பெண்களுக்கான நூலகம்!

மும்பையின் பாந்த்ராவில் உள்ள மவுண்ட் மேரி சாலையில் பெண்ணிய நூலகமான "சிஸ்டர் லைபரரி' (சகோதரி நூலகம்) எனும் நூலகத்தைத் தொடங்கியிருக்கிறார் அக்வி தாமி.
பெண்களுக்கான நூலகம்!

மும்பையின் பாந்த்ராவில் உள்ள மவுண்ட் மேரி சாலையில் பெண்ணிய நூலகமான "சிஸ்டர் லைபரரி' (சகோதரி நூலகம்) எனும் நூலகத்தைத் தொடங்கியிருக்கிறார் அக்வி தாமி. இவர், டார்ஜீலிங்கை பிறப்பிடமாக கொண்ட மும்பை வாசி. 29 வயது நிரம்பிய கலைஞரான அக்வி தாமி.
 தன் கலை மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் "த தாராவி ஆர்ட் ரூம்' என்ற திட்டத்தில் தாராவியில் உள்ள பெண் மற்றும் குழந்தைகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த சகோதரி நூலகம்.
 எழுத்துலகில் பெண்களுக்கு சரியான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்றும், பெண்கள் நல்ல நூல்களை தேடிப் படிப்பது குறைவு என்பதாலும் இது முற்றிலும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் நூலகமாகும். இது குறித்து அக்வி தாமி பகிர்ந்து கொண்டவை:
 "நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களின் படைப்புகள் ஒரு துணைப்பிரிவாகப் பார்க்கப்படுகிறது, மட்டுப்படுத்தப் படுகிறது. இது என்னை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து நான் பெண் எழுத்தாளர்களின் நூல்களை பிரத்யேகமாக தேடித் தேடி படிக்க தொடங்கினேன்.
 சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, "அக்வி இன்லாக்ஸ் ஃபைன் ஆர்ட் விருது' கிடைத்தது. அதில் கிடைத்த பணத்தை கொண்டு சுமார் 100 புத்தகங்களுடன் ஒரு பயண நூலகத்தைத் தொடங்கினேன். இந்தியாவைச் சுற்றியுள்ள டெல்லி, மும்பை, புனே, பெங்களூர், கோவா மற்றும் கொச்சின் என பல நகரங்களுக்குச் சென்றேன்.
 அப்போது, இது போன்ற ஓர் இடத்திற்காக ஏங்கிய வயதான பெண்கள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த புத்தகங்களைக் காண்பித்தனர். இளம் பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் பார்க்க முடியாது என்று நினைத்த புத்தகங்களைப் பார்த்து அழுதனர். இந்த சுற்று பயணத்தில் நான் கண்ட மற்றொரு விஷயம், நான் சென்ற பெரும்பாலான நூலகங்களில் பெண் எழுத்தாளர்கள் பாதி பேரின் புத்தகம் அங்கில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் இந்தியாவுக்கு உண்மையில் இது போன்ற ஒரு நூலகம் தேவை என்பதை உணர்ந்தேன். இதன் மூலம் பெண்களின் படைப்புகளுக்கு மட்டுமே இடம் கொடுப்பது என முடிவு செய்தேன். அதை அடிப்படையாக கொண்டு இந்த நூலகத்தை தொடங்கினேன். இது பெண்களுக்கான பிரத்யேக நூலகமாக இருந்தாலும், ஆண்கள் படிக்கவும் அனுமதி உண்டு.
 இதற்காக சாலையோர புத்தகக் கடைகளில் தொடங்கி நகரத்தில் உள்ள பெஸ்ட் புக் செல்லர் கடைகள் வரை தேடித்தேடி பெண் எழுத்தாளர்களால் மட்டுமே எழுதப்பட்ட பலவிதமான புத்தகங்களைக் கண்டுபிடித்து கொண்டு வந்து சேர்த்துள்ளேன். தற்போது இந்த நூலகத்தில் 600-க்கும் அதிகமான பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன. மேலும், இன்ஸ்டாகிராமில் இடம் பெற்றுள்ள புத்தகங்களின் ஏராளமான புனைகதை, கிராஃபிக் நாவல்கள் மற்றும் கவிதைகளும் உள்ளன.
 இதில் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்வதோடு அல்லாமல் அவர்களின் புத்தகத்தை பற்றிய விவாதங்களும் நடத்தப்படுகிறது. இது பெண்களை மேலும் எழுதவும் அவர்களின் எண்ணங்களை படைக்கவும் ஒரு உந்து சக்தியாக அமையும் என நம்புகிறேன். மேலும், இந்த படைப்புகளைத் தேடி ஏராளமான இடங்களைத் தேடியது மற்றும் அவற்றை வாங்குவது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு அறிந்திருப்பதால், என்னைப் போலவே, தாகம் கொண்ட பெண்கள் அனைவருடனும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 நான் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவள் என்பதால் எழுத்தின் வலிமையை நன்கு உணர்ந்து உள்ளேன். இந்த நூலகம் முன்னோர்கள், வாய்வழி இலக்கியங்கள், கலாசார பாரம்பரியம் மட்டுமல்ல, மொழி, சடங்குகள் மற்றும் அறிவை கற்பிக்கும் ஒரு இடமாகவும் இருக்கும்'' என்றார்.
 - ஸ்ரீதேவிகுமரேசன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com