பசுமையை மீட்டெடுத்தவர்!

நாட்டை பாதுகாக்கும் பெண் காவலர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். காடுகளை பாதுகாப்பதிலும் பெண்களின் பங்கு முக்கியமானது மட்டுமல்ல அவர்களின் சேவையும் பாராட்டுக்குரியது. இந்திய வனத்துறை
பசுமையை மீட்டெடுத்தவர்!


நாட்டை பாதுகாக்கும் பெண் காவலர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். காடுகளை பாதுகாப்பதிலும் பெண்களின் பங்கு முக்கியமானது மட்டுமல்ல அவர்களின் சேவையும் பாராட்டுக்குரியது. இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுதா ராமன் தனது அபாரமான சேவையால் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றுள்ளார்.

சுதாராமன் செய்தது தான் என்ன?

சில ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் பூங்காவிலுள்ள ஏரி வறண்டு காணப்பட்டது. தற்போது பசுமையாக காணப்படும் ஏரிக்கு பல ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன. அதற்கு காரணமானவர் சுதாராமன். இந்திய வனத்துறை பெண் அதிகாரி இவர். பயோ மெடிக்கல் இன்ஜினியரான இவர் இயற்கை மீது கொண்ட ஆர்வத்தால் இந்திய வனத்துறை பணியில் சேர்ந்தவர். காட்டு விலங்குகள் பற்றியும் நன்கு தெரிந்தவர். 

இனி அவரே பேசுகிறார்:

"கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம் ஆராயப்பட்டது. அதில் ஏரிகள் நதிப்படுகைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் 2016 -ஆம் ஆண்டு வர்தா புயல் ஏற்பட்டதிலிருந்து இந்த ஏரி முற்றிலும் வறண்டு இருந்தது. நான் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏரியில் தூர் வாரும் பணியை செய்யத் தொடங்கினோம். அக்டோபர் மாதம் மழை பெய்யத் தொடங்கியது டிசம்பரில் பறவைகள் வர ஆரம்பித்தன. எங்களுடைய கஷ்டமெல்லாம் அந்த பறவைகளை பார்த்ததும் போய் விட்டது. 

ஆரம்பத்தில் இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவியதாலும் மழைப்பொழிவு இல்லாததாலும் முற்றிலும் வறண்டு இருந்தது. ஏரியை தூர் வாரும் பணி என்பது அத்தனை எளிதானதல்ல. தனியார் செய்தாலும் அரசு செய்தாலும் பொருட்செலவிலும் பணியாட்கள் வேலையும் ஒன்று தான்.

ஏரி குளம் தூர்வாரும் போது களிமண்ணை அப்புறப்படுத்திவிடக்கூடாது. களிமண் தண்ணீரை இருப்பில் வைத்து அருகாமைப் பகுதிகளுக்கு நீர் ஊற்றைக் கொடுக்கிறது. களிமண் இல்லையென்றால், தண்ணீர் முழுவதும் நிலத்தில் விரைவில் இறங்கி விடும்.

எனவே களிமண் இல்லையென்றால் அங்கே களிமண்ணைக் கொட்டி பரவலாக்கி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

களிமண் மெதுவாகத் தண்ணீரை நிலத்தின் உள்ளே கொண்டு செல்லும் தன்மை உடையது. 

ஏரிகள் நிலத்தடி நீரை மீண்டும் நிரப்பி மண் அரிப்பைத் தடுப்பதுடன் பல்லுயிர்களையும் பாதுகாக்கிறது. எனினும் சமீப காலமாக நகரமயமாக்கல், தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பு, விஞ்ஞானபூர்வமற்ற முறையில் கழிவுகளை அகற்றுவது போன்ற பல்வேறு காரணங்களால் நீர்நிலைகள் மறைந்து வருகின்றன. இனி வரும் காலங்களில் நீர் ஆதாரங்களை அழிந்து விடாமல் பாதுகாத்தால் தான் பறவை, விலங்கு இனங்களை பாதுகாக்க முடியும்'' என்கிறார். 

சுதாராமனின் செயல்பாடுகளால் பலர் தங்களது பகுதிகளில் உள்ள ஏரிகளையும் புதுப்பிக்க விரும்புகின்றனர். எனவே ஏரியை புதுப்பிக்கும் பணிக்கு பின்னால் மறைந்துள்ள ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளும்படியும் சுதாராமனிடம் கேட்டுள்ளனர். 

வடிகால் தடங்களை சரிசெய்வது, நீர்நிலைகளை தூர்வாருவது, கரையோரங்களில் மரங்களை நடுவது, அவற்றை நீராதாரங்களுடன் இணைப்பது என தான் செய்த பல்வேறு பணிகளை அவர் விவரித்துள்ளார். தூர்வாரும் பணி, பறவைகள் வந்து செல்வதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சுதாராமனின் செயல்பாடுகளால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பல ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com