செப்புத் தகட்டு சிற்பங்கள்!

நம் கண்ணையும்,  கருத்தையும்  கவரும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும், அதன் வண்ணங்களையுமே  பொதுவாக  ஓவியக் கண்காட்சிகளில் நாம் பார்த்து  ரசித்திருப்போம்.
செப்புத் தகட்டு சிற்பங்கள்!

நம் கண்ணையும்,  கருத்தையும்  கவரும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும், அதன் வண்ணங்களையுமே  பொதுவாக ஓவியக் கண்காட்சிகளில் நாம் பார்த்து  ரசித்திருப்போம்.  அதிலிருந்து  சற்றே மாறுபட்டு செப்புத் தகட்டினை தன் கற்பனைக்கேற்றவாறு வளைத்து, நெளித்து, வண்ணங்களை குழைத்து உருவாக்கிய சிற்பங்களையும், புடைப்புச் சித்திரங்களையும் உருவாக்கி கண்காட்சியாக வைத்துள்ளார் ஓவியர் ஹேமலதா. சென்னை தேனாம்பேட்டைமூப்பனார் பாலம் அடுத்துள்ள ஆர்ட் வேர்ல்ட் கேலரியில், செப்டம்பர் 14 -ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சி பலரையும் கவர்ந்துள்ளது. இது குறித்து ஓவியர் ஹேமலதா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""வழக்கமான ஓவியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது செப்புத் தகட்டில் செய்யப்படும் இந்த சிற்பங்கள்.   அதே சமயம்,  இந்த சிற்பங்கள் நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றுதான். அந்தக்கால கோயில்கள், அரண்மனைகளில் எல்லாம் கதவுகளில், மேல்தளத்தில், ஜன்னல்களில், தூண்களில் எல்லாம் செப்புத் தகட்டினால் செய்யப்பட்ட புடைப்பு சித்திரங்களைப் பார்த்திருப்போம். அதனை அடிப்படையாகக் கொண்டு,  சில நவீன மாற்றங்கள்  செய்து மெருகேற்றி , செப்புத் தகட்டு சிற்பங்களாக மாற்றியுள்ளேன். இந்த சிற்பங்களை  என்னுடைய  18 வயதில் தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன்.

ஒவியத்தின் மீது எனக்கு சிறுவயது முதலே ஆர்வம் உண்டு. காரணம்,  எனது தந்தை சேனாதிபதி ஓவியர் என்பதால்  எப்போதும் வீட்டில்  பலவித ஓவியங்கள் வரைவதை பார்த்து வளர்ந்தவள் நான்.  தற்போது ஆர்ட்டிஸ்ட் வில்லேஜின் தலைவராக  இருக்கிறார். அப்பாவின் ஓவியங்கள், படைப்புகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம், சிறுவயது முதலே ஓவியங்கள் மீது ஈடுபாடு வர காரணமாக அமைந்தது. மேலும், சோழமண்டல் ஆர்டிஸ்ட் வில்லேஜில் சிறுவயது முதல் வளர்ந்தவள் என்பதால், அங்கே உள்ள பல  ஓவிய ஜாம்பவான்களின்  பல வகையான ஓவியங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்து வளர்ந்தது, தற்போது என்னை செதுக்கிக் கொள்ள உதவியுள்ளது.

ஆரம்பத்தில்  செப்புத்  தகட்டில் புடைப்பு சித்திரங்கள்மட்டுமே வரைந்து கொண்டிருந்தேன். அதன்பிறகுதான் ஏதாவது புதுமையைப் புகுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, செப்புத் தகட்டு சிற்பங்களை உருவாக்க தொடங்கினேன்.  புடைப்பு சித்திரத்திற்கும், இந்த சிற்பங்களும்  வெவ்வேறு  தளங்களில் இருப்பவை. முற்றிலும் மாறுபட்டவை. 

இந்த ஓவியங்களுக்கான செப்புத் தகடுகளை வாங்கி வந்து  வேண்டிய வடிவங்களில் வெட்டி, வளைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த  செப்புத் தகடுகள் மிகவும் கனமாக இருக்கும். இதனை வளைப்பதும் மிகக் கடினமானது.  அப்படி வேண்டிய வடிவங்களை வளைத்த பிறகு,  வெல்டரை வரவழைத்து,  வளைத்து வைத்து உள்ள வடிவங்களை வெல்டு செய்தால்  சிற்பம் உருவாகிவிடும். அதன்பிறகு,  அதற்கு வண்ணங்களை குழைத்து செப்புத் தகடுகளை சொர சொரப்பாக்கி, சூடாக்கி, உருகுநிலைக்கு கொண்டுவந்து பின்னர் அதில் வண்ணத்தை சேர்த்தால் அது அப்படியே மெல்ட்டாகி செட்டாகிவிடும். இப்படிதான் இதற்கு வண்ணம் தீட்ட முடியும். இந்த கண்காட்சியைப் பொருத்தவரையில்  பெயிண்ட்டிங்ஸ், புடைப்பு சித்திரங்கள், செப்புத் தகட்டு ஓவியங்கள் என மூன்று வகையையும் சேர்த்து சுமார் 60 ஒவியங்கள் காட்சிப்படுத்தியுள்ளேன்.   இதில் பல வகையான தீம்களும் வைத்துள்ளேன். 

வழக்கமான ஓவியங்களைப் பொருத்தவரையில்  ஒரு மீனை வரைந்தால் அதைப் பார்த்தவுடன் மீன் என்பது அனைவருக்கும் புரிந்துவிடும்.  ஆனால், இந்த சிற்பங்களைப் பொருத்தவரையில் சொந்த கற்பனையினால் அதன் வளைவுகளிலும்,  ஓரங்களின் வடிவங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுவதால், இதில் சில சிற்பங்களை உற்று நோக்கினால் மட்டும் இதில் ஒளிந்திருக்கும் வடிவங்களை தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், வழக்கமான ஒவியத்திற்கும்,  மாடர்ன்  ஆர்ட்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

இந்த துறையைப் பொருத்தவரை ஓவியம்  வரைவதில்  ஆர்வம் காட்டும் அளவிற்கு பெண்கள்  சிற்பம் வடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறையாகதான் உள்ளது. இதற்கு காரணம், சிற்பம் வடிப்பது என்பது மிக கடினமான  ஒன்று. எனவே,  சுலபமான வழிகளில்  இருக்கும் ஓவியங்களையே பெரும்பாலான பெண்கள் நாடுகிறார்கள்.  என்றாலும்,  டெரகோட்டா , செரமிக் சிற்பங்கள் வடிப்பதில்  ஓரளவு பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற மெட்டல்  சிற்பங்களை உருவாக்குவதில்   விரல்விட்டு எண்ணும் அளவில்தான் பெண்கள் இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை கடினமான இந்த மெட்டல் சிற்பங்களை உருவாக்குவதை சவாலான விஷயமாகவே கருதுகிறேன். எனவே, இதனை விரும்பி செய்கிறேன். மேலும், எல்லோரும் செய்வதையே செய்யாமல், சற்று மாற்றி யோசித்தால்தானே நாம் பேசப்படுவோம். 

இந்த வகை சிற்பங்களை பொருத்தவரை  ஒரு சிற்பத்திற்கு இவ்வளவு நாளாகும் என்று குறிப்பிட்டு  சொல்ல முடியாது.  ஏனென்றால், 4-5 சிற்பங்களுக்கான வடிவங்களை  கார்ட் போர்ட்டில் வரைந்து  அதனை  வைத்து செப்புத்  தகட்டில்  வரைந்து வெட்டி, செதுக்கி,  வளைத்து வடிவமைத்துக் கொள்வேன். பிறகு வெல்டரை வரவழைத்து வடிங்களை வெல்டிங் செய்து கொள்வேன்.  சில சிற்பங்களைப் பொருத்தவரை மேல் பக்கம் மட்டுமே பார்க்க முழுமையாக அதன் வடிவத்தைப் பார்க்க முடியும்.  ஆனால், இங்கே உள்ள ஒரு காளை சிற்பத்தைப் பொருத்தவரை, 3 டைமன்ஷன்னில் வடிவமைக்கப் பட்டது. இது நான்கு  பக்கத்திலிருந்து பார்த்தாலும்,  அதன் உருவத்தை முழுவதுமாகப் பார்க்க முடியும். இது போன்ற சிற்பங்கள் வடிவமைப்பது  மிக கடினமானது. எனவே, இந்த சிற்பங்களின் கால அளவை என்னால் சொல்ல இயலாது.'' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com