21 நாட்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?

கரோனா தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தற்காப்பு மற்றும் சுயக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் ஒன்றுதான் இப்போது அளிக்கப்பட்டிருக்கும் 21 நாட்கள் விடுமுறை. பொது சுகாதாரத்திற்கும் உடல்
21 நாட்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?


கரோனா தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தற்காப்பு மற்றும் சுயக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் ஒன்றுதான் இப்போது அளிக்கப்பட்டிருக்கும் 21 நாட்கள் விடுமுறை. பொது சுகாதாரத்திற்கும் உடல் நலனிற்கும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்று பார்க்கலாம்.
பணிக்குச் செல்லும் பெண்களும், வீட்டு வேலைக்கு ஆட்களை நியமித்து இருக்கும் இல்லத்தரசிகளும், இப்போது இரண்டுமே இல்லாததால், தாங்களாகவே துணி துவைத்தல், பெருக்குதல், துடைத்தல் போன்ற அன்றாட வீட்டு வேலைகளைச் செய்து கொள்ளலாம். வேலைகள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 100 முதல் 300 கலோரிகளைக் குறைக்க வல்லது. உடல் எடையைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்பவர்கள் இவற்றுடன் கூடுதலாக உடற்பயிற்சிகளையும் செய்து கொண்டு, உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொண்டால் உடல் எடையைக் குறைக்கலாம். 
பணிக்குச் செல்லாமலும், வெளியில் செல்லாமலும் இருப்பதால், உடலுக்கு உழைப்பின்றி, உடல் எடை அதிகரித்து விடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கூடுமானவரை நார்ச்சத்துள்ள காய்களை உண்ணுவதும், முழுதானிய வகை உணவுகளை எடுத்துக் கொள்வதும், இறைச்சி மற்றும் இனிப்பு வகைகளைக் குறைத்துக் கொள்வதும் உடல் எடையைக் கூட்டாமல் வைத்திருக்கும். வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கோ அல்லது கணவருக்கோ, வயிற்றுப்புண், நீரிழிவு, இதயநோய்கள் அல்லது பிற நோய்கள் இருப்பின் அதற்கேற்றார்போல் பக்குவமாக உணவு தயாரித்து அக்கறையுட னும் அன்புடனும் பரிமாறும் நாட்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
முதலில் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கி எழும் பழக்கத்திற்கு மாறிவிடுங்கள். ஏனெனில் இப்போது இருக்கும் பணி அழுத்தத்தில், பல்வேறு கவலைகளில், மனிதர்களிடையே தூக்க குறைந்து, மேலும் மன அழுத்தத்தை அதிகரித்து, நோய்களை வரவழைத்து விடுகிறது. ஆழ்ந்த தூக்கமும் ஓய்வும் உள்ள நாட்களாகவும், குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் மகிழ்ந்திருந்து மனதை மென்மையாக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். நிம்மதியான ஆழ்ந்த நித்திரையும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். 
சுமார் 30 முதல் 50 வருடங்களுக்கு முன்பு நமது தாத்தா பாட்டி, பெற்றோர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பின்பற்றிய பாரம்பரிய உணவுகளான அதிரசம், கொழுக்கட்டை, பணியாரம், கருப்பட்டி சேர்த்த உணவுகள், புட்டு, உருண்டைகள், ஆப்பம் போன்றவற்றை நேரமில்லை என்னும் காரணத்தினால் இப்போதிருக்கும் நடுத்தர வயது பெண்கள் செய்வதில்லை. குழந்தைகளுக்கும் அது பற்றி தெரியவில்லை. இந்த விடுமுறை நாட்களில் அவற்றை ஒன்றொன்றாகக் செய்து, பருவ வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கும் செய்முறையைக் கற்றுக் கொடுத்து, குடும்பத்திலிருக்கும் அனைவரும் உண்ணலாம். மனதிற்கு நிறைவைத் தருவதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். 
உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள் இந்த இரண்டு வாரங்களை ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 3000 கலோரி சர்வ சாதாரணமாக உணவு மூலமாக சேர்கிறது எனில், வாரத்திற்கு அரைகிலோ உடல் எடை கூடிவிடும். மேலும், வேலை வேலை என்று வெளியில் செல்லாமல் ஓய்வில் இருப்பதாலும், நல்ல தூக்கம் இருப்பதாலும், மகிழ்ச்சியில் இருக்கும் உடல் சர்வ சாதாரணமாக ஆரோக்கியமான நிலையில் உடல் எடையை அதிகரிக்க உதவிடும். இவற்றுடன் சேர்த்து, பழச்சாறு, மில்கஷேக், முட்டை, நெய், சுண்டல், பால், பாதாம், வால்நட், முந்திரி, தேங்காய், எள் போன்றவற்றை சற்று கூடுதலாக சேர்த்து உணவாக எடுத்துக் கொண்டால் உடல் எடையை அதிகரித்துக் கொள்ளலாம். 
யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி போன்றவற்றைத் தெரிந்திருந்தும், செய்யாமல் இருப்பவர்கள் இந்நாட்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, உடலை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நமக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
மனதையும் உடலையும் புத்துணர்வாகவும், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் ஒரு கலைதான் தோட்டக்கலை. மாடியில் உள்ள செடிகள், தோட்டம் இப்படி எதுவாக இருந்தாலும் அதன் பராமரிப்பை இந்நாட்களில் செய்வதுடன், குறைந்த நாட்களில் வளரும் கொத்துமல்லி, வெந்தயம், புதினா என்று விதைத்தும், நட்டுவைத்தும் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
ஒரு நாளைக்கு ஒரு ஜன்னல், சுவர்அலமாரி, அறை என்று ஒவ்வொன்றாக சுத்தம் செய்து கொள்வதால் வீட்டிலும் சுகாதாரத்தைப் பேணலாம். இரு சக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் கழுவுவதே 150 கலோரி முதல் உடலிலிருந்து எடுத்துவிடும் என்பதால், வீட்டு வாசலில் அல்லது வாகனம் நிறுத்துமிடங்களில் வைத்தே சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டைத் துடைக்கும்போது, ரெடிமேட் கிருமிநாசினிகளையும், சுத்தம் செய்யும் பிற பொருட்களையும் தவிர்த்து, மூன்று வாரங்களுக்கு நாமே இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி எளிமையாகச் செய்யலாம். ஒரு வாளி தண்ணீருக்கு, இரண்டு எலுமிச்சை பழச்சாறு, அரை கையளவு கல் உப்பு சேர்த்து கரைத்துவிடவும். இதனுடன், வீட்டுத் தோட்டத்தில் ரோஜாவும், மல்லிகைப்பூவும், மருதாணிப்பூவும் இருந்தால் அவற்றை மற்றும் சிறிது வேப்பிலையுடன் அரைத்து, இரண்டு ஜக்கு தண்ணீரில் கலந்து வடிகட்டி, அதை மீண்டும் எலுமிச்சை கலந்த தண்ணீரில் சேர்த்து வீட்டைத் துடைக்கலாம். அப்போது பரவும் நறுமணத்தில், நமது மனமும் பரவசமடைவதுடன், வீட்டிற்குச் சிறந்த கிருமிநாசினியாகவும் இருப்பதைப் பார்க்கலாம். 
எண்ணெய்க் குளியல் என்பதே மறந்துபோய்விட்டது. அவசரத்தில் ஷாம்பு மட்டும் தேய்த்து அரைகுறையாக அலசிவிட்டுச் செல்வதே வாடிக்கையாகிவிட்டது. இப்போது கிடைத்துள்ள நேரத்தில் வீட்டிலிருக்கும் அனைவரும் முழு எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாது, வீட்டிலேயே அரைத்த சீயக்காய் உள்ளிட்ட கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான பொடியையும், குளியல் பொடியையும் பயன்படுத்தி ஒரு நல்ல குளியல் எடுப்பதாலும், செம்பருத்திப் பூ, வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றைப் பயன்படுத்திக் குளிப்பதாலும் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.
கையிலிருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ஊறுகாய், தொக்கு, பொடி வகைகள், வீட்டிலேயே தயாரிக்கும் ரெடிமேட் மிக்ஸ் வகையறாக்களை தேவையான அளவில் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். 
கோடை வெய்யில் நன்றாக இருப்பதால், கூடுமானவரை வற்றல் மற்றும் வடகம் போன்றவற்றை தயாரித்து வைத்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம். பக்குவமாகப் போடத் தெரிந்தவர்களுக்கு, நேரமிருப்பதில்லை என்ற குறையிருக்கும். அதை நிவர்த்தி செய்து நாமே தயாரித்த வற்றல், வடகம் என்று பணிக்குச் சென்றபின்னர், சுவைக்கக் கொடுத்து சபாஷ் வாங்கிக் கொள்ளலாம். 
நீண்ட நாட்களாக செய்ய வேண்டும், செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்து, முடியாமலிருக்கும் பெரிய வேலைகளை அல்லது சிறு சிறு வேலைகளை சரியாகத் திட்டமிட்டு, உங்களுக்கும், வீட்டிலிருக்கும் பிறருக்கும் சிரமமில்லாமல் ஒவ்வொன்றாகச் செய்து முடிக்கலாம். 

- முனைவர். ப. வண்டார்குழலி இராஜசேகர் ஊட்டச்சத்து நிபுணர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com