உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள்!

அண்மையில் ரஷியாவில் நடந்த 2019-ஆம் ஆண்டு உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் மட்டுமின்றி
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள்!

அண்மையில் ரஷியாவில் நடந்த 2019-ஆம் ஆண்டு உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் மட்டுமின்றி, மேலும் மஞ்சுராணி (19) ஜமுனா போரோ(22) மற்றும் லவ்லினா போர்கோஹைப்(22) ஆகிய இந்திய வீராங்கனைகளும் பங்கேற்றதோடு, ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என நான்கு பதக்கங்களை பெற்றிருப்பது இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் புதிய உற்சாகத்தையும், எதிர் பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேரிகோமிற்கு பிறகு யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்திருப்பதாகவே அனைத்திந்திய பாக்ஸிங் அசோசியேஷன் கருதுகிறது:
 கடந்த இருபதாண்டுகளில் ஆறுமுறை உலக சாம்பியன் விருது பெற்று இந்திய மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் 36 வயதாகும் மேரிகோம், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்தாலும், இவருக்குப் பின் யார்? என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்கு விடையளிக்கும் வகையில் சில இளம்பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹரியானாவைச் சேர்ந்த மஞ்சுராணி, லைட் பளை வெயிட் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றபோது, தங்கம் பெற தவறியது பற்றி பெரிதும் வருத்தமடைந்தார். இருந்தாலும் முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றவுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றதை அதிர்ஷ்டமாக கருதுகிறார்.
 2010-ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் ஹவில்தாராக பணியாற்றி வந்த மஞ்சுராணியின் தந்தை பீம்சென் சர்மா, உடல்நலக் குறைவினால் காலமானபோது, அவரது வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது மனைவி ஈஸ்வந்தி தேவி, அடுத்து தன் ஐந்து குழந்தைகளையும் எப்படி காப்பாற்றுவது என்று கவலைப்பட்டார். இருப்பினும் தன் கணவரின் ஓய்வூதியமாக மாதந்தோறும் கிடைத்து வந்த 9 ஆயிரம் ரூபாயை வைத்தும், குழந்தைகளை படிக்க வைக்க சிறிய அளவில் அழகு சாதனங்கள் விற்பனை கடையொன்றையும் துவக்கினார். ஆனாலும் செலவை முழுமையாக சமாளிக்க முடியவில்லை. அப்போதுதான் மஞ்சுராணி தனக்கு குத்துச்சண்டை பயிற்சி பெறுவதில் ஆர்வமிருப்பதாக தன் அம்மாவிடம் கூறினார். அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கவும், சத்தான உணவளிக்கவும் சிரமமாக இருந்தாலும், கடன்வாங்கி மஞ்சுராணியின் விருப்பப்படி பயிற்சிப் பெற அனுமதித்தார்.
 அந்த சமயத்தில் மஞ்சுராணி தந்தையின் நண்பரான சாகேப் என்பவர், மஞ்சுராணிக்கு தேவையான உதவிகளை செய்யவும், பண உதவியளிக்கவும் முன்வந்தார். பத்து மாதங்களுக்குள் குத்துச்சண்டையில் தேர்ச்சிப் பெற்றதோடு, பஞ்சாப் மாநிலம் சார்பான போட்டிகளில் கலந்து கொண்ட மஞ்சுராணி 2013- முதல் 2018 வரை ஏராளமான பதக்கங்களைப் பெற்றார்.
 கடந்த ஆண்டு சீனியர் நேஷனல் பிரிவில் தங்கம் பெற்ற பின்னரே மஞ்சுராணியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. தேசிய அளவில் அவருக்கு கிடைத்த விருது, ரஷியாவில் நடந்த உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பி வைத்தது. அவரது அம்மாவின் நம்பிக்கையும் ஆதரவும் வீண்போகவில்லை. மஞ்சுராணியின் கிராமமே அவரை கொண்டாடி மகிழ்கிறது. 2024 -ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் தகுதி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மஞ்சுராணி.
 இவரைப் போன்றே மேலும் இரண்டு குத்துச்சண்டை வீராங்கனைகள் இப்போது சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முன் வந்துள்ளனர். இவர்கள் பெற்ற வெண்கலப் பதக்கம் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 2001-ஆம் ஆண்டு மேரிகோம் முதன்முதலாக உலக அளவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றபோது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த லவ்லினா போர்கோஹைய் மற்றும் ஜமுனா போரோ ஆகிய இருவரும் மேரிகோம் குத்துச்சண்டையை பார்த்து ரசித்ததோடு தாங்களும் குத்துச்சண்டை பயிற்சி பெற வேண்டுமென்று தீர்மானித்தார்களாம். அவர்களது கனவு வீண் போகவில்லை. மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஜமுனா, பான்டம் வெயிட் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார். "எங்களுடைய முன்னுதாரணமே மேரிகோம்தான். ஒருவேளை அவர் இந்த போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றால் இந்தியாவுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. அவரைப் போலவே மேலும் பல வீராங்கனைகள் தோன்றுவார்கள். ஏற்கெனவே நாங்கள் குத்துச்சண்டையில் அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட தயாராகிவிட்டோம். மேரிகோம் சாதனையை நிச்சயம் தொடர்வோம்'' என்கிறார் ஜமுனா.
 அண்மையில் நடந்த போட்டியில் மேரிகோம், லவ்லினா ஆகிய இருவரும் நூலிழையில் வெற்றியை தவறவிட்டாலும், வெண்கலப் பதக்கம் பெற்றது ஆறுதலான விஷயம் என்றே "பாக்ஸிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா' கருதுகிறது. "இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் அதிக அளவில் இடம் பெற்றாலும், இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த போட்டிகள் மூலம் கற்றுக் கொண்டோம். நடந்ததையே நினைத்துக் கொண்டிருப்பதை விட அடுத்து வரும் போட்டிகளில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்'' என்கிறார் லவ்லினா.
 மேரிகோமை பொருத்தவரை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இம்முறை வெண்கலப் பதக்கம் பெற்றது அவரது எட்டாவது பதக்கமாகும். ஆணாகட்டும் பெண்ணாகட்டும் குத்துச் சண்டை போட்டியைப் பொருத்தவரை அவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவே விளங்குகிறார். போட்டிகளிலிருந்து விலக அவர் தயாராக இல்லை.
 ""தொடர்ந்து வெற்றிப் பெற்றுவரும்போது எதற்காக போட்டிகளிலிருந்து நான் விலக வேண்டும் என்று கேட்டாலும், இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுக்கும் பொறுப்பை தொடர்ந்து என்னால் ஏற்க முடியுமா? என்பது சந்தேகம்தான். பல இளம் பெண்கள் குத்துச்சண்டை பயிற்சிப் பெற்று களத்தில் இறங்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதுதான் சரியான தருணம். முயற்சி செய்தால் முடியாதது ஏதுமில்லை. அவர்களாலும் பதக்கங்கள் பெற முடியும். பதக்கங்கள் கிடைக்காவிட்டாலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இதுவரை நான் மட்டுமே இந்தியாவில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றிருப்பது போல், எதிர்காலத்தில் மேலும் பல இந்தியப் பெண்களால் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற முடியும். அதற்கான திறமையும், முயற்சியும் நம் இந்தியப் பெண்களிடம் இருக்கிறது'' என்கிறார் மேரிகோம்.


 -அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com