வாழைநாரின் புது வடிவம்! 

வாழை மரங்கள் அதிகமாகப் பயிரிடப்படும் இந்திய நாட்டில் தென்னகத்தில்தான் வாழைப் பழங்களை சாப்பிடுவதுடன், வாழை இலைகளில் உணவு உண்பதும்,
வாழைநாரின் புது வடிவம்! 

வாழை மரங்கள் அதிகமாகப் பயிரிடப்படும் இந்திய நாட்டில் தென்னகத்தில்தான் வாழைப் பழங்களை சாப்பிடுவதுடன், வாழை இலைகளில் உணவு உண்பதும், வாழை நாரை பூ பின்னவும், உலர்ந்த வாழை மட்டைகளை உணவு சாப்பிடும் தட்டுகள், கிண்ணங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இப்போது இன்னொரு பயன்பாட்டிற்கும் வாழை நார் உதவுகிறது. 
ஆம்..! வாழை நாரில் இருந்து பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் (sanitary pads) தயாரிக்கலாம் என்று டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் இருவர் கண்டு பிடித்துள்ளனர். சமீப காலமாக சானிடரி நாப்கின்களுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டதால், நாப்கினின் விலை அதிகமாகியது. இந்த விலையேற்றம் பெண்களைப் பொருத்தவரையில் சுமைமேல் சுமையாக மாறிவிட்டது. ஏனென்றால் ஒரு பெண் தனது பருவத்தில் சுமார் எட்டாயிரத்து நானூறு நாப்கின்களைப் பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து இந்தியப் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களின் எண்ணிக்கை பல நூறு கோடிகளாகும். கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும் ஒரு அத்தியாவசிய சந்தைப் பொருள்தான் நாப்கின்கள். 

சானிடரி நாப்கின்களை அதிக விலை கொடுத்து வாங்க வசதியில்லாத பெண்கள் இந்தியாவில் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். பலர் நாப்கின்களின் அதிக விலை காரணமாக பழைய முறைகளை பின்பற்றி பல ஒவ்வாமைகளுக்கும், நோய்க்கும் ஆளாகின்றனர். ஏழை மாணவிகள் "அந்த நாட்களில்' பள்ளிக்குப் போவதில்லை. நாப்கின் வாங்க வசதியில்லாததுதான் காரணம். இந்த சூழ்நிலையில் இயற்கையாகக் கிடைக்கும் வாழை நாரில் வேறு எந்த செயற்கை, ரசாயனப் பொருள்களையும் சேர்க்காமல், பக்கவிளைவுகள் வராதபடி உறுதி செய்து நாப்கின்களைத் தயாரித்துக் காட்டியுள்ளனர் டில்லி ஐஐடி மாணவர்களான ஹாரி சேராவத் - அர்ச்சித் அகர்வால், ஹாரி சேராவத் - அர்ச்சித் அகர்வால் தயாரித்திருக்கும் வாழை நார் நாப்கின்களின் சிறப்பு என்னவென்றால் இதை 120 முறை பயன்படுத்தலாம் என்பதுதான். இதனால் நாப்கின்கள் வாங்கும் தொகை கணிசமாக மிஞ்சும். செலவு குறையும். பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்படும் நாப்கின்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும் என்பதால் சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படும். எரிக்கப்படும் நாப்கின்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் காற்றில் கலக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையும் குறையும். இப்படி தொடர் நன்மைகள் உள்ளன. 
டில்லி ஐஐடி பேராசிரியர்கள், நாப்கின் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களின் வழிகாட்டல், மேற்பார்வையில் "சான்ஃபே' நிறுவனம் வாழை நார் நாப்கின்களைத் தயாரித்து வருகிறது. காப்புரிமை கிடைத்ததும் வாழை நார் நாப்கின்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும். தற்சமயம் ஆன்லைனில் விற்பனையாகும் வாழை நார் நாப்கின்கள் ஒரு வரப்பிரசாதம்தான். இரண்டு வாழை நார் நாப்கின்களின் விலை ரூ 199 தான்.

இந்தியாவில் வாழை மற்றும் மூங்கில் நாரில் தயாரிக்கப்படும் சானிட்டரி பேட்களும் உள்ளன. "ஸாத்தி' என்ற பெயரில் தயாராகும் இந்த பேட்கள் ஒருமுறை பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படுபவை. ஒரு பேட் விலை ரூ. 20 ஆகும். ஹார்வார்டு பல்கலைக்கழகம் நடத்திய "தொழில் சிந்தனை போட்டி'யில் பரிசு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த அம்ரிதா சைகல் தனது தோழிகளுடன் சேர்ந்து இந்த இயற்கை நார் பேடுகளைத் தயாரித்து வருகிறார்.
- அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com