கர்ப்பகால ஆடை தயாரிப்பில் அசத்தும் பெண்!

பெண்கள் கர்ப்பம் தரித்ததும் சில மாதங்களில் எதிர் கொள்ளும் பிரச்னை உடைகள்தான்.
கர்ப்பகால ஆடை தயாரிப்பில் அசத்தும் பெண்!

பெண்கள் கர்ப்பம் தரித்ததும் சில மாதங்களில் எதிர் கொள்ளும் பிரச்னை உடைகள்தான். சேலை கட்டுபவர்களாக இருந்தால் உடை ஒரு பிரச்னை இல்லை. ஆனால், சுடிதார்... சல்வார், ஜீன்ஸ் அணிபவராக இருந்தால், முன்னர் அணிந்திருந்த உடைகளை அணிய முடியாது. வயிறு பெரிதாக பெரிதாக இந்த உடை பிரச்னை கூடும். அதனால் கர்ப்ப காலங்களில் பெண்கள் அணிய வேண்டிய உடைகளை உருவாக்கத் தொடங்கினார்கள் சிலர். அவர்களில் ஒருவர்தான் ராக்கி கேரா.
 சின்னதாக ஆரம்பித்து இன்று ஆண்டுக்கு சுமார் மூன்றரை கோடி வருமானம் ஈட்டும் அளவுக்கு ராக்கி மாறியுள்ளார். வருமானத்தை நடப்பு ஆண்டில் நாலரை கோடியாக உயர்த்துவதுதான் ராக்கியின் லட்சியம்.
 ஒரு இல்லத்தரசியால் வெற்றிகரமான தொழில்முனைவராக முடியும் என்பதை நிரூபித்திருக்கும் ராக்கி தனது வெற்றிப் பயணம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "சிறு வயதிலிருந்தே விதம் விதமான டிசைன்களில் ஆடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டவள். அத்துடன் ஆடைகளை வடிவமைத்து தயாராக்கவும் வேண்டும் என்று ஆசைப்பட்டவள். ஆனால் வீட்டில் "போயும் போய் டெய்லராக வேண்டுமா' என்று எதிர்ப்பு. அதனால் "வணிகம்' படித்தேன். பிறகு திருமணம். இரண்டு பெண் குழந்தைகள். வீட்டையும் குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்புடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாலும் ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்ற ஆசை என்னைத் துரத்திக் கொண்டேயிருந்தது.
 கணவரிடம் எனது நீண்ட நாள் கனவைச் சொல்ல... "முயற்சி செய்' என்று பச்சைக் கொடி காட்டினார். கர்ப்பமாக இருந்த போது சுடிதார், சல்வார் போட்டுக் கொள்ள நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அந்த உடைகளை எப்படி இருந்தால் கர்ப்பகாலத்தில் பெண்கள் எளிதாக உடுக்க ஏதுவாக இருக்கும் என்று எனக்கு அனுபவ ரீதியாகத் தெரிந்திருந்தது.
 2013-இல் கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்காக ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். அந்த உடைகளை முதலில் தேவையானவர்களுக்கு வாடகைக்கு கொடுக்க ஆரம்பித்தேன். அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் உடைகளை விற்பனை செய்ய ஐந்து லட்சம் முதலீட்டில் வர்த்தகத்தைத் தொடங்கினேன். மேல் நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளையும் எனது தயாரிப்பில் சேர்த்துக் கொண்டேன். கர்ப்ப கால ஆடைகளையும் தயாரித்தேன். எனது உடைகளுக்கு வர்த்தகப் பேராக "அபிதி பெல்லா' என்ற இத்தாலி மொழியின் சொற்களைத் தேர்ந்தெடுத்தேன். "அபிதி பெல்லா' என்றால் இத்தாலிய மொழியில் "அழகிய ஆடைகள்" என்று பொருள்.
 வர்த்தகத்தை விறுவிறுப்பாக்க இணையதள வர்த்தகம் தான் சரி' என்று தீர்மானித்து இணையதள விற்பனை மையமான "ஃப்ளிப் கார்ட்டில்' ஆடைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு உருவானது. அந்த உற்சாகத்தில் பிரசவ கால உடைகளை மட்டும் தயாரித்து விற்பதற்காக "மைன்4நைன்' என்ற பெயரில் உடைகளைத் தயாரித்து "மிந்த்ரா' இணையதள விற்பனை மையம் மூலம் விற்பானையை ஆரம்பித்தேன்.
 துணிகளின் தரத்திலும் வடிவமைப்பிலும் மிகவும் கவனமாக இருப்பதால், வெகு விரைவில் எனது பிராண்டுகளுக்கு நுகர்வோர் மத்தியில் மதிப்பு கூடியது. "லைம்ரோட்' இணையதள விற்பனைக்காக "கலர் பிளாக்' என்ற பிராண்டின் கீழ் உடைகளையும் அறிமுகம் செய்தேன். இந்த மூன்று பிராண்டுகளில் வெளிவரும் ஆடைகள் ஆன்லைனில் கிடைக்கும் என்றாலும் "மிந்த்ரா' மூலம்தான் எனக்கு அதிகப்படியான ஆர்டர்கள் வருகின்றன.

 வடிவமைப்பில் நாங்கள் காலத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். அதனால் நுகர்வோர் மத்தியில் எங்கள் ஆடைகளுக்கு மவுசு குறையவில்லை. எனக்கு ஆடை வடிவமைப்பு தயாரிப்பில் அனுபவம் இல்லாதிருந்தாலும் என்னிடம் லட்சியம் இருந்ததால் அதை நனவாக்க தேவையான உதவிகள் செய்து வழிகாட்டி உதவியது வால்மார்ட்'' என்கிறார் ராக்கி.
 - கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com