என் பிருந்தாவனம்! 32 -பாரததேவி 

எப்போதும் தன் கணவனின் முகத்தில் ஆசையையும், காதலையும் , கெஞ்சலையும், கொஞ்சலையும் மட்டுமே பார்த்திருந்த கௌசிகாவிற்கு இப்போது அவன் முகம் மட்டுமல்ல அவனே வித்தியாசமாகத்தான் இருந்தான்
என் பிருந்தாவனம்! 32 -பாரததேவி 

எப்போதும் தன் கணவனின் முகத்தில் ஆசையையும், காதலையும் , கெஞ்சலையும், கொஞ்சலையும் மட்டுமே பார்த்திருந்த கௌசிகாவிற்கு இப்போது அவன் முகம் மட்டுமல்ல அவனே வித்தியாசமாகத்தான் இருந்தான். அவன்தன் அருகில் உட்கார்ந்திருந்தாலும், அவன் உடல் தன் மீது படவில்லை என்று அறிந்தபோது, அவள் நெஞ்சம் துடியாய் துடித்தது. அவனின் முகத்திலிருந்த இறுக்கத்தையும், அவனின் வெறித்தப் பார்வையையும் அவளால் பொறுக்க முடியவில்லை. 
"சொல்லுங்க'' என்றாள் அழுகைக் குரலில்
" நான் ரொம்ப நல்லா யோசிச்சிதான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். நான் இப்படியொரு முடிவு எடுத்ததுக்கு நீ என்ன மன்னிச்சிடு. ஏன்னா நாந்தேன் உம்மேல ஆசப்பட்டு கல்யாணமின்னு ஒன்னு முடிச்சா அது உன் கூடதேன்னு நெனைச்சு முடிச்சேன். ஆனா எத்தனை, எத்தனை கனவுகளோட உன்னக் கல்யாணம் முடிச்சிட்டு வந்தேனோ. இப்போ அத்தன கனவுகளும் அப்படியே சிதைஞ்சுப் போச்சி. இனி எனக்குள்ள எதுவுமே இல்ல'' என்றான்.
தங்கராசு பேச.. பேச.. கௌசிகா தனக்குள்ளேயே உடைந்து நொறுங்கிப் போனாள். இவன் என்ன சொல்ல போகிறான் என்பது தெரியாமல் திகிலடைந்து போனாள். அவள் அச்சத்தோடு வியர்த்து விறுவிறுத்து அவன் முகத்தையேப் பார்த்தாள்.
தங்கராசு சன்னல் வழியே வெளியே பார்த்தபடி, "நீயும் எத்தனையோ கனவுகளோடதான் இங்கே வந்திருப்பே. உனக்கும் என்னை கல்யாணம் முடிச்சதுல ஏமாற்றம்தான் கிடைச்சிருக்கு. என் குடும்பத்தாரையோ, இந்த ஊர் ஜனங்களையோ உனக்கு சுத்தமா பிடிக்கல, இதுநாள் வரை இது உன்னோட வீடுங்கிற எண்ணமும் உனக்கு வரல, 
அதே சமயம், நீ நினைக்கிறபடி, இந்த ஊர், காடு கழனியெல்லாம் விட்டுட்டு டவுனுக்கு வந்து என்னால வாழமுடியாது. அதனால, இது வரைக்கும் நாம வாழ்ந்தது போதும். நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சிருவோம். நீ ஆசப்படுறபடி டவுன் மாப்பிள்ளையே பார்த்து கல்யாணம் செஞ்சிகிட்டு நிம்மதியா வாழு'' என்றான் தங்கராசு.
அவன் சொன்னதைக் கேட்டு பருந்து வாயில் அகப்பட்ட கோழிக் குஞ்சாய் துடித்துப் போனாள் கௌசிகா. 
கௌசிகாவிற்கு தலை கிறு, கிறுப்பது போலிருந்தது. ஒருவேளை அவர் ஆசையாக சொன்ன வார்த்தை தன் காதில்தான் தவறாக விழுந்திருக்குமோ என்று நினைத்தவள், 
"என்ன சொன்னீங்க, நீங்க என்ன சொன்னீங்க'' என்று பட, படத்தாள்.. 
அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தங்கராசு விருட்டென்று எழுந்து நின்றான். 
கௌசிகாவுக்கு இத்தனை நாள் பார்த்த தங்கராசுவாக அவன் இல்லை. அவன் இவளைக் கண்டாலே குழந்தையாக, காதலனாக, காவலனாக மாறி இவள் அணைப்புக்குள் மயங்கி குழைவானே இவன் அவன் இல்லை.
தங்கராசு அவள் முகத்தைப் பார்க்காமலே பேசினான். 
"பட்டணத்து வாழ்க்கையும், பட்டிக்காட்டு வாழ்க்கையும் ஒரு நாளும் ஒத்துப்போகாது. அதனால் நாம சண்ட, சத்தமில்லாம எங்க ஊரு பஞ்சாயத்தார வச்சி நல்லபடியா பேசி பிரிஞ்சிருவோம். உங்க ஊருக்குச் சொல்லியனுப்பி உங்க, அம்மா, அப்பாவை கூட்டிட்டு வரச் சொல்றேன். இதுதேன் என் முடிவு'' என்று அவன் சொல்லவும், 
ரேடியோவில், "இன்னொரு கைகளிலே யார், யார் நானா? என்னை மறந்தாயா? ஏன்... ஏன்... ஏன் என் உயிரே' என்று சுசீலாம்மா உருக்கமாகப் பாட கௌசிகா, தலைகிறுகிறுத்து அப்படியே சரிந்து உட்கார்ந்தாள்.
தான் வீட்டில் இருந்தால் கௌசிகாவிற்காக தன் மனது இளகிவிடும் பிறகு பிரிவென்பது கிடையாது என்று நினைத்த தங்கராசு. அந்த அறையிலிருந்து வெளியே சென்று வாசலில் இருந்த திண்ணையில் படுத்திருந்துவிட்டு, விடியற்காலை இருட்டிலேயே காட்டிற்கு புறப்படுகிறவன்தான். மீண்டும் இருட்டியப் பிறகுதான் வருவான். 
அவன் வீட்டில் இருக்கின்ற நேரங்களிலும் கௌசிகாவின் அருகில் செல்லாமல் ஒதுங்கியே இருந்தான். 
கௌசிகாவும் இவன், எதிரில் வருவதையே தவிர்த்தாள்.
இதனால், "கௌசிகா வீட்டில்தான் இருக்கிறாளா? இல்லை நான் சொன்னதைக் கேட்டு அவளாகவே ஊருக்குப் போய் விட்டாளா?' என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
நாம் பிரிந்துவிடுவோம், என்று சொன்ன வார்த்தையை எப்படியும், இவள் அம்மாவிடமும், தங்கச்சியிடமும் சொல்வாள், அழுவாள், ஆர்ப்பரிப்பாள் என்றெல்லாம் அவன் எதிர்ப்பார்த்திருந்தான். ஆனால், அவர்களிடமிருந்து கௌசிகாவை ப்பற்றி எந்தப் பேச்சையும் காணோம் என்று நினைத்திருந்தான்.
அப்போதுஅவன் அம்மா சங்கரி, "என்னய்யா தங்கராசு, அந்தப்புள்ளய வெடுக்கு, சுடுக்கின்னு ஏதும் சொன்னயா? ரெண்டு நாளா அந்தப்புள்ள இருக்கிற அரவத்தையே காணமே'' என்று கேட்டபோது,
"இல்லையேம்மா'' என்று பொய்யாகச் சொன்னான் தங்கராசு. ஆனாலும், மனசுக்குள் திடும், திடுமென்று பூதம் ஒன்று எட்டிப்பார்த்துக் கொண்டுதான் இருந்தது. எந்த நேரத்தில் அது எப்படி கிளம்புமோ எப்படி கிளம்பினாலும் சமாளிக்க வேண்டியதுதான் என்று தங்கராசு எண்ணினானே தவிர இனி அவளுடன் அவன் வாழ தயாராக இல்லை என்று தன் மனதிற்குள் உறுதி செய்து கொண்டான். அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவள் வாயிலிருந்தே அந்தச் சொல் வரட்டும் என்று இருந்தான்.
ஆனாலும் அவன் மனதுக்குள் அவள் சாப்பிட்டாளோ, சாப்பிடவில்லையோ என்று ஆதங்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு பார்ப்பவர்களுக்கு ஆளாக இருந்தாலும் ஒரு நடைபிணமாகத்தான் அலைந்தான். தனிமை, தனிமை என்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான்.
அதே சமயம் கௌசிகாவிற்கோ, தங்கராசு நாம் பிரிந்து விடலாமென்று சொன்ன வார்த்தை அவள் நெஞ்சில் கத்திக்குத்தாய்ப் பாய்ந்து இம்சை செய்தது. அவன் அந்த அறையிலிருந்து சென்றதும். நீண்ட நேரம் ஆற்றுவார், தேற்றுவாரின்றி குமுறி, குமுறி அழுதாள். 
தங்கராசு அப்படி சொல்லிவிட்டானே தவிர, அவனால் தன்னை பிரிந்து இருக்க முடியாது. மீண்டும் வந்து சமாதானம் செய்வான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவன் இவளை கண்டுகொள்ளாமல் இருந்ததும் பேரதிர்ச்சியாய் இருந்தது. இதனால் அவன் முன்னால் வருவதையே தவிர்த்தாள்.
பொதுவாகவே, நம் தமிழ் பெண்கள் தங்களைப் பெண் பார்க்க வரும் முதல் மாப்பிள்ளையே, பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்வதை கேட்கத்தான் ஆசைப்படுவார்கள். மீண்டும் ஒரு ஆணை மாப்பிள்ளையாகப் பார்க்க விரும்ப மாட்டார்கள். 
அப்படி இருக்கும்போது, " தன் புருஷன் எவ்வளவு சுலபமாக நாம் பிரிந்து விடலாம்' என்று சொல்லிவிட்டான். ஒரு பெண்ணால் தன் முதல் கணவனை மறக்க முடியுமா? அப்படியே முறித்துவிட்டுப் போனாலும் இந்த சமுதாயமும், பெற்றோரும் சும்மா இருப்பார்களா? இன்னொரு கல்யாணத்தை முடித்து வைக்க நினைப்பார்கள். இன்னொரு வாழ்க்கை மட்டுமே என்ன சினிமாவில் வரும் காதல் டூயட்டாகவா இருக்கும். அப்போதும் கணவன், மனைவிக்குள் சண்டையும், சச்சரவென்று வரத்தானே செய்யும். அது இதைவிட அதிகமாக இருக்கும்.
ஆண்கள் எத்தனை கல்யாணமும் முடிக்கலாம். ஒரு ஆண் ஒரு வருடம் வீட்டைவிட்டு வெளியேச் சென்று தலைமறைவாக இருந்துவிட்டு வந்தால் கூட ஏற்றுக் கொள்ளும் இந்த சமுதாயம். ஆனால், அதுவே ஒருபெண், ஒரே ஒருநாள் சூழ்நிலைக் காரணமாக தன் தோழி வீட்டில் தங்கிவிட்டு வந்தால் கூட அவ்வளவுதான். இந்தச் சமூகம் அவளைப் பார்த்து முகம் சுளிப்பதோடு, அவளுக்கு அசிங்கமான பல பட்டபெயரைச் சூட்டி, ஒதுக்கியும் வைத்துவிடுவார்கள். 
இதில் இரண்டாவது திருமணம் என்பது பெண்களைப் பொறுத்தவரை தீக்காயம் பட்ட மேனியைப் போல்தான் காயம் ஆறினாலும், தழும்பு மறையாது. உள்ளத்தின் ஆழத்தில் முதல் கல்யாணத்தின் நினைவுகள் ஆறாத ரணமாகத்தான் உறுத்திக் கொண்டிருக்கும் என்று நினைத்த கௌசிகா, 
கல்யாணம் முடித்து அந்த வீட்டில் வாழ வந்த நாள் முதல், அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்தபோது, தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் தங்கராசு வந்ததும், அவனையும், அவன் வீட்டாரையும் தான் எப்படி
யெல்லாம் ஆட்டிவைத்ததையும் நினைத்தாள். 
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இத்தனை நாளும், தன்னை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்ட தங்கராசுவை, தான் எந்தளவுக்கு காயப்படுத்தியிருந்தால், இப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருப்பான். இப்படி தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான் என்றால் அவன் மனது எந்தளவுக்கு காயப்பட்டிருக்கும் என்று நினைத்தவளுக்கு தன் மீதே வெறுப்பு உண்டாகியது.
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com