தோலின் ஆரோக்கியத்திற்கு உதவும் 6 சத்துகள்!

ஒருவருடைய புற அழகானது, ஆரோக்கியமான, மிருதுவான, வசீகரிக்கும் தன்மையுடன் மிளிரும் தோல், அதனைப்பெற்ற முகம், கைகள், கால்கள் மற்றும் அவரது உடல் ஆகியவற்றைப் பொருத்துத்தான் அமைகிறது.
தோலின் ஆரோக்கியத்திற்கு உதவும் 6 சத்துகள்!

ஒருவருடைய புற அழகானது, ஆரோக்கியமான, மிருதுவான, வசீகரிக்கும் தன்மையுடன் மிளிரும் தோல், அதனைப்பெற்ற முகம், கைகள், கால்கள் மற்றும் அவரது உடல் ஆகியவற்றைப் பொருத்துத்தான் அமைகிறது. தோராயமாக 20 சதுர அடி அளவைக் கொண்டுள்ள மனிதனின் மேல் தோலானது, கிருமிகள், அழுக்கு, தூசு, வெப்பம், குளிர், அதிர்வுகள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்து, தோலுக்கு அடியில் இருக்கும் ரத்தநாளங்கள், தசைகள், உள் உறுப்புகள் ஆகியவற்றிற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சரியான உடல் இயக்கத்திற்கு உதவிபுரிகிறது. 
கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்படும், வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தினால்தான் முகமும் உடலும் மினுமினுப்பாக இருக்கும் என்பது ஒரு தவறான கருத்தாகும். மேலும், விரைவில் அழகூட்ட வேண்டும் என்ற நோக்கில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த முகப்பூச்சுகள், தோலில் தடவும் களிம்புகள் பல நேரங்களில் எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. 
தோலின் ஆரோக்கியம், அதற்குத் தேவையான சத்துகள், அவை எந்தெந்த உணவுப்பொருட்களில் உள்ளன? அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய செய்திகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டாலே, ஒவ்வொருவரும் வசீகரமான தோலைப் பெறலாம். 
தோலின் அமைப்பு
மனிதனின் தோலானது, உடலின் நிறத்தை நிர்மாணிக்கும் மெலனின் (Melanin) என்ற நிறமியை உருவாக்கும் மெலனோசைட்ஸ்(Melanocytes) என்ற நிறமி செல்கள் பொதிந்து, தோலின் மிருதுவான தன்மையையும் பராமரிக்கும் எப்பிடெர்மிஸ் (Epidermis) என்னும் வெளிப்புற அடுக்கு, கடினமான சேர்ப்புத் திசு (Connective Tissue), முடியின் வேர்க் கால்கள், வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகளைக் கொண்டு, 75 % கொலாஜென் (Collagen) என்ற வெளிசெல் புரதத்தால் அமைந்துள்ள டெர்மிஸ் (Dermis) என்ற இரண்டாம் அடுக்கு, கொழுப்பு மற்றும் சேர்ப்புத் திசுக்களால் உருவாக்கப்பட்டு, வெப்பம் மற்றும் குளிர் ஆகியவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும் ஹைப்போடெர்மிஸ் (Hypodermis) என்ற கீழ் அடுக்கு என்று மூன்று வகையான பகுதிகளால் அமையப்பெற்றுள்ளது.

வெளிப்புற சூழலால் தோலில் ஏற்படும் பாதிப்புகள்:
மாசடைந்த காற்றிலுள்ள நச்சுக்கள், தூசு, புகை ஆகியவை மனிதனின் முகம் மற்றும் உடலில் படிந்து பலவிதமான தோல் நோய்களை உருவாக்குகின்றன. அதிகமான வெய்யிலில் வெளியில் செல்லும்போது தோலினுள் ஊடுருவும் புற ஊதாக் கதிர்கள் (Ultra violet rays) உள்ளிருக்கும் மரபணுக்களை (DNA) பாதிப்பதுடன், செல்கள் அழிவு, வயதான தோற்றம் மற்றும் தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு காரணமாகிறது. இதனை போட்டோடேமேஜ் (Photo damage) என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. இந்த பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டுமெனில், தோலின் உறுதித் தன்மையை தக்கவைக்கும் உயிர்சத்துக்களை தோலின் வெளிப்புறமாகவும், உள் உணவாகவும் கொடுத்து தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிக முக்கியம். 
ஒருவரின் பாலினம், வயது மற்றும் உடல் எடைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டுள்ள சரிவிகித உணவே (Recommended Dietary Allowance) அனைத்து சத்துகளையும் உடலுக்கு அளிக்கிறது என்றாலும், மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் அல்லது பாகமும் முழு உறுதியுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொரு உணவுப் பொருளும் தனித் தன்மையுடன் சில தேவையான சத்துகளை அளிக்கிறது. அவ்வகையில் உடலின் தோலுக்கு ஊட்டமளித்து, முகத்தையும் உடலையும் வனப்பாகவும் வசீகரமாகவும் வைத்துக்கொள்வதற்கு உதவும் சத்துகளையும் அவை கிடைக்கப்பெறும் உணவுப்பொருட்களையும் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தோலின் ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கியமான 6 சத்துக்கள்:
வைட்டமின் "ஏ' மற்றும் பீட்டா கரோடின் - உலர்ந்த மற்றும் செதில் செதிலாக இருக்கும் சருமமானது வைட்டமின் "ஏ' உயிர் சத்து குறைபாட்டை உணர்த்துகிறது. செல்கள் அழிவதையும், மெருகு குறைவதையும் இந்த உயிர் சத்து தடுக்கிறது. அடர் நிறமுள்ள கீரைகள், ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கள், முட்டை, சர்க்கரை வள்ளி கிழங்கு, ஆட்டு ஈரல் ஆகியவற்றில் இந்த உயிர் சத்து நிறைந்துள்ளது.
முக்கியமாக அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றில் பீட்டா கரோடின் சத்து அதிகமாக உள்ளது. 
வைட்டமின் "சி'– ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டான வைட்டமின் "சி' சத்து, தோலுக்கு மிகவும் முக்கியமான "கொலாய்ஜன்' என்ற புரதத்தின் உற்பத்திக்கு உதவுகிறது. கொய்யாபழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொத்துமல்லி, முருங்கைக்கீரை, முட்டைகோஸ் ஆகியவற்றில் இந்த வைட்டமின் உள்ளது.
வைட்டமின் "ஈ' உயிர் சத்து வைட்டமின் "ஏ' சத்துடன் சேர்த்து செயல்படும்போது அதன் ஆற்றல் அதிகரிக்கிறது. தோலின் சுருக்கங்களைப் போக்கி, வழவழப்பான மிளிர்ந்த சருமத்தை அளிக்கிறது. இதை "ஆன்டி ஏஜிங்' (Antiaging) முதுமை தன்மையை குறைத்துக்காட்டி அழகை கூட்டச் செய்யும் தன்மை இந்த இரு சத்துக்களுக்கும் உண்டு. பாதாம், முட்டை, வால்நட், (அக்ரூட்), பிற கொட்டைகள், பசலை கீரை, ஓட்ஸ், ஆலிவ் கொட்டைகள் ஆகியவை வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.
செலினியம் - தோலின் மிருதுவான தன்மையையும், நெகிழ்வுத் தன்மையையும் பாதுகாக்கிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு, ஆண்களுக்கு ஏற்படும் அடர்ந்த முகப்பருக்களான அக்னி (acne) என்று கூறப்படும் தழும்புகள் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவைகள் வராமல் தடுக்கும் திறன் இந்த செலினியம் என்ற தாதுவிற்கு உண்டு. இந்த சத்தானது வைட்டமின் "ஈ' சத்தினை தோலின் மூலம் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கிறது. வால்நட், கொட்டைகள், சிறு மீன்கள், நண்டு, இறால் போன்ற கடல் உயிரின உணவுகள், தோலுடன்கூடிய முழு தானியங்கள், கைக்குத்தல் அரிசி ஆகியவை செலினியம் சத்து அதிகம் உள்ள உணவுகளாகும்.
ஒமேகா-3-கொழுப்பு அமிலம் - தோல் சுருக்கம், தோல் அழற்சி, சிரங்கு போன்றவைகள் வராமல் தடுப்பதுடன், தோலின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவு கூட்டுகிறது. மேலும், தோலில் ஏற்படும் காயங்கள், சீராய்ப்புகள் ஆகியவற்றை சரி செய்யவும் துணைபுரிகிறது. பிளாக்ஸீட் எனப்படும் ஆளிவிதை, காலா, மத்தி போன்ற மீன்கள், மீன்எண்ணெய்கள், வால்நட் ஆகியவற்றில் இந்த கொழுப்பு அமிலம் காணப்படுகிறது.
துத்தநாகம் (Zinc) – இறந்த செல்களை நீக்கி, காயமடைந்த செல்களை சரிசெய்வதுடன், புற ஊதா கதிர்களிடமிருந்தும் தோலை பாதுகாக்கிறது. இந்த தாது உப்பு குறைந்தாலும் முகப்பருக்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எண்ணெய் சுரப்பிகளை ஒழுங்கு படுத்தும் முக்கிய வேலையையும் துத்தநாகச்சத்து செய்கிறது. பரங்கி விதை, இஞ்சி, பருப்பு வகைகள், கடல் உணவுகள், காளான், முழுதானியங்கள் ஆகியவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.
உணவு மட்டுமல்லாது, முறையான உடற்பயிற்சி, நிறைய நீர் (ஒருநாளைக்கு 3 லிட்டர்) அருந்துதல், மனஅழுத்தம் மற்றும் உளைச்சலின்றி மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருத்தல், குறைந்தபட்சம் ஏழு மணிநேரம் நன்றாக உறங்குதல், மலச்சிக்கல் இல்லாமல் உடலைப் பேணுதல் ஆகியவைகளும் ஆரோக்கியமான தோலைப் பெறுவதற்கு வழிவகைசெய்யும். 
- டாக்டர். ப. வண்டார்குழலி இராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, 
காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com