சமையல்! சமையல்! (20/11/2019)

மிக்ஸ்ட் சிறுதானிய ஃபிரைடு ரைஸ், சௌசௌ பனீர் மசாலா, ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை, முள்ளங்கி புட்டு  

மிக்ஸ்ட் சிறுதானிய ஃபிரைடு ரைஸ்

 தேவையானவை:
தினை அரிசி, சாமை அரிசி - கால் கிலோ
கேரட் - 50 கிராம்
தக்காளி - 2
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கிராம்பு - 6
ஏலக்காய் - 5
நெய் - 50 கிராம்
பச்சைப் பட்டாணி - சிறிது அளவு
முந்திரி பருப்பு - 8
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: இரண்டு அரிசிகளையும் ஒன்றாகக் கலந்து, போதுமான அளவு நீர் சேர்த்து நன்கு உதிரியாக வடித்து வைக்கவும். கேரட்டை மெல்லியதாக துருவிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைப்பட்டாணியை அவித்து வைக்கவும். முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக ஒடித்து சிறிது நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு பட்டை - கிராம்பு, சோம்பு, ஏலக்காய் வறுத்துக் கொள்ளவும். பின்னர் கேரட், தக்காளி, வேக வைத்தப் பச்சைப்பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அத்துடன் வடித்த சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு , வறுத்த முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மிக்ஸ்ட் சிறுதானிய ஃபிரைடு ரைஸ் தயார்.

சௌசௌ பனீர் மசாலா 

தேவையானவை:
சௌசௌ - 300 கிராம்
பனீர் - 100 கிராம்
தக்காளி - 3
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - 4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு 
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லி - கொஞ்சம்
செய்முறை: சௌசௌகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கிலும் , பனீரை சிறு துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். சௌசௌவுடன் போதிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் தக்காளி, வெங்காயம், பனீர், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறி நன்கு வேக விடவும். தண்ணீர் முழுவதும் வற்றி, மசாலா கலவை நன்கு சுருண்டு கமகம வாசம் வந்ததும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து மசாலா கலவையுடன் சேர்த்து கிளறி கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான சௌசௌ பனீர் மசாலா தயார். 
- ராதிகா அழகப்பன்

முள்ளங்கி புட்டு 

தேவையானவை:
முள்ளங்கி - கால் கிலோ
பொட்டுக் கடலை - அரை கிண்ணம்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்கவும். அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து கிளறி குறைந்த தணலில் மூடி நன்கு வேகவிடவும். முள்ளங்கி வெந்ததும், பொடித்த பொட்டுக் கடலை , சோம்பு, நறுக்கிய கொத்துமல்லித் தழை தூவி கிளறி இறக்கவும். 

ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை 

தேவையானவை:
வெண்டைக்காய் - 20
மசாலாவிற்கு:
கடலை மாவு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், 
மாங்காய் தூள், சீரகப் பொடி,
கரம் மசாலா, மஞ்சள் தூள், - 1 கிண்ணம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது எண்ணெய் விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வெண்டைக்காயின் முனைகளை நீக்கிவிட்டு, நீள வாக்கில் இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெண்டைகாயின் உள்ளே கலந்து வைத்துள்ள மசாலா கலவையைக் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெண்டைக்காயை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். பின்னர் மூடியைத் திறந்து, நன்கு மொறுமொறுவென்று வரும் வரை கிளறி இறக்கினால், ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை ரெடி.
- மஹதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com