தொற்றுகளை தவிர்ப்போம்!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களுக்கு மறுபயன்பாட்டு முறையை உருவாக்கி, அந்தப் பொருள்களை விற்பதற்காகவே "கோலிசோடா' என்ற அங்காடியையும்
தொற்றுகளை தவிர்ப்போம்!


சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களுக்கு மறுபயன்பாட்டு முறையை உருவாக்கி, அந்தப் பொருள்களை விற்பதற்காகவே "கோலிசோடா' என்ற அங்காடியையும் நிறுவிவுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன். இவர் 2002- ஆம் ஆண்டின் மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது திரைத்துறையில் ஆவணப்பட இயக்குநராகவும் வலம் வருகிறார். 

இவருடன் உரையாடியதிலிருந்து...

மறுசுழற்சி பொருள்களுக்காக ஓர் அங்காடி? இதற்கான எண்ணம் வந்தது எப்படி? வரவேற்பு எப்படியிருக்கிறது? 

எங்கள் வீட்டின் வாசலில் குப்பைத் தொட்டி ஒன்று கிடக்கிறது. அது அடிக்கடி நிரம்பி வழிந்து கிடக்கும். இதனால் அவ்வப்போது மாநகராட்சியிடம் சண்டைப்பிடித்துக் கொண்டே இருப்பேன். ஒருகட்டத்தில் என் வீட்டிலிருந்து வெளியேற்றிய குப்பையும் அதில்தானே இருக்கிறது. இதற்காக மாநகராட்சியையும், அரசாங்கத்தையும் குறைச் சொல்வதைவிட நம் வீட்டில் இருந்து வெளியேற்றும் குப்பையைக் குறைக்க முடியுமா என்று யோசித்தேன். அப்படி உதயம் ஆனது தான் இந்த மறுசுழற்சி முறைக்கான யோசனை. 

இப்படிச் மறுசுழற்சி செய்யும் பொருள்களை நான் பயன்படுத்துவதோடு அல்லாமல் மற்றவர்களும் பயன்படுத்தும்படி கொண்டு வர நினைத்து, இதைத் தொழிலாகவே யோசிக்கத் தொடங்கினேன். அதில் உருவானதுதான் "கோலி சோடா'.

ஏனென்றால், இந்த மறுசுழற்சி (R​E​C​Y​C​L​E), மறுபயன்பாடு (R​E​C​Y​C​L​E) என்பது, குறிப்பிட்ட பொருளின் தன்மையை மாற்றி, வேறொரு பொருளாக உருமாற்றி விற்பனை செய்வது. பிளாஸ்டிக் பாட்டிலைத் தூக்கி எறியாமல், குப்பையிலும் போடாமல், அதை "ப்ளவர் வாஷ்' ஆக மாற்றி உபயோகிப்பது மறுபயன்பாடு. இப்படி நாம் தூர எறியும் ஒவ்வொரு மக்காத தன்மைக்கொண்ட பொருளையும், வேறொரு பொருளாக மாற்றிப் பயன்படுத்தினால், பூமியில் மக்காத குப்பைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, சுற்றுச்சூழலும் காக்கப்படும்.

"கோலி சோடா' ஆரம்பித்து தற்போது 8 ஆண்டுகளை கடந்துவிட்டோம். முன்பு இருந்ததைவிட இப்போது இதற்கான விற்பனை சந்தை ஓரளவு விரிவடைந்துள்ளது. ஆனால், வீட்டின் அருகேயுள்ள சின்னச் சின்ன கடைகளிலும்கூட மறுபயன்பாடு மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் கிடைத்தால் மட்டுமே, அது பெரியளவில் சுற்றுச்சூழலுக்குக் கைகொடுக்கும்.

மறுபயன்பாட்டில் உங்களின்பிரத்யேக தயாரிப்புகள் என்னென்ன? அதன் பயன்கள்?

தற்போது எங்களிடம் அதிக வரவேற்பில் உள்ள பொருள்கள் என்றால் , மூங்கிலால் ஆன டூத்பிரஷ், தேங்காய் நாரில் நவீனமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் தேய்க்கும் ஸ்கரப்பர், நியூஸ் பேப்பர் பென்சில், காய்கறிகள் வாங்கும் சிறிய துணிப்பை. இந்த துணிப்பையில் வைக்கும் காய்கறிகள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும். இதைத் தவிர ப்ரோ பயோ தயாரிப்புகளாக, பாத்திரம் தேய்க்கும் சோப், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூ பாரில் 3 வெரைட்டி, துணி பேட்- அதைத் துவைக்க தனியாக ஒரு சோப், மேக்கப் ரீமூவர் பிரஷுக்கான சோப் போன்றவற்றை எந்த கெமிக்கலும் சேர்க்காமல், இயற்கை பொருள்களைக் கொண்டு தயாரிக்கிறோம். ப்ரோ பயோ தயாரிப்புகள் என்பது இந்த பொருள்களை பயன்படுத்தும்போது, இதன் கழிவுகள் கழிவு நீர் தொட்டியில் சென்று கலக்கும் அல்லவா, அப்படி கலக்கும்பொழுது கழிவு நீர் தொட்டியில் இருக்கும் நீருடன் கலந்து வினைப்புரிந்து அந்த நீரில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து, அந்த நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றுகிறது. அதுபோன்று நாம் நார்மல் ஷாம்பூ பயன்படுத்தும்போது, தலையை அலச தண்ணீர் நிறைய தேவைப்படும். இந்த ஷாம்பூ சோப் பயன்படுத்தும்போது தண்ணீரின் அளவும் குறைகிறது. மேலும், கடைகளில் விற்கும் நீர் பதத்தில் உள்ள ஷாம்பூகள் அடைத்து வைக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் தேவைப்படுகிறது. அது எல்லாம் இதில் தேவையில்லை. மேலும், இந்த சோப் வகைகளை பேக் செய்யும் பேப்பர்களும் இயற்கையான பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். ஆரம்பத்தில் பெசன்ட்நகரில்தான் தொடங்கினோம். தற்போது ஆழ்வார்பேட்டையில் தொடங்கியிருக்கிறோம். இதைத்தவிர, அமேசான், பிளிப்கார்ட் ஈக்கோ ஃபிரெண்ட்லி கடைகள் போன்றவற்றிற்கும் ஆன் லைன் ஷாப்பிங்கும் 5 வருடமாக செய்து வருகிறோம். இதனால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. 

திரைத்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

2002-ம் ஆண்டின் "மிஸ் சென்னை'யாக தேர்வு செய்யப்பட்டேன். அதன்மூலம் சுமார் 100 விளம்பர படங்களுக்கு மாடலாக வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய "சஹானா' என்ற சின்னத்திரை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், நடிப்பில் இருந்து சற்று விலகி டைரக்ஷன், ஸ்கிரிப்ட் ரைட்டிங் மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என கமர்ஷியல் படங்கள் சிலவற்றில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அந்தச் சமயத்தில்தான் தில்லியில் 90 வயதை கடந்து வாழ்ந்து வரும் பிரபல மூத்த ஓவியக் கலைஞரான கிஷண் கண்ணனை பற்றி "ஏ ஃபார் ஆஃப்டர்னூன்' (அ ஊஹழ் அச்ற்ங்ழ்ய்ர்ர்ய்) என்ற ஆவணப்படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றேன். அதன்பின் ஆவணப்பட இயக்குநராகவே அறியப் பட்டேன். இதையடுத்து, சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் "ஹார்மோனி' என்ற மியூசிக் வெப் சீரிûஸ இயக்கியுள்ளேன். 

காற்று மாசுபாடு குறித்து?

அந்த காலத்தில் பூமா தேவி, கங்கா தேவி என நிலம், நீர், காற்று எல்லாவற்றையும் தெய்வமாக வழிபட்டோம். ஆனால், காலச்சூழலால் அது எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நவீனத்தைப் புகுத்துவதாக எண்ணி இந்த பூமியை நாசம் செய்துவிட்டோம். நான் சிறு வயதில் குளித்து விளையாடிய நீர்நிலைகள் இப்போது இல்லை. அப்படியே இருக்கும் ஒன்றிரண்டும் மாசுப்பட்டு பயன்படுத்தமுடியாமல் கிடக்கிறது. அதுபோலவே வாகன பெருக்கத்தினால் ஏற்பட்ட காற்று மாசு இதெல்லாம்தான் நமது தட்பவெட்ப நிலையை சீரழித்து அந்தந்த பருவக்காலங்களில் நடைபெற வேண்டிய பருவ மாற்றங்கள் எல்லாம் நிகழாமலும், காலம் தவறி நிகழ்வதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. இதுவே, பூமி அதிர்ச்சி, சுனாமி, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறோம். 

தற்போது கரோனாவினால் ஊரடங்கு நிலை உள்ள இந்த ஒரு வாரத்தில் தில்லியில் இருந்து ஒரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. அங்கிருந்த காற்று மாசு 95 சதவிகிதம் குறைந்து சுத்தமான காற்று ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள். 

அதனால் இந்த நேரத்திலாவது மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நாம் தொலைத்துவிட்ட இயற்கை வாழ்விற்கு மீண்டும் திரும்ப வேண்டும் அப்போதுதான் வருங்காலத்திற்கும், நமது அடுத்த தலைமுறைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை கொஞ்சேமேனும் நம்மால் கொடுக்க முடியும். இந்த தருணத்தில் மக்கள் ஒவ்வொருவரும் நமது சுற்றுச் சுழலை சுத்தமாகப் பாதுகாத்து தொற்றுகளை தவிர்ப்போம்'' என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com