Enable Javscript for better performance
என் பிருந்தாவனம்! 33- Dinamani

சுடச்சுட

  
  BRINDHAVAN_THODAR

  இவ்வளவு அன்பு கொண்ட தங்கராசுவிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து போவதைவிட அவன் காலடியிலேயே உயிரை விட்டுவிடலாம் போல் தோன்றியது கௌசிகாவிற்கு.
  அம்மா சொன்னது போல் அப்பா கடை வைத்து கொடுக்கவும் வேண்டாம். தானும் தன் கணவனோடு அங்கே போய் வாழவும் வேண்டாம். இனி இதுதான் என் ஊர். இங்கே இவரோடு வாழும் வாழ்க்கையே தனக்குப் போதும் என்று நினைத்தாள். 
  தன் குற்றத்தை உணர்ந்த கௌசிகா, தன் கணவன் கோபம் தீர்ந்து தன்னுடன் பேசும் வரை பொறுமையாக காத்திருப்பது என்று முடிவு செய்தாள். 
  இரண்டு நாள் வரையிலும், தன் அறையை விட்டு வெளியே வராமலும், யாருடனும் பேசாமலும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். 
  அவள் தான் பேசியதைப் பற்றி யாரிடமும், எதுவும் சொல்லாததும், அறைக்குள்ளேயே அடைந்து கிடந்ததும், தங்கராசுவுக்கு அவள் மீது இரக்கத்தை உண்டு பண்ணியது. அவளைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் போலிருந்தது. ஆவலில் அவள் இருக்கும் அறைக்குப் போய்விட்டு பின் தன்னைக் கட்டுப்படுத்தியவாறு திரும்பியிருக்கிறான். அவளைப் பார்த்து பேசினால் எங்கே தன் வைராக்கியம் போய் விடுமோ என்று அஞ்சினான்.
  எதுவாக இருந்தாலும் முடிவு அவளுடையதாகவே இருக்கட்டும். அவளே வந்து சொல்லும் வரை காத்திருப்போம் என்று நினைத்தான். 
  ஆனால், கௌசிகாவிற்கோ எந்த தடுமாற்றமும் இல்லை. அவள் தன் கணவனை விட்டு பிரிந்து விடக் கூடாது என்று தீர்மானமாக இருந்தாள். 
  என்னதான் படித்திருந்தாலும், ஆணுக்குப் பெண் நிகரென்றாலும் வருங்காலத்தில் இந்த நாட்டிற்கு சீதனமாக, பொக்கிஷமாக ஒழுக்கமும், படிப்பும், அறிவும் சார்ந்த பிள்ளைகளை பெற்றுத்தர வேண்டிய கடமை இன்று வரை பெண்களைத்தான் சார்ந்து இருக்கிறது. அதனால்தான் நாட்டில் அம்மாவிற்கு முதலிடம் உள்ளது. பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக வளர்க்க தாயும் சிறந்தவளாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவள். இனியும் மௌனமாக இருப்பதில் அர்த்தம் இல்லை. 
  இன்று எப்படியும் தன் எண்ணத்தை தங்கராசுவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தவள், எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தாள். 
  விடிந்ததுமே வேலைக்குப் போகும் அவசரத்தில் கமலம் எந்தப் பொருளையும் ஒதுங்க வைக்காமல் அப்படி, அப்படியே போட்டுவிட்டு போயிருந்தாள். 
  வாழ்க்கையில் முதன்முதலாக அடுப்படியிலிருந்த சட்டி, பானைகளெல்லாம் எடுத்துப் போட்டு சுத்தமாக விளக்கி வைத்தாள். வீட்டைப் பெறுக்கி கழுவிவிட்டாள். அப்போதுதான் தனக்கு கோலம் போடக் கூட தெரியாது என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது. 
  அந்த நேரத்தில் கௌசிகாவிற்கு அவள் அம்மா மீதுதான் கோபம் வந்தது. சின்ன, சின்ன வேலைகளைக் கூட தனக்கு சொல்லிக் கொடுக்காமல் செல்லமாக வளர்த்துவிட்டாரே, இதையெல்லாம் அம்மாதானே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள்.
  தனக்கு தெரிந்த வரை அடுப்பு மேட்டின் மீது இரண்டொரு கோடுகளை இழுத்தாள். அதுவே அழகாயிருந்தது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, நிமிர்ந்தாள்.
  எப்போதும் ஃபேன் காற்றிலேயே உட்கார்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு இத்தனை வேலை செய்ததில் வியர்த்துக் கொட்டியது. அடுப்படியில் இருந்த கதவு வழியாக சில்லென்று காற்று வீச, வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். 
  தாலி கட்டி வந்த நாளிலிருந்து முழுமையாக அவள் வாழ வந்த வீட்டைக் கூட சுற்றிப் பார்க்காதவள், இப்போதுதான் சுற்றும்,முற்றும் பார்த்தாள். பூக்களும், காயும் நிறைந்திருந்த தோட்டத்துடன் கூடிய அந்த வீடு அழகாய் தெரிந்தது அவளுக்கு. 
  குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்தவள், தங்கராசு ஒருமுறை டவுனுக்கு போய்விட்டு வந்தபோது வாங்கி வந்து தந்த பருத்தி சேலையை எடுத்து கட்டிக் கொண்டாள். அடுப்படிக்குச் சென்று அங்கே இருந்த இரண்டு தூக்கு போனியில் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு பிஞ்சையை நோக்கி நடந்தாள்.
  வழியெங்குமிருந்த பிஞ்சைகளில், ஆண்களும், பெண்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அங்கங்கே இருந்த மரங்களின் கிளைகளில் கட்டிய தொட்டில்களில் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன. 
  பச்சை வர்ணம் பூசியது போன்று இருந்த அந்த வயல்களில், பல வண்ணங்களில் குருவிகள் அங்குமிங்கும் பறந்து திரிந்தன.
  ரம்மியமான இந்த காட்சிகளையெல்லாம் இத்தனை நாள் தன்னால் ரசிக்க முடியாமல் போனது தனது முட்டாள்தனத்தினால்தான் என்று நினைத்தவளுக்கு, எப்போது தன் பிஞ்சை வரும், தன் புருஷன் தங்கராசுவைப் பார்ப்போம் என்று ஆவலாக இருந்தது. 
  கௌசிகா தன் பிஞ்சையின் முக்கில் திரும்பும்போதே தங்கராசு பார்த்துவிட்டான். அவனுக்கு அவளைப் பார்த்ததும் இந்த வெயிலில் இரண்டு கைகளிலும் தூக்கு போனியை வேறு எடுத்துக் கொண்டு இவள் எதுக்காக இங்கே வருகிறாள் என்று எண்ணியவன். அவள் இந்த வெயிலில் ஒத்தையாக வருவதை நினைத்து துடித்தான்.
  அருகில் இருந்த சங்கரியிடம், "அம்மா இதோ வாரேன்'' என்று சொல்லிவிட்டு அவளை நோக்கி ஓடினான். 
  ஏதும் புரியாமல் அவன் ஓடிய திசைக்காக பார்த்த சங்கரி, 
  "ஆத்தாடியாத்தா முத்தத்து வெயிலு மொகத்தில படாம அரங்கு வீட்டுக்குள்ள இருந்த புள்ள இப்ப எதுக்கு இந்த வேவாத வெயில்ல வருது'' என்று கூறியவாறே மகன் பின்னாலேயே வேகமாய் நடந்தாள்.
  இதற்குள் புருஷனைக் கண்டதும் அவன் முகத்தைப் பார்த்தவாறே நடந்து வந்த கௌசி, வரப்பில் கால் தவறி ஒரு பக்கமாய் சரிந்து விழுந்தாள். கீழே விழுந்ததில் அவள் அணிந்திருந்த இரண்டு ஹீல்ஸ் செருப்பும் தனித்தனியே போய் விழுந்தது. கையிலும், கால் முட்டியிலும் சிராய்ப்பு ஏற்பட.
  தங்கராசுவின் உயிரணுக்கள் மொத்தமும் துடிக்க, வேகமாக ஓடிவந்தான். 
  அதற்குள் கௌசிகா, அவசரமாய் எழ முயன்றவள், அந்த இடம் முழுக்க படர்ந்திருந்த நெருஞ்சி முள்ளில் கால் ஊன்றிவிட மீண்டும் தடுமாறி விழ, அதற்குள் அங்கு ஓடி வந்த தங்கராசு, "அது முள்ளுச் செடி மிதிக்காதே'' என்றவாரே பாய்ந்து வந்து அவளைஅலக்காக தூக்கி அந்தப் பக்கத்தில் வைத்தான்.
  - அடுத்த இதழில் நிறைவுறும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai