Enable Javscript for better performance
குழந்தைகளுக்கு இதிகாசங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்!- Dinamani

சுடச்சுட

  

  குழந்தைகளுக்கு இதிகாசங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்!

  By DIN  |   Published on : 27th November 2019 02:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SPR

  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு ஒரு சிறப்பு உண்டு. தங்களது பள்ளி மாணவ, மாணவியரைக் கொண்டு இதிகாசத்திலுள்ள முக்கிய கதாபாத்திரங்களை நாடகமாக்கி கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ராஜா முத்தையா செட்டியார் வளாகத்தில் "துரோணாச்சார்யா' என்கிற நாடகத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்தியது.
  தெய்வத்திற்கு முதல் நிலையில் வைத்துக் கருதப்படுபவர் குரு. தெய்வமே முடி தாழ்ந்து, அடி பணிந்து வணங்கும் நிலையில் உள்ளவர் குரு. அப்படி எக்காலத்திலும் ஒப்பற்ற குருவாக விளங்கியவர்தான் நாடகத்தின் கருவாகத் திகழும் துரோணாச்சார்யா. அறம் சார்ந்த வீரம் கூட மறம் சாரும் போது மண்ணுக்கு இரையாகிவிடுகிறது என்ற தத்துவத்திற்கு சான்றானவர் துரோணாச்சார்யா.
  துரோணாச்சார்யாரின் பால பருவம் முதல் மகாபாரதத்தின் நாயகர்களான பஞ்சபாண்டவர்களுக்கும், அவர்களின் எதிரியான துரியோதனனுக்கும் ஒப்பற்ற குருவாக விளங்கியதுவரை கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. கதையின் நாயகனான துரோணர், பஞ்ச பாண்டவர்கள், துருபதா, துரியோதனா, அஸ்வத்மா என கதையின் முக்கிய கதாபாத்திரங்களின் ஒவ்வொரு நிலையிலும் நடித்த அனைத்து மாணவர்களும் அற்புதமாக தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை பூர்த்தி செய்திருந்தனர்.
  ஒரு காட்சியில் பஞ்சபாண்டவர்களுக்கும், துருபதனுக்கும் சண்டை மூள்கிறது. அந்த காட்சிகளில் நடித்த ஒவ்வொருவரும் தத்ரூபமாக சண்டையை நிகழ்த்தி, கூடியிருந்த கூட்டத்தின் அப்ளாûஸ அள்ளினர். நாடகம் தொடங்கியது முதல் இறுதிகாட்சிவரை ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்புடனே நகர்கிறது. ஒரு நொடிப்பொழுது பிசகினாலும், தங்களது வசனம் கடந்துவிடும் என்ற நிலையில், மிக கவனமாகவும், நேர்த்தியாகவும் கதையின் மாந்தர்கள் ஒவ்வொருவரும்.. திருதராஷ்டிரன், கண்களைக் கட்டிக் கொண்டு வந்த காந்தாரி, குருதட்சிணையாக தனது கட்டை விரலைத் தந்த ஏகலைவன், குந்தி, திரௌபதி, துருபதன் என யாரைவிடுவது, யாரைச் சொல்வது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல என போட்டிபோட்டு நடித்தனர்.

  ஒரு சிறிய மேடையில், கிடைத்த இடத்தைக் கொண்டு மலையையும், வனத்தையும், குடில்களையும் அமைத்து அரங்கத்தை அலங்கரித்த விதம் மீன் குஞ்சுக்கு நீத்த கற்றுத்தரத் தேவையில்லை என்பது போன்று இருந்தது கலை இயக்குநர் தோட்டா தரணியின் வழிகாட்டுதலில் அவரது மகள் தோட்டா ரோகினியின் அரங்க வடிவமைப்பு.
  எந்தவொரு நாடகமும் கூட்டு முயற்சியால்தான் உருவாக்கப்படுகிறது, பெருமைப்படுகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. அவ்வகையில் துரோணாச்சார்யாவின் வெற்றிக்கு துணைநின்ற இயக்குநர் ஜெயக்குமார் இயக்க, நடிகர் குமரவேல், தீபிகா குமரவேல் இவர்களின் வசனம் உயிருட்ட, தோட்டாதரணியின் அரங்க அமைப்புக்கு ஏற்ப காட்சிக்கு ஏற்றவாறு இசையமைத்த பால் ஜேக்கப், அரங்கினை ஒளி அமைப்பால் மேலும் அழகுப்படுத்திய லாரன்ஸ் ஆகியோரின் ஒருகிணைப்பும், ஒத்திசைவும் பார்வையாளர்களை இறுதிவரை கட்டிப் போட்டது.
  பள்ளி முதல்வர் அமுதலட்சுமி பகிர்ந்து கொண்டவை:
  "இந்த இதிகாச நாடகங்கள் எங்களது கரஸ்பாண்டன்ட் குமாரராணி மீனா முத்தையாவின் கனவு என்று சொல்லலாம்.

  அந்த காலத்தில் தாத்தா, பாட்டி வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ராமாயணக்கதை, மகாபாரதக் கதை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் தற்போது உள்ள குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம் தெரிவதில்லை. சொல்லி கொடுப்பதற்கு ஆளுமில்லை. அதனால்தான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எங்களது கரஸ்பாண்டன்ட் குமாரராணி மீனா முத்தையா வளரும் குழந்தைகளுக்கு இதுபோன்ற, இதிகாசங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், கலையின் மீது உள்ள ஆர்வத்தினாலும் தனது மாணவச் செல்வங்கள் இத்தகைய கலை ஆற்றல்களை வெளிப்படுத்த வழிவகுத்து தர வேண்டும் என்றும் தொடங்கி நடத்தி வருகிறார்.
  எங்களது முந்தைய படைப்புகளான கர்ணன், வாலி வதம், பீஷ்மர், லங்கேஷ்வர ராவணா, குருஷேத்ரா, ரகுவம்சம், கிருஷ்ணா, சுந்தர காண்டம், சக்ரவியூகா, ஹனுமான், கடோத்கஜன், ஹிரண்ய சகோதரர்கள், பரசுராமன் போன்ற நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து. தற்போது "துரோணாச்சார்யாவை' அரங்கேற்றியுள்ளோம். சுமார் 100 மாணவர்களின் ஆறுமாத உழைப்பு இன்று உயிர் பெற்றிருக்கிறது'' என்றார்.
  - ஸ்ரீதேவி குமரேசன்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai