60 ஆண்டுகால மரபை மாற்றியவர்...!

சென்னை ஐஐடியில் சத்தமில்லாமல் சாதனை ஒன்றை - மாணவி ஒருவர் நிகழ்த்தியிருக்கிறார். இந்தியாவில் தொழில் நுட்ப ம், அறிவியல் பட்டப்படிப்புகளில் ஐஐடி நிறுவனங்கள் பெயர் பெற்றவை
60 ஆண்டுகால மரபை மாற்றியவர்...!

சென்னை ஐஐடியில் சத்தமில்லாமல் சாதனை ஒன்றை - மாணவி ஒருவர் நிகழ்த்தியிருக்கிறார். இந்தியாவில் தொழில் நுட்ப ம், அறிவியல் பட்டப்படிப்புகளில் ஐஐடி நிறுவனங்கள் பெயர் பெற்றவை. முன்னணியில் நிற்பவை. இந்தியாவின் முன்னணி ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியில் ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் கவிதா கோபால். சென்னை ஐஐடி தொடங்கிய அறுபது ஆண்டுகளில் "இந்திய குடியரசுத் தலைவர் விருதினை அதிக மதிப்பெண்கள் பெற்று முதலாவதாக வரும் மாணவர்கள் மட்டுமே பெற்று வந்தனர். மாணவிகள் யாரும் முதலாவதாக வந்ததில்லை; அந்த விருதினைப் பெற்றதுமில்லை. 
முதன் முதலாக "இந்திய குடியரசுத் தலைவர் விருதினைப் பெற்றிருக்கும் சாதனை மாணவி கவிதா கோபால்தான். அது மட்டுமா ? இந்த விருதுடன், "விஸ்வேஸ்வரய்யா விருது' மற்றும் "ரவிச்சந்திரன் விருதை'யும் கவிதாவுக்கு வழங்கி பெருமை செய்துள்ளார் பிரதமர் மோடி. 
அறுபது ஆண்டுகாலமாக விருதுகளை மாணவர்கள் தொடர்ந்து வாங்குவது மரபாகிப் போனதை கவிதா முதல் முறையாக உடைத்திருக்கிறார். 
பட்டமளிப்பு விழாவின் துவக்கமே மோடி கவிதாவுக்கு வழங்கும் விருதிலிருந்துதான் தொடங்கியது. மூன்று விருதுகளையும் ஒருசேரப் பெறும் முதல் மாணவியும் கவிதாதான். 
ஆனால் "ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறேன்' என்று கவிதாவுக்கு விருது பட்டம் பெற்ற அந்தத் தருணத்தில் தெரியாது. சர்பிரைஸ்ஸாக இருக்கட்டும் என்று ஐஐடி நிர்வாகம் நினைத்திருக்கலாம்.
கவிதாவுக்கு 21 வயதாகிறது. தற்போது கூகிள் நிறுவனத்தில் கணினி பொறியாளராகப் பெங்களூருவில் பணி புரிந்து வருகிறார். சென்னை ஐஐடி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை வார்த்திருக்கும் கவிதா கல்பாக்கத்தை அடுத்துள்ள அணுபுரத்தைச் சேர்ந்தவர். தந்தை கோபால் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் "அறிவியல் அதிகாரி'யாகப் பணி புரிகிறார். வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வது அம்மா சரஸ்வதி. கவிதாவின் அண்ணனும் சென்னை ஐஐடியில் படித்துவிட்டு பெங்களூருவில் பணிபுரிகிறார்: 
"சென்னை ஐஐடியின் சிறந்த முதல் மூன்று விருதுகளை பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டதில் பெரிதும் மகிழ்கிறேன். சென்னை ஐஐடியில் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற எனது கனவு நனவாகியிருக்கிறது. அதுவும் மூன்று விருதுகளுடன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாளில் எனக்காக சிலிர்க்க வைக்கும் சில திட்டங்களை நான் அடையாளமிட்டிருக்கிறேன். குறிப்பாக "குறியீடுகள்' (Coding) துறையில் சில லட்சியங்களை அடைய திட்டமிட்டுள்ளேன். 
அணுபுரம் அணுசக்தி நிறுவனத்தின் மத்திய பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு கல்பாக்கம் அணு நிலைய மத்திய பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தேன். அங்குதான் கணினி அறிவியலை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். கணினி அறிவியல், மென்பொருள் குறித்து ஒரு புரிதல் ஏற்பட்டது. தொடர்ந்து கூடுதலாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட. அது என்னை சென்னை ஐஐடியில் கொண்டு வந்து நிறுத்தியது. 2015-இல் சென்னை ஐஐடியில் பி.டெக் படிப்பில் சேர்ந்து 2019-இல் அதிக மதிப்பெண்களுடன் படிப்பை நிறைவு செய்தேன். சென்னை ஐஐடியில்தான், சி++, ஜாவா மற்றும் பைதன் உள்ளிட்ட மென்பொருள்களில் லயித்து அவற்றில் ஆளுமை அறிவினைப் கைவரப் பெற்றேன். 
படிப்பு, பொழுதுபோக்கு.. இரண்டையும் குழப்பிக் கொள்ளவில்லை. படிப்புடன் கூடைப்பந்து விளையாட்டிலும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நான் சிறந்து விளங்கினேன். தேசிய விளையாட்டு கழகத்தின் சார்பில் நான் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். 
ஒரு நிதர்சனத்தை சொல்லியே ஆகவேண்டும். பொதுவாக ஸ்டெம் (STEM - Science, Technology, Engineering and Mathematics) என்று குறிப்பிடப்படும் "அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் பெண்களின் பங்கேற்பு, பங்களிப்பு குறைவாகவே உள்ளது. நான் ஐஐடியில் படிக்கும்போது வகுப்பில் 60 மாணவர்கள் படித்தார்கள். அதே சமயம் வகுப்பில் என்னையும் சேர்த்து பத்து மாணவிகள் மட்டும்தான் படித்தார்கள். அகில இந்திய உயர் கல்வி 2018 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தொழில்நுட்பப் படிப்புகளில் படிக்கும் பெண்கள் 29 சதவீதம் மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சித் துறை பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் வெறும் 15 சதவீதம்தான். பெண்களின் பங்கேற்பு, பங்களிப்பு அதிகரித்தால்தான் இந்தத் துறைகளில் ஆண், பெண் பாலின வேறுபாட்டு விகிதம் சமநிலையை நோக்கி நகரும். குறிப்பாக "செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence), "இயந்திரம் வழி கற்றல் (Machine  Learning) துறைகளுக்கு வாய்ப்பு உள்ளது...' என்கிறார் கவிதா கோபால்.


- கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com