600 பேருக்கு கண்பார்வை கொடுத்தவர்!

கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள மதுகிரி நகரத்தை சேர்ந்த லதா நாராயண், 1991- ஆண்டுமுதல் மக்களிடையே கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், இதுவரை 608 விழித்திரைகளை
600 பேருக்கு கண்பார்வை கொடுத்தவர்!


கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள மதுகிரி நகரத்தை சேர்ந்த லதா நாராயண், 1991- ஆண்டுமுதல் மக்களிடையே கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், இதுவரை 608 விழித்திரைகளை ( கார்னியா) தானமாக பெற்று 600 பேருக்கு பார்வையை மீட்டுக் கொடுத்துள்ளார்.

இவரது தந்தை சத்தியநாதன் பாரம்பரிய வைத்தியர் - பள்ளியில் படிக்கும்போது எஸ்.எஸ்.எல்.சி, மற்றும் பியூசியில் முதல் வகுப்பு மாணவியாக தேர்ச்சிப் பெற்ற லதா, டாக்டருக்கு படிக்க விரும்பினார். அந்த ஆசை நிறைவேறாமல் போனாலும், இறந்தபின் கண்தானம் அளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற சமூக உணர்வோடு செயல்பட துவங்கினார்.

திருமணத்திற்குப் பின் 1990- ஆம் ஆண்டு தன்னுடைய மாமனார் காலமானபோது அவரது கண்களை தானமாக வழங்க நினைத்த லதா நாராயண் விருப்பம் நிறைவேறவில்லை. இறந்தவர் உடலிலிருந்து கண் விழித்திரைகளை அகற்றும் திறமையான நிபுணர்கள் யாரும் மதுகிரியில் இல்லை. அதனால் இறந்தவர்களின் கண்களிலிருந்து பாதுகாப்பாக விழித்திரைகளை அகற்றி எப்படி எடுப்பது என்ற பயிற்சியை கண் மருத்துவர்கள் மூலம் கற்றுணர்ந்தார். பின்னர் மதுகிரியில் மட்டுமின்றி சுற்றுப் பகுதிகளிலும் யாராவது இறந்தால், தனக்கு தகவல் கிடைத்தவுடன் இறந்தவர் வீட்டிற்குச் சென்று, இறந்தவரின் உறவினர் சம்மதத்துடன், இருபது நிமிடங்களுக்குள் விழித்திரைகளை பாதுகாப்புடன் அகற்றி உடனடியாக பெங்களூரில் உள்ள நாராயணா நேத்ராலயாவுக்கு அனுப்பத் தொடங்கினார். சில சந்தர்ப்பங்களில் இறந்தவர் உடலிலிருந்து கண்களை எடுக்க உறவினர்கள் அனுமதிக்க மறுப்பதுண்டு. அவர்களை சமாதானப்படுத்தி, கண்களை தானமாக பெறுவதன் மூலம் பார்வை இழந்த பலர் கண்பார்வை பெறுவதை எடுத்துக் கூறி சம்மதம் பெற்று விழித்திரைகளை சேகரிப்பதுண்டு. இதற்காக இவர் அரசு சாரா பெண்கள் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, இந்த சேவையை செய்து வருகிறார். 

பொதுவாக இறந்தவர் உடலிலிருந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள் விழித்திரைகள் அகற்ற வேண்டும். இதில் இறப்பவர் ஆண், பெண் வித்தியாசமோ, வயது, எந்த ரத்தப்பிரிவு என்பதோ, கண்ணாடி அனிந்தவரோ, கேட்ராக்ட், நீரிழிவு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் சரி, இறந்தவுடன் கண்களை தானமாக அளிக்க தகவல் தரலாம். விழித்திரைகளை அகற்றும் பணி 20 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.

மனித உடலிலுள்ள உறுப்புகளிலேயே நமக்கு பார்வை அளிக்கும் கண்கள் மிகவும் முக்கியமானதாகும். கண்கள் மீது படர்ந்துள்ள விழித்திரைகள் நம்முடைய பார்வைக்கு முக்கியமாகும். இந்த விழித்திரைகள் நாளடைவில் பலமிழக்கும் போதோ, பார்வையை இழக்கும்போதோ தானமாக பெறப்படும் விழித்திரைகளை பொருத்துவதன் மூலம் மீண்டும் பார்வையை பெறமுடியும். என்பதால் தான் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

லதா நாராயணை பொருத்தவரை, இப்பணியை காலம் நேரம் பார்க்காமல் சமூக உணர்வோடு செய்து வருகிறார். 2015- ஆம் ஆண்டு தன்னுடைய மகளின் திருமண வரவேற்பின்போது, இறந்தபோன ஒருவரின் கண்களை தானமளிக்க அவரது உறவினர்கள் தகவல் அளித்தனர். நல்லகாரியம் நடக்கும்போது இறந்தவர் வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று பலர் தடுத்தனர். கணவர் கொடுத்த அனுமதியின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று கண்களை தானமாக பெற்றுவந்தார். லதா நாராயணைப் போலவே, இவருடைய மகன் வருணும், தாய்க்கு உதவியாக கண் விழித்திரைகளை பாதுகாப்பாக அகற்றுவதில் தேர்ச்சிப் பெற்றுள்ளார். 

இதுவரை 600 பேருக்கு பார்வையை மீட்டுக் கொடுத்துள்ள லதா நாராயணை பாராட்டி வடக்கு டெல்லி கல்சுரல் அகாதெமி மற்றும் மாவட்ட ராஜ்யோத்சவா விருதுகள் வழங்கபட்டுள்ளன. தொடர்ந்து கண்தானம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தன்னுடைய லட்சியம் என்கிறார் லதா நாராயண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com