குழந்தைகளுக்கு குடைகள் வழங்கியவர்!

மழை என்று வந்துவிட்டால் நாம் உடனே தேடுவது குடையைத்தான்..! மழை பெய்தால் மாணவர் எண்ணிக்கை பள்ளியில் குறையும். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அன்றைய கல்வி போகும்.
குழந்தைகளுக்கு குடைகள் வழங்கியவர்!

மழை என்று வந்துவிட்டால் நாம் உடனே தேடுவது குடையைத்தான்..! மழை பெய்தால் மாணவர் எண்ணிக்கை பள்ளியில் குறையும். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அன்றைய கல்வி போகும். மழைக்காலத்தில் மாணவ மாணவியர் பள்ளிக்கு வருவது குறையும். காரணம், உடை, புத்தகங்கள் நனைவதிலிருந்து தப்ப வீட்டில் குடை கொடுக்காததுதான். பெற்றோர்கள் குடை கொடுக்காதது வீட்டில் குடை இல்லாது போனதால்தான்.
 நகரத்தில் ஆட்டோ வேனில் பள்ளிக்குப் போய் வரும் பிள்ளைகளுக்கு இது பொருந்தாது. கிராமப்புறப் பள்ளிகளில் பள்ளிக்கு குழந்தைகள் வருவதே பெரிய விஷயம். மழைக் காலங்களில் கிராமப்புறப் பள்ளிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மழைக் காலத்தில் தொடக்கப் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருவது குறைய கூடாது என்று நினைத்து 16 பள்ளிகளில் 1600 மாணவ மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் குடைகளை அன்பளிப்பு செய்திருக்கிறார்.
 விழாவில் கொடுக்கும் மஞ்சள் பை, நிறுவனங்களில் தரப்படும் சிறு கைப் பையில் கூட "அன்பளிப்பு செய்பவரின் பெயர்', முகவரி எல்லாம் அச்சிடும் இந்தக் காலத்தில் 1600 குடைகளை அன்பளிப்பு செய்த போதும் அதில் தனது பெயரைச் சிறிதாகக் கூட அச்சிடாத ஆசிரியைதான் வசந்தா சித்ரவேல். நாகப்பட்டினம் வேதாரண்யம் அண்டர் காடு சுந்தரேச விலாஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். "குடை வள்ளல்' வசந்தா சித்ரவேல் மனம் திறக்கிறார்.
 "தொடக்கத்திலிருந்தே சமூக சேவைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். மழைக் காலங்களில் தொடக்கப் பள்ளிக்கு மாணவர்கள் வகுப்பிற்கு வருவது குறைந்துவிடும். அன்று நடத்தப்படும் பாடங்கள், வகுப்பிற்கு வராத மாணவர்களின் கவனத்திற்கு வராது. இரண்டு மூன்று நாள்களுக்கு மாணவர்கள் வராவிட்டால் பாடங்களைத் தொடர மாணவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். குறைந்த வருகையுடன் உள்ள வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கவும் ஆசிரியருக்கு ஆர்வம் இருக்காது. இந்த குறைகளைத் தீர்க்க என்ன வழி என்று யோசித்தேன். குடை உபாயம் உதித்தது.
 நான் வேலை செய்யும் பள்ளி மாணவர்களுக்கு குடைகள் வழங்குவதுடன் நாகை வட்டாரத்தில் இருக்கும் 15 அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 1600 குடைகள் வாங்கி சென்ற மாதம் அன்பளிப்பு செய்தேன். குடைகள் வழங்கியபோது மழை பெய்யவில்லை. எதிர்வரும் வட கிழக்கு பருவ மழையைக் கருதித்தான் குடைகளை வழங்கினேன். குடைகள் வழங்கி முடிந்ததும் அடுத்த நாளே தொடர் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. மாணவ, மாணவியரும் குடையுடன் பள்ளிக்கு வந்துவிட்டனர். பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறையவில்லை. அது எனக்கு நிம்மதியைத் தந்தது. குடைகளுக்காக யாரிடமும் நிதி உதவி கேட்கவில்லை. நானும் கணவரும் சேர்ந்து செலவுகளை ஏற்றுக் கொண்டோம்.
 அதுபோன்று கஜா புயலின்போது இந்தப் பகுதி மக்களுக்கு அதிக பாதிப்பு. நஷ்டங்கள். சென்னை செட்டிநாடு மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணிபுரியும் மூத்த மகள், மருமகன் உதவியுடன், தெரிந்தவர்கள் அனைவரிடமும் நிதி சேகரித்து சுமார் ஐம்பது லட்சம் மதிப்புள்ள பொருள்களை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறேன்.
 எனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்காக வேறு பள்ளிக்குச் சென்றாலும் அவர்களை என் தொடர்பில் வைத்துக் கொள்கிறேன். மாணவ மாணவிகள் பள்ளியில் கல்லூரிகளில் கல்வி தொடர பொருளாதார சிரமங்கள் இருக்குமானால் என்னால் முடிந்த உதவி செய்வதுடன், ஸ்பான்சர்களையும் கண்டுபிடித்து கல்வி தொடர உதவுகிறேன். கஜா புயலுக்குப் பின் நிழல் தரும் மரக் கன்றுகளை ஊர் மக்களுக்கு வழங்கி நடச் செய்துள்ளேன். இந்தப் பகுதி துப்பரவு தொழிலாளர்களுக்கு மழைக் காலத்தில் அணிந்து கொள்ள மழைக் "கோட்'களையும் இன்னும் சில வாரங்களில் வழங்க உள்ளேன்.
 ஆசிரியர் தினத்தின் போது இப்பகுதியில் ஓய்வு பெற்று வாழும் ஆசிரியைப் பெருந்தகைகளைக் கண்டு நலம் விசாரித்து ஆசி பெற்று வருகிறேன், கணவரும் ஆசிரியர்தான். எனது சமூக உதவிகளுக்கு கணவர், இரண்டு மகள்களின் பங்களிப்பும் உள்ளது'' என்கிறார் வசந்தா சித்ரவேல்.
 - சுதந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com