Enable Javscript for better performance
இருமுறை இதய தானம் பெற்றவர்!- Dinamani

சுடச்சுட

    
    REENA-RAJU

    உடலுறுப்புகளை தானமாக அளிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானமாக அளித்து, தானமாக பெற்று உயிர் வாழ்பவர்கள் மற்றவர்களைப் போல் மகிழ்ச்சியோடு ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தலாம் என்பதை உணர்த்துவதற்காகவும் உலக அளவில் "வோர்ல்ட் டிரான்ஸ்பிளாண்ட் கேம்ஸ்' நடத்தப்படுகிறது.
     2017-ஆம் ஆண்டு லண்டன் நியூ கேஸல் என்ற இடத்தில் நடந்த இந்தப் போட்டியின் போது, இந்தியாவிலிருந்து முதன்முதலாக 38 வயதாகும் ரீனா ராஜ், டீம் இந்தியா சார்பில் உடலுறுப்புகளை தானமாக பெற்ற 17 விளையாட்டு வீரர்களுக்கு தலைமை ஏற்றுச் சென்று தானும் போட்டிகளில் கலந்து கொண்டார்.
     இதில் என்ன ஆச்சரியம் என்றால் ரீனா ராஜ் ஒருமுறை அல்ல இருமுறை மாற்று இதய அறுவை சிசிச்சைப் பெற்றவராவார். இதன் மூலம் உடலுறுப்புகளை தானம் அளிக்கவும், மாற்று உடலுறுப்புகளைப் பெற்றவர்கள் பயமின்றி சகஜமாக வாழ்க்கை நடத்த முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென கருதும் ரீனா ராஜ், "லைட் எ லைஃப் ரீனா ராஜ் பவுண்டேஷன்' என்ற அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பொன்றையும் நிறுவியுள்ளார்.
     டீம் இந்தியாவில் உடலுறுப்புகளை தானமாக பெற்ற 11 பேர் மற்றும் உடலுறுப்புகளை தானமாக வழங்கிய 3 பேர் என 14 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள மாற்று உடலுறுப்புகளை தானமாக பெற்ற ஆண்களும், பெண்களும் அதிக அளவில் பங்கேற்க முன்வர வேண்டும் என்று கூறும் ரீனா ராஜ், முன்னாள் டிராக் அன்ட் பீல்ட் அத்லடிக் மற்றும் ஹாக்கி வீராங்கனையாவார்.
     2006- ஆம் ஆண்டு இவருக்கு இதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மாற்று இதயம் கிடைத்தவுடன் 2009-ஆம் ஆண்டு இதய மாற்று சிகிச்சை மேற்கொண்டார். கர்நாடகாவில் முதன்முதலாக இதய தானம் பெற்றவர் இவர்தான். 2017-ஆம் ஆண்டு மீண்டும் இதயத்தில் பிரச்னை ஏற்பட்டபோது இரண்டாவது முறையாக இதய தானம் பெற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்தியாவில் ஒரே நபர் இருமுறை இதய தானம் பெற்ற வரும் இவரேதான்.
     நான் இருமுறை இதய தானம் பெற்று மறு ஜென்மம் எடுத்ததற்கு தானம் வழங்கியவர்கள் மட்டுமல்ல, இருமுறை எனக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்த பிரபல இதய நிபுணர் டாக்டர் கே.எம். செரியன் மற்றும் அவரது குழுவினரும் தான் காரணம். நோய் தொற்று ஏற்படாமல் என்னுடைய உடல் மாற்று இதயத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆரோக்கியத்துடன் வோர்ல்ட் டிரான்ஸ்பிளான்ட் கேம்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது'' என்று கூறும் ரீனா ராஜ், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டியின்போது, இந்தியாவின் சார்பில் உடலுறுப்பு தானம் பெற்று விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை அதிக அளவில் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
     எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் டீம் மேனேஜராக நியமிக்கபட்டவுடன், போட்டியில் பங்கேற்பவர்களுக்கான பெயர் பதிவு தொடங்கியபோது இவருக்கு ஸ்பான்சர் செய்ய எந்த ஒரு நிறுவனமும் முன்வரவில்லை. மேலும் இரண்டாவது முறையாக இதய மாற்று அறுவை செய்து கொண்டதால் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இருப்பினும் தனது பவுன்டேஷன் உதவியுடன் டீம் இந்தியாவுக்கு தலைமை ஏற்று வீரர்களை அழைத்துச் சென்றார்.
     மேலும் உடலுறுப்பு மாற்று சிகிச்சைப் பெற்றவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டுமென்றால், சொந்த செலவில் பயிற்சி பெற வேண்டியுள்ளது. தற்போது சில நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்யவும் நிதியுதவி அளிக்கவும் முன் வந்துள்ளன. நிறுவனங்களின் நிதியுதவி மூலமாக மட்டுமின்றி தன்னுடைய பவுன்டேஷன் மூலமாகவும் வசதியற்றவர்களுக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறார் ரீனா ராஜ். இருமுறை இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரீனாராஜ் ஏற்கெனவே விளையாட்டு வீராங்கனை என்பதால், மாற்று இதயத் துடிப்புடன் 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவ், மாரத்தான் ஓட்டம், சைக்ளோதோன்ஸ், நீருக்கடியில் நடப்பது போன்ற விளையாட்டுகளில் துணிச்சலுடன் பங்கேற்று முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.
     உடலுறுப்பு தானம் பெற்றவர்களும், தானம் அளித்தவர்களும் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் வாழமுடியும் என்பது பற்றி மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி அரசாங்கமும் பிரசாரம் செய்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச உடலுறுப்பு தான விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் உடலுறுப்பு தானம் குறித்து இந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க முன் வர வேண்டும் என்கிறார் ரீனாராஜ்.

     - பூர்ணிமா
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai