சமையல்! சமையல்!

சோள தோசை, சாமை மிளகுப் பொங்கல், தினை கதம்ப இனிப்பு, தினை காரப் பணியாரம் 

சோள தோசை 

தேவையானவை: 
சோளம் - 500 கிராம்
உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவுப் பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
பலன்கள்:– "பஞ்சம் தாங்கிய உணவு" என்று சோளத்தை, கிராமத்தில் சொல்வார்கள். நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது.

சாமை மிளகுப் பொங்கல் 

தேவையானவை:
சாமை அரிசி - 500 கிராம்
பாசிப்பருப்பு - 250 கிராம்
இஞ்சி (துருவியது) - இரண்டு தேக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
முந்திரி - 10 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு -–3 தேக்கரண்டி
கல் உப்பு -– தேவையான அளவு
செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார்.
பலன்கள்:– எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். அதனுடன் நெய் சேரும்போது உடலுக்கு நல்லது. நெய் ரத்தத்தில் கொழுப்பாகப் படிந்துவிடாமல் ஆற்றலாக மாறுவதற்கு சாமை உதவுகிறது. மிளகு, செரிமானத்தைச் சரிசெய்யும். குடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.

தினை கதம்ப இனிப்பு 

தேவையானவை:
தினை மாவு - 350கிராம்
அரிசி மாவு - 50கிராம்
வெல்லம் - 400கி
பால் - 300 மி.கி
ஏலக்காய்த் தூள் -–அரை தேக்கரண்டி
நெய் -– 150 மி.கி.
செய்முறை: நெய்யைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் தோசை மாவுப் பதத்தில் கலக்கிக் கொள்ளவேண்டும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி மாவுக் கலவையை ஊற்றி வேகவிடவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு, நெய் கலவையிலிருந்து வெளி வரும் வரை மெள்ளக் கிளறவும்.

தினை காரப் பணியாரம் 

தேவையானவை: 
தினை அரிசி - 500 கிராம்
உளுந்து - 250 கிராம்
வெந்தயம் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 250 கிராம்
மிளகாய் - 4
எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு
சீரகம் -– சிறிதளவு.
செய்முறை: தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெய்யைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
கடலைத் துவையல், புதினா துவையல், தேங்காய் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
- மு.சுகாரா, ராமநாதபுரம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com