Enable Javscript for better performance
தனிமனிதன் நினைத்தால் மட்டுமே மாற்றம் வரும்!- Dinamani

சுடச்சுட

  
  plastic

  பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதில் மத்திய }மாநில அரசுகள் தீவிரமாக இருக்கின்றன. ஆனாலும் தனிமனித விழிப்புணர்வு இருந்தால்தான் இது சாத்தியமாகும் அத்தகைய விழிப்புணர்வை சென்னையை சேர்ந்த அருள்பிரியா, "நம்மபூமி' வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்தையும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை எப்படி குறைக்கலாம் என்பது குறித்தும் விளக்கி வருகிறார் கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரை சந்தித்தோம்:
   "என்னுடைய சொந்த ஊர் உடுமலை. தற்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டோம். எட்டு ஆண்டுகள் எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளேன். தற்போது பணியில் இல்லை. வீட்டிலிருந்தபடியே ஏதாவது செய்யலாம் என்று நினைத்திருந்தேன். அந்தசமயத்தில், எப்போதும் போன்று எங்கள் வீட்டில் பயன்படுத்திய காய்கறி, பழங்களின் கழிவுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு, குப்பைத் தொட்டியில் போடுவதற்கு எடுத்து சென்றபோதுதான் இதை வீணாக்காமல், ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது. அந்தத் தேடலில் எனக்கு கிடைத்தது கம்போஸ்டிங் உரம் தயாரிப்பு.
   வேலூரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் நீண்ட காலமாக காய்கறி கழிவுகளில் இருந்து கம்போஸ்டிங் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிந்து அவரை சந்தித்தேன். அவர் திரட்டி வைத்திருந்த நிறைய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. குப்பைத் தொட்டிகளில் உள்ள எல்லா பொருளுமே வீணாகக் கூடிய பொருள் அல்ல. குப்பையிலும், வளங்கள் நிறைந்திருக்கிறது என்று புரியவைத்தார்.
   அவர் சொன்னதை, முதலில் என் அப்பார்ட்மெண்டில் உள்ள பெண்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்களும் புரிந்து கொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். எல்லாருடைய வீட்டில் இருக்கும் காய்கறி மற்றும் பழக்கழிவுகளை சேகரித்தேன். சேகரித்து அப்படியே வைக்க முடியாது. அதை உரமாக மாற்றணும். அதற்கு கம்பா என்ற மண் தொட்டி உள்ளது. அதை வாங்கி அதில் இந்த கழிவுகளைப் போட ஆரம்பிச்சோம். இது மூன்று அடுக்கு தொட்டி என்றாலும், அதை குடியிருப்பில் வைத்தால், துர்நாற்றம் வீசுமே என்று சிலர் எதிர்த்தனர்.
   இதனையடுத்து நான் வசித்து வந்த எம்.ஆர்.சி நகரில் ஓ.எஸ்.ஆர் கிரவுண்டில் இதை அமைக்க திட்டமிட்டோம். இது பொது இடம் என்பதால், மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி கேட்டேன். அவர்களோ, அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வரச்சொன்னார்கள். அதில் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. அந்த சமயத்தில்தான் மாநகராட்சியின் கமிஷனராக இருந்த விக்ரம் கபூர், எங்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, நாங்கள் வசிக்கும் இடத்தை மாடல் நகரமாக மாற்ற சொன்னார். அதோடு நில்லாமல் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகளை பிரிக்க 250 குப்பைத் தொட்டிகளும் கொடுத்தார்.
   குப்பைகள் குறித்து மேலும், பல தகவல்களை தந்தார். நாம் குப்பைகளை பிளாஸ்டிக் கவரில் வைத்துத்தான் தூக்கிப் போடுகிறோம். அதில் காய்கறி கழிவுகள் முதல் பால் கவர், சானிட்டரி நாப்கின் வரை எல்லாமே ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் குப்பையில் இருக்கும் கழிவுகளில் எது உணவு, எது பிளாஸ்டிக் என்பது மாட்டுக்கு தெரியாது. உணவுக் கழிவுகள் இருக்கும் பிளாஸ்டிக் கவரோடு சேர்த்து சாப்பிடும் போது அது அவற்றின் வயிற்றில் அப்படியே தங்கிவிடும். விளைவு அது மாடுகளின் மரணத்துக்கு காரணமாகிவிடும்.
   ஒரு வீட்டில் ஒரு கிலோ குப்பை என்றால், ஒவ்வொரு குப்பை கிடங்கிலும் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்குப் போடுங்கள். இப்படி கொட்டப்படும் குப்பைகளில் இருந்து லீச்சட் என்கிற தண்ணீர் வெளியேறும். அது நிலத்தினுள் போகும் போது நிலத்தடி நீர் பாதிக்கிறது.
   குப்பைகளை தீயிலிட்டு எரிக்கும் போதும் காற்று மாசடைகிறது. ஆய்வு ஒன்றில், குப்பைக் கிடங்குக்கு அருகில் வசிக்கும் பெண்களுக்கு கரு உருவாகுவதில்லை என்கிறது. அந்த அளவிற்குப் பிரச்னை உள்ளது. நிலத்தைத் தான் இப்படி சீரழித்திருக்கிறோம் என்றால், கடலையும் விட்டு வைக்கவில்லை. இந்திய பெருங்கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து ஒரு தீவுபோன்று உருவாகிவுள்ளது. இதை சாப்பிடும் கடல் உயிரினங்கள் இறக்கவும் நேரிடுகிறது. இளநீர், ஜூஸ் போன்றவற்றில் பயன்படுத்தும் ஸ்ட்ராக்கள் கடலில் வாழும், ஆமை போன்ற உயரினங்களின் மூச்சு துவாரத்தில் சென்று சிக்கி அது உயிரிழக்க நேரிடுகிறது இப்படி பல தகவல்களை புகைப்பட ஆதாரங்களோடு காண்பித்தார். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை முயற்சிக்கலாமே என்று யோசித்தேன்.
   அந்த சமயத்தில், என் அப்பார்ட்மெண்டில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் தெர்மாகோல் தட்டுகளை பயன்படுத்துவது வழக்கம். பெட்ரோலியம் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இத்தட்டுகளில் சூடான உணவுகள் வைத்தால் உடனே ரியாக்ட் ஆகும். இது ஆயிரம் வருடம் ஆனாலும் மக்காது. இதற்கு மாற்று பாக்கு மட்டை மற்றும் கரும்பு சக்கை தட்டுகள் உள்ளன. ஆனால் என்னதான் நாம் மாற்று கண்டுபிடித்தாலும், விலை காரணமாக மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. அதை அவர்களுக்கு புரியும்படி சொல்ல ஆரம்பித்தேன் அது தான் "நம்ம பூமி' உருவாக காரணம்.
   இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் யார் காரணம்? நாம் தான். அதற்கான தீர்வும் நாம் தான் செய்ய வேண்டும். எனவே, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரிக்க ஆரம்பித்தேன்.
   மக்கும் குப்பை: இயற்கையிலிருந்து என்னென்ன பொருட்கள் எல்லாம் வருகிறதோ, அதை இயற்கையே திரும்பி எடுத்துக் கொள்ளும். அதுதான் மக்கும் குப்பை. காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள்.
   மக்காத குப்பை: பிளாஸ்டிக், அலுமினியம், மனித கழிவுகள் : சானிட்டரி நாப்கின், முடி, நகம்.
   இந்த ஒவ்வொரு குப்பைகளுக்கும் தனிப்பட்ட தீர்வு உண்டு. மக்கும் குப்பையை கம்போஸ்டிங் என்பதன் மூலம் உரமாக்கலாம். ஹோம் கம்போஸ்டிங் முறையில் வீட்டிலேயே வீணான காய்கறி கழிவுகளை வைத்து உரமாக்க முடியும். அதற்கான கம்போஸ்டிங் பொருளை நாங்க தயார் செய்து விற்கிறோம். அதன்விலை 2,200 ரூபாய். ஒரு முறை இதை வாங்கினால் குறைந்தது 15 ஆண்டுகள் வரை உபயோகிக்க முடியும். இதன்மூலம் வீட்டில் சேரும் கழிவுகளில் 60% கழிவுகள் உரமாக மாறும்.
   பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பலாம். பால் கவர் மற்றும் இன்று பல பொருட்களை பிளாஸ்டிக்கிலேயே பேக் செய்து வாங்குகிறோம். பிளாஸ்டிக் மட்டும் தனியாக பிரித்து பேப்பர் காரர்களுக்கு, ஏஜென்சிக்கு, ஏன் குப்பைத் தொட்டிகளில் பேப்பர் பொறுக்குபவர்களுக்குக் கூட போடலாம். ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
   அடுத்து, சானிட்டரி கழிவு. அதையே கொஞ்சம் மாற்றம் செய்து துணியினால் ஆன சானிட்டரி பேட் கொண்டு வந்திருக்கிறோம். மென்ஸ்சுரேஷனல் கப். இதை ஒரு முறை வாங்கினால் பத்தாண்டுகளுக்குக் கூட பயன்படுத்தலாம்.
   குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாப்பர்களை தவிர்த்துவிட்டு மறுபடியும் பழங்காலத்துக்கு மாறுங்கள். பிளாஸ்டிக் பைக்கு பதில் துணிப்பைக்கு மாறுங்கள். சின்னச் சின்ன பழக்கவழக்க மாற்றம் செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனும் நினைத்தால் மட்டுமே உருவாக்க முடியும்.
   இதற்காகவே, தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆம்பூர் போன்ற ஊர்களில் உள்ள 50 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து 12 வார "குக்கரி டூ காம்போஸ்ட்' என போட்டிகள் அறிவித்திருக்கிறோம். இதில் எந்த பள்ளி தாங்கள் பயன்படுத்திய குப்பைகளை அதிக அளவில் உரமாக மாற்றுகிறார்களோ அவர்களுக்கு பரிசுகள் அறிவித்திருக்கிறோம்.
   இதனால் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு குடும்பத்திற்கு போய்ச் சேரும்போது மாற்றம் வரும் என்று நம்புகிறோம்'' என்கிறார் அருள் பிரியா.

   - ஸ்ரீதேவி குமரேசன்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai