சமையல்! சமையல்!

தஞ்சாவூர் கடப்பா, வாழைப் பூ மசாலா குழம்பு, மசாலா ரிப்பன் பக்கோடா, புதினா வடை 

தஞ்சாவூர் கடப்பா 

தேவையானவை:
பயத்தம் பருப்பு - 100 கிராம் ( வேக வைத்தது)
பொட்டுக் கடலை - 50 கிராம்
சோம்பு, கசகசா - 1 மேசைக்கரண்டி
டால்டா - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் -5
பூண்டு -1
இஞ்சி - சிறு துண்டு
பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை தலா - 2
தேங்காய்த் துருவல் - முக்கால் கிண்ணம்
உருளைக்கிழங்கு, கேரட் நறுக்கியது - 2 கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: பச்சை மிளகாயை எண்ணெய் விட்டு வதக்கி, பொட்டுக் கடலை, கசகசா, தேங்காய்த் துருவல், சிறிது சோம்பு, 6 பூண்டு பல், பாதி அளவு இஞ்சி சேர்த்து ஒன்றாக அரைக்கவும். மீதமுள்ள பூண்டு, சோம்பை நசுக்கி கொள்ளவும். வாணலியில் டால்டாவை விட்டு சூடானதும் கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை, பட்டை, மிதமுள்ள சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். கேரட், கிழங்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கும்போது வேக வைத்த பருப்பு உப்பு கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கவும். தஞ்சாவூர் கடப்பா தயார்.

வாழைப் பூ மசாலா குழம்பு 

தேவையானவை: 
மிகச்சிறிய வாழைப்பூ - 1
பெரிய வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் -2
தக்காளி - 3
நசுக்கிய பூண்டு -6
சோம்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தாளிப்பு வடகம் - சிறிதளவு 
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி மோர் கலந்த நீரில் வைக்கவும் (கறுக்காமல் இருக்க), தேங்காய்த் துருவல், சோம்பு சிறிது சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பூண்டு, தாளிப்பு வடகம் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, வாழைப் பூ சேர்த்து குறைவான தீயில் வதக்கவும். 
பின் புளி கரைசலுடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்ததும் தேங்காய் விழுது, கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாழைப் பூ மசாலா குழம்பு தயார். 

மசாலா ரிப்பன் பக்கோடா 

தேவையானவை:
கடலை மாவு, அரிசி மாவு, ரவை - தலா 1 கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
டால்டா - 2 மேசைக் கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: மேலே உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்று சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முறுக்கு நாழியில் ரிப்பன் அச்சைப் பொருத்தி மாவை நிரப்பி பிழிந்து எடுக்கவும். சுவையான மசாலா ரிப்பன் பக்கோடா தயார்.

புதினா வடை 

தேவையானவை: 
கடலை பருப்பு, 
வெள்ளை பட்டானி - தலா 1 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 4
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
புதினா - 1 கட்டு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: கடலைப் பருப்பை 1மணி நேரமும், பட்டானி பருப்பை 3 மணி நேரமும் ஊற வைத்து, மிளகாய் வற்றல் , மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, ஆய்ந்த நறுக்கிய புதினா சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசால் வடை போன்று தட்டி பொரித்து எடுக்கவும். சுவையான புதினா வடை தயார். 
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com