கண்டாங்கி சேலைக்குக் கிடைத்த அங்கீகாரம்!

தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் கண்டாங்கிச் சேலைக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளது
கண்டாங்கி சேலைக்குக் கிடைத்த அங்கீகாரம்!

தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் கண்டாங்கிச் சேலைக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளது. 
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனித்துவமாகத் தயாரிக்கப்படும் பொருளுக்குப் புவி சார் குறியீடு தகுதி வழங்கப்படுகிறது. இப்படி ஊர் பெயருடன் தயாராகும் பொருளுக்கு என்று தனி விலை சந்தையில் கிடைக்கும். அதற்குக் காரணம் அந்தப் பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மை. 
புவி சார் குறியீடு கொடுப்பதால் மற்ற யாரும் அந்த பெயரை பயன்படுத்தி அந்தப் பொருளை விற்க முடியாது. உற்பத்தி செய்பவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக் கிடைக்கிறது. 
விவசாயப் பொருட்கள், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள், கை வேலை கொண்டு உருவாக்கப்படும் பொருட்களுக்குப் புவி சார் குறியீடு கிடைக்கும். இந்த ரக பொருட்கள் அந்தப் பகுதியில் மட்டுமே கிடைப்பது உறுதிப்படுத்த பட வேண்டும். 
திருப்பதி லட்டு, டார்ஜிலிங் டீ, நாக்பூர் ஆரஞ்சு உள்ளிட்ட பல பொருட்களுக்குப் புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு வகை காப்பி ரைட் என்று சொல்லலாம்.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் கலைத்தட்டு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், சேலம் வெண்பட்டு வேஷ்டி போன்ற பொருட்களுக்கு ஏற்கெனவே புவி சார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தற்போது காரைக்குடி கண்டாங்கிச் சேலை, திண்டுக்கல் பூட்டு ஆகிய இரண்டு பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பெண்கள் அழகை மேம்படுத்தும் இந்த கண்டாங்கிச் சேலைக்கு பல பெருமைகள் உண்டு. 
புடவை, சேலை, சீலை என்பது தெற்கு ஆசிய பெண்கள் உடுத்தும் மரபு வழி ஆடை. இது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேசம் போன்ற நாடுகளில் உள்ள பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்று. இது பல மொழிகளில் பல பெயர்களில் அறியப்படுகிறது.
ஜீன்ஸ் போன்ற நாகரீக ஆடைகள் வந்தாலும் கண்டாங்கிச் சேலையின் அழகே தனிதான். ஆடைகளைப் பொருத்தவரை காலத்திற்கு ஏற்ப, சமூகத்திற்கு ஏற்ப, மாறுபட்டே வந்துள்ளது. தென் இந்திய வரலாற்றைப் பொருத்தவரை இந்திய மக்கள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், சீனர்கள் தொடர்பு ஏற்பட இந்திய மக்களின் ஆடையிலும், கலாசாரத்திலும் அவர்களின் தாக்கம் ஏற்பட்டது. பெண்கள் சேலை கட்டும் பழக்கம் என்பது பண்டைய கிரேக்கர்கள் காலத்தில் இந்தியாவுக்கு வந்திருக்கும் என்று கருதப்படுகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிந்து சமவெளி நாகரீக காலப்பகுதியில் சேலை ஓர் ஆடை என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கி.பி 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு மகாராஷ்டிராவின், அஜந்தா குகை ஓவியங்களில் பெண் தெய்வங்கள் உடல் முழுவதும் சேலை சுற்றப்பட்டு இருந்தன. கையால் தைக்கப்படும் ஆடைகள் தூய்மை அற்றவை என்று கருதினார்கள். 
கி.மு. முதலாம் நூற்றாண்டில் கிரேக்கர்கள், பராசீகர்கள் பண்பாடு இந்திய பெண்களைப் பெரிதும் கவர்ந்தது. உடலை சுற்றி கட்டுகிற தைக்கப்படாத ஆடைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது. சேலைகளைப் பட்டு நூலால் செய்யும் பாரம்பரியம் தென் இந்தியாவில் தோன்றியது. பட்டுக்களின் புகழிடமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூர், மைசூர் மாறியது. 
கல்லூரிப் பெண்களை கவர்ந்தவை
காஞ்சிபுரம் கண்டாங்கிப் பட்டுச் சேலையில் இருந்து உருவானது தான் காரைக்குடி காட்டன் கண்டாங்கிச் சேலைகள். இது 250 ஆண்டுகள் பழமையானது. முதலில் செட்டிநாட்டை சேர்ந்தவர்களின் எண்ணத்தில் உதித்த வடிவத்தில் உருவாக்கப்பட்டது. இதனுடைய தனித்தன்மைகள் என்னவென்றால், எளிய நிறம், பாரம்பரிய டிசைன், உடம்பை உறுத்தாத தன்மை, எளிதில் கசங்காது. மேலும் வெயில், குளிர் இரண்டிற்கும் ஏற்றது. 
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் செட்டிநாடு ஆச்சிமார்கள் விரும்பி அணியும் ஒரே ரகப் புடவை கண்டாங்கிச் சேலை மட்டுமே. முன்பு பெரியவர்கள் மட்டும் உடுத்தி வந்த கண்டாங்கிச் சேலையை தற்போது கல்லூரிப் பெண்களும் விரும்பி அணிகிறார்கள். 

கண்டாங்கிச் சேலையின் சிறப்புகள்
காரைக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் இன்றும் கண்டாங்கிச் சேலை நெசவு உற்சாகமாக நடந்து வருகிறது. குறிப்பாகக் கண்டாங்கி நெசவு தொழில் செய்வது பெண்கள் மட்டுமே. தாமரைப்பூ, இலை, கோபுரம், மயில், யானை, டைமண்ட் பல உருவங்களில் டிசைன்களாக வைத்து கண்டாங்கிச் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.
ஐநூறு ரூபாயிலிருந்து கிடைக்கும் இந்தக் கண்டாங்கிச் சேலைகள் இரண்டு பார்டர்கள் கொண்டவை. நடுவில் கட்டம் பேட்டதாகவும் அமைந்துள்ளது. இப்படி புகழ் வாய்ந்த காரைக்குடி கண்டாங்கிச் சேலைகள் நகரத்தார் மூலம் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது பிரபலமடைந்தது. வேறு எந்த சேலைகளிலும் இல்லாத வகையில் 48 இஞ்ச் அகலம் கொண்டது. ஐந்தரை மீட்டர் நீளம் கொண்டது. 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மட்டுமல்லாமல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும் இது தயார் செய்யப்படுகிறது. மூன்று தலைமுறையினர் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு மேலாக இதனைத் தயாரித்து வருகிறார்கள். 
பெண்களின் கெண்டைக்கால் பகுதியில் இந்தச் சேலையின் பார்டர் பளிச்சிடுவதால் தான் கண்டாங்கிச் சேலை என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். 
தயாரிப்பது எப்படி?
1939-ஆம் ஆண்டில் காரைக்குடி கண்டாங்கிச் சேலை சுத்தமான 40 எண் ரக பருத்திநூல் கொண்டு தயாரிக்கப்பட்டது. கட்டினால் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் இவ்வகைச் சேலைகளை ரசனையான கலப்பு இல்லாமல் தயாரித்தனர். நாளடைவில் 60 எண் மற்றம் 80 எண் ரக பருத்தி நூலைக் கொண்டு தூய பருத்தி சேலைகளாகத் தயாரித்தார்கள். 
இன்றைய இளைய தலைமுறை பெண்களுக்கு பேவரேட்டாக மாறியுள்ளது காரைக்குடி கண்டாங்கிச் சேலைகள். நிறம் மங்காது. அணிவதற்கு எளிதானது. சிறப்புத் தோற்றம் தருவது, தூய பருத்தி என்பதால் எளிதில் வியர்வை உறிஞ்சி சருமத்தை பாதுகாப்பது போன்றவை இதனுடைய வெற்றிக்கான மூல மந்திரம் என்பது பலரும் அறியாத ரகசியம்! 
-வனராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com