சுடச்சுட

  
  vidya_balan

  "கஹானி', "நோ ஒன் கில்ட் ஜெஸிகா', "இஸ்க்யா', "தி டர்ட்டி பிக்சர்ஸ்' ஆகிய படங்களில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்து கடந்த 14 ஆண்டுகளாக பாலிவுட்டில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்துள்ள வித்யாபாலன், 2017 - ஆம் ஆண்டு வெளியான "து மாரி சுலு' படத்திற்குப் பின் அண்மையில் "மிஷன் மங்கள்' மூலம் திரைக்கு வந்துள்ளார். ஏன் இந்த இடைவெளி?
   "மிஷன் மங்கள்' படத்தில் நடித்தது எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் வித்யாபாலன்:
   "இந்த இடைவெளிக்கு எந்த காரணமும் இல்லை. படங்களைத் தேர்வு செய்வது தாமதத்திற்கு காரணமென்றும் சொல்லமுடியாது, பால்கியிடம் உதவி இயக்குநராக இருந்த ஜெகன் சக்தி முதன்முதலாக இயக்கும் "மிஷன் மங்கள்' திரைக்கதையை என்னிடம் கூறியபோது, என்னை மிகவும் கவர்ந்தது. ஜெகன் சக்தி துணிவுடன் இயக்கும் முதல் படமே அறிவியல் படம் என்பதால் இதில் நடிப்பது எனக்கு புது அனுபவமாகவும், சவாலாகவும் இருக்குமென்று தோன்றியது. மேலும் ஜெகன் சக்தியின் சகோதரி சுஜாதா, இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிவதால் அவர் மூலம் கதைக்கு ஏற்ற தகவல்களை பெற்று திரைக்கதையை சிறப்பாக அமைத்திருந்தார்.
   நானும் அவரது சகோதரியை சந்தித்து அவரது குடும்ப வாழ்க்கை, மற்றும் இஸ்ரோவில் ஆண்}பெண் வித்தியாசமின்றி பணிபுரியும் விஞ்ஞானிகள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தேன். உண்மையில் பள்ளி பருவத்தில் அறிவியல் மற்றும் கணிதம் பாடமென்றால் எனக்கு பயம். இப்போது அறிவியல் சம்பந்தப்பட்ட "மிஷன் மங்கள்' படத்தில் தாரா ஷிண்டே பாத்திரத்தில் எப்படி நடித்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என்னுடன் தாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்கா, நித்யா மேனன் என பலரும் நடிக்க, நடிகரும், தயாரிப்பாளருமான அக்ஷய் குமார் வாய்ப்பளித்திருந்ததும், அனைவரும் ஒரே படத்தில் நடித்ததும் புதுமையான அனுபவமாகும். பட விளம்பரங்களில் அக்ஷய் குமாருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, எங்களைப் புறந்தள்ளியது குறித்து, பலர் என்னிடம் கேட்டதுண்டு. வணிக ரீதியாக கதையின் நாயகனான அக்ஷய் குமாரை முன்னிலைபடுத்தியது தவறில்லை என்றே நினைக்கிறேன். பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும்போது எதுவுமே தவறாக தெரியாது.
   இதுவரை நான் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்த படங்களிலேயே நடித்து வந்ததால், பிரபல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை இழந்திருக்கலாம். ஒரு படத்தில் இரண்டு பாடல்கள், நான்கைந்து காட்சிகளில் மட்டும் நடிப்பதும் பிரச்னைதான். இவர் இதற்குதான் லாய்க்கு, இதற்கு மேல் இவரால் நடிக்க முடியாது என்று ரசிகர்கள் நினைக்கக்கூடும். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பின்மைக்கு என்னுடைய உடல்வாகும் காரணமாக இருக்கலாம். உடல் எடையை குறைக்கலாமே என்று சொல்பவர்கள், இளைத்தவுடன் பழைய தோற்றம் இல்லையே என்று கூறலாம். என் உடலமைப்பு இயற்கையானது. இது குறித்து வரும் விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை.
   என்னுடைய 26}ஆவது வயதில்தான் நான் நடிக்க வந்தேன். பொதுவாக அந்த வயதில்தான் பல நடிகைகள் சினிமாவிலிருந்து விலகி திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிறார்கள். நான் நடிக்கவந்தபோது, " நடிகைகளுக்கு இந்த திரையுலக வாழ்க்கை கொஞ்ச காலம் தான், அதிக நாள் நீடிக்க மாட்டார்கள்'' என்று பலர் கூறினர். தற்போது எனக்கு 40 வயது ஆகிறது. 14 ஆண்டுகளாக திரையுலகில் நீடித்திருக்கிறேன். இதற்கு என்னுடைய தன்னம்பிக்கையே காரணம்! நான் உயிரோடு இருக்கும் வரை நடிப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது.
   ஆண்டுக்கு எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பது முக்கியமல்ல என்னைப் பொருத்தவரை எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவள் நான். என் வாழ்க்கையில் தற்போது நல்லகாலம் நடப்பதாக கருதுகிறேன். தொடர்ந்து நான் சினிமாவை நேசிப்பதால், இந்த திரையுலகைப் பொருத்தவரை எனக்கென்று ஒரு இடம் இருக்குமென்றே கருதுகிறேன்.
   இடையில் தெலுங்கில் என்டிஆர் வரலாற்று படத்திலும், தமிழில் "நேர் கொண்ட பார்வை'யில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளேன். அடுத்து கணிதமேதை சகுந்தலாதேவி மற்றும் மறைந்த பாரதபிரதமர் இந்திராகாந்தி வரலாற்று படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பிரபலமாக இருப்பதால் பொதுவாழ்வில் பெண்கள் தொடர்பான சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன். இதனால் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதுமில்லை'' என்றார் வித்யா பாலன்.
   -பூர்ணிமா
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai