட்டத்தை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சோனாலி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவகியாகவும் செயல்பட்டு வருபவர். மேலும், திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 " நான் அடிப்படையில் குஜராத்தி குடும்பத்தை சேர்ந்தவள். ஆனால், என் தாத்தா காலத்திலேயே கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டதால், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில்தான். கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம். குழந்தைகள் பிறந்தவுடன் என்னுடைய உடல் எடை 95 -தாண்டிவிட்டது. அது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. இனிமேல் என்னால் உடல் எடையை குறைக்க முடியாதோ என நினைத்தேன்.
 அந்த நேரத்தில்தான் என் கல்லூரி தோழிகள் சிலர், கோயம்புத்தூரில் நடைபெற இருந்த திருமதி அழகிப்போட்டி பற்றி எனக்கு கூறினர். நான் கல்லூரி காலத்தில் கல்லூரியில் நடைபெற்ற பல ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுண்டு. அதை நினைவூட்டி, "நீ ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உன் உடல் எடையை குறைத்து இந்த அழகிப் போட்டியில் கலந்து கொள்' என்றனர். அது எனக்குள் ஒரு உத்வேகத்தை தந்தது.
 தீவிர முயற்சி செய்து என் உடல் எடையை குறைத்து, திருமதி அழகிப்போட்டியில் கலந்து கொண்டேன். அதில் வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியின் சுவை என்னை தோற்றிக் கொள்ள, அடுத்தடுத்து மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளையெல்லாம் தேடித்தேடி கலந்து கொண்டேன்.
 2015, 16- ஆம் ஆண்டுகளில் "திருமதி கோவை பட்டத்தையும்', 2017-ஆம் ஆண்டு புணேயில் நடைபெற்ற "திருமதி இந்தியா', "திருமதி தமிழ்நாடு' போன்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றேன்.
 பின்னர், தொடர் உடற் பயிற்சி, ரன்னிங் செய்வது, ஜூம்பா கிளாஸ் செல்வது, உணவு பழக்க வழக்கம் என என்னை எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்வதை தாரக மந்திரமாக கொண்டேன்.
 அதன்விளைவு தற்போது மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பது. எனக்கு "திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் - 2019' என்ற பட்டத்துடன் "பியூட்டி வித் பர்பஸ்' என்ற பட்டமும் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
 இதைத் தவிர, கடந்த 15 ஆண்டுகளாக கல்வி சார்ந்த சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். பெண்கள் பல துறையில் சாதித்து வந்தாலும், இன்னும் வட இந்திய மாநிலங்களிலும், தமிழ்நாட்டின் பல கிராமங்களிலும் பெண் குழந்தைகளுக்கு அடிப்படையான கல்விக் கூட கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த 15 ஆண்டுகளில் அனுபவ பூர்வமாக இதை உணர்ந்திருக்கிறேன். அது என்னை மிகவும் பாதித்தது.
 ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகத்தில் கல்வி ஒன்றுதான் பெண்களை முன்னேற்ற ஒரே வழி என்று நினைக்கிறேன். எனவே, என்னால் முடிந்த வரை பெண்கள் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதுபோன்று பெண் குழந்தைகள் படிப்பதற்கான உதவிகளையும், என்னால் முடிந்த சின்ன சின்ன உபகரணங்களையும் வழங்கி வருகிறேன்.
 மேலும், கோயம்புத்தூர் அருகில் ஆனைக்கட்டி என்ற மலை கிராமத்தில், வாழும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளுக்குச் சென்று இலவசமாக பாடம் சொல்லித் தருவது, திறன் வளர்ச்சி பயிற்சிகள், ஸ்கில் டெவலப்மெண்ட், கம்யூனிகேஷன் ஸ்கில் போன்றவற்றையும் பயிற்சியளித்து வருகிறேன்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. காரணம், என் அம்மாதான். திருமணத்திற்கு பின்பு தனது கனவுகளை எங்களுக்காக உதறிவிட்டு வாழ்ந்தவர் அவர். அவர்தான் எப்போதும் எனக்கு இன்ஸ்பிரஷனாக இருப்பவர்.
 என் அம்மாவைப்போன்று பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு தனது கனவு, லட்சியம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு இயந்திரகதியில் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். குடும்பம், குழந்தைகளை கவனிப்பது மட்டுமே பிரதான பணியாக நினைக்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணம் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் சோம்பேறித்தனமும்தான். அப்படியில்லாமல், திருமணத்திற்கு பின்பும் சாதிக்க முடியும் என்பதை பெண்கள் உணரவேண்டும்.
 அதற்காகவே தற்போது முகநூலில் ஒரு பிளாக் தொடங்கி அதில் திருமணமான பெண்கள் தங்களை எப்படி தன்னம்பிக்கையாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அவர்கள் கனவுகளை நனவாக்க என்னென்ன செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். இதில் தற்போது 14000-க்கும் மேற்பட்ட வர்கள் என்னை பின் தொடருகிறார்கள். மாற்றம் ஒன்று தான் நம்மை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் அதற்கு நானே உதாரணம்'' என்றார்.
 - ஸ்ரீதேவி குமரேசன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com