சாக்ஸோபோன் இசைக்கும் பெண் கலைஞர்!

இந்தியாவில் சாக்ஸோபோன் இசைக்கருவியை இசைக்கும் ஒரு சில பெண் கலைஞர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, 13 வயதிலேயே
சாக்ஸோபோன் இசைக்கும் பெண் கலைஞர்!

இந்தியாவில் சாக்ஸோபோன் இசைக்கருவியை இசைக்கும் ஒரு சில பெண் கலைஞர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, 13 வயதிலேயே பிரபல சாக்ஸோபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத்திடம் பயிற்சிப் பெற்றவராவர். அப்போது அவரிடம் பயிற்சிப் பெற்றுக் கொண்டிருந்த எட்டு ஆண்களுடன் இவர் ஒருவர்தான் பெண். தொடக்கத்தில் இவருக்கு சப்த ஸ்வரங்களை பயிற்றுவிக்கும்போது, சுப்புலட்சுமியால் சாக்ஸோபோன் இசைக்க முடியுமா? என்று கத்ரி கோபால்நாத் சந்தேகப்பட்டாராம். ஒருமணி நேர பயிற்சிக்குப் பிறகு இவரது ஆர்வத்தை கண்ட கத்ரி, இவரால் நன்கு பயிற்சி பெற முடியுமென்ற முடிவுக்கு வந்து பயிற்சியளிக்கத் தொடங்கினாராம். இன்று சாக்ஸோபோன் சுப்புலட்சுமி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 சாக்ஸோபோன் வாசிப்புக்கும், வாசிப்பவர் நுரையீரலுக்கும் சம்பந்தம் உண்டு என்பதால் இசை பயிற்சி பெறுபவர்கள் மிகவும் குறைவு. மேலும் இந்த இசைக்கருவியின் விலையும் அதிகம். சுப்புலட்சுமி வாங்கிய முதல் சாக்ஸோபோன் விலை ரூ. 12,500 ஆகும். இவர் பயிற்சிப் பெற்றவுடன் நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பு கேட்டு இவரது தந்தை சுமார் நூறு கடிதங்களுக்கு மேல் கோயில் மற்றும் சபாகளுக்கு அனுப்பியபோது ஒரு சிலரே வாய்ப்பளிக்க முன் வந்துள்ளனர்.
 ஒரு பெண்ணால் சாக்ஸோபோன் இசைக்க முடியுமா? என்ற சந்தேகம்தான் தயக்கத்திற்கு காரணம், ஆனால் இன்று மூன்றரை கிலோ எடையுள்ள இசைக்கருவியை சுமந்தபடி இரண்டரை மணி நேரம் இவர் நிகழ்ச்சியை நடத்துவது பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.
 வாசிப்பது மேல்நாட்டு இசைக்கருவியாக இருந்தாலும், பாரம்பரிய கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பதோடு மட்டுமல்ல. இந்திய கலாசாரப்படி பட்டுப்புடவை உடுத்தி, பாரம்பரிய நகைகளை அணிந்து நிகழ்ச்சிகளை நடத்தவே சுப்புலட்சுமி விரும்புகிறார். கர்நாடக இசையை வாசிக்கத் தொடங்கி மேற்கத்திய இசையுடன் கலந்து இறுதியில் நடனமாடக் கூடிய பாடல்களை வாசித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். கூடவே இந்த மேல் நாட்டு இசைக்கருவி எப்படி இந்தியாவுக்கு வந்தது? மற்ற இந்திய இசைக்கருவிகளுடன் எப்படி ஒன்றிணைந்தது என்பது போன்ற குறிப்புகளையும் ரசிகர்களிடம் வெளிப்படுத்துகிறார்.
 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு சுப்புலட்சுமியின் கணவர் கிரண்குமார் பேருதவியாக இருக்கிறார். தகவல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிரண்குமாருக்கு, வார இறுதி நாட்களில் விடுமுறை கிடைத்து வந்ததால், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வசதியாக இருந்தது. வாய்ப்புகள் அதிகரிக்கவே கிரண்குமார் வேலையை விட்டுவிட்டாராம்.
 சுப்புலட்சுமி கர்ப்பமுற்றிருந்தபோது சாக்ஸோபோன் வாசிப்பதை விட்டுவிடும்படி பலர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் விடவில்லை. தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்தினம் கூட நிகழ்ச்சியை நடத்திய இவர், பிரசவமானவுடன் பதினைந்து நாட்களுக்குள் மீண்டும் நிகழ்ச்சிகளை நடத்த ஒப்புக் கொண்டாராம்.
 "கடந்த பத்தாண்டுகளில் சாக்ஸோபோன் மட்டுமின்றி பலமேல்நாட்டு இசைக்கருவிகளை திறமையாக வாசிக்கும் இசைக் கலைஞர்கள் உருவாகியுள்ளனர். சாக்ஸோபோன் இசைக்கும் பெண்களும் உருவாக வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை'' என்கிறார் சுப்புலட்சுமி.
 - பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com