கதை சொல்லும் குறள் - 4: சேவைக்காக மாலை!

""ஏங்க இங்க கொஞ்சம் வரீங்களா''  உரத்து குரல் கொடுத்தாள் விசாலாட்சி.
கதை சொல்லும் குறள் - 4: சேவைக்காக மாலை!

""ஏங்க இங்க கொஞ்சம் வரீங்களா''  உரத்து குரல் கொடுத்தாள் விசாலாட்சி.

வீட்டின் மொட்டை மாடியில் கூரை அமைத்து, அங்கே இருபது மாணவர்களுக்குக் குறைவில்லாமல் அமர்ந்திருக்க, அவர்களுக்கு கணக்குப் பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார், கணேசன்.

""பாடம் எடுக்கும்பொழுது கூப்பிடாதே என்று எத்தனை தடவ சொல்லுவது?'' கீழ்ப்படிக்கட்டில் நின்றுகொண்டு இப்படி நாகரிகம் இல்லாமல் கத்துவது கணேசனுக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை.

விசாலாட்சிக்கு இரட்டை நாடி சரீரம்,  படிக்கட்டு ஏறிமாடிக்குச் செல்வது என்றால் அவளுக்கு சிம்மசொப்பனம். இவ்வளவுக்கும் வயது நாற்பதைக்
கூடத் தாண்டவில்லை. ஒரே மகள் மாலதி எட்டாவது படிக்கிறாள், அவள்கூட கேலி செய்வாள்.

""அம்மா, கொஞ்சம் வாக்கிங் போயேன்'' என்பாள். 

""ஆமாண்டி, வீட்டு வேலையே கழுத்த நெறிக்குது. இதுலே வாங்கிங்தான் போகணும். உங்க அப்பா என்ன குபேரனா? எனக்கு வீட்டு வேலையைப் பார்க்க நாலு ஆட்களை வெச்சிருக்காரா? பேருதான் பெரிய கணக்கு வாத்தியார், வெறும் சம்பளம் வாங்கியாந்தா போதுமா, நாலு காசு டியூஷன்ல சம்பாதிச்சா என்ன? காசு வாங்காம டியூஷன் நடத்தற வாத்தியார் இவராகத்தான் இருப்பாரு''.”

""அம்மா, சும்மா அப்பாவைக் குறை சொல்லாதே. அவருக்கு எவ்வளவு நல்ல மனசு! நாம என்ன பட்டணத்திலேயா இருக்கிறோம், இந்த சின்ன கிராமமான "அத்திப்பட்டி'யிலே இல்ல வாழறோம். இங்கே எண்பது சதவீதம் பேரு விவசாயம்தானே பார்க்கிறாங்க. வானம் பார்த்த பூமி இதுன்னு அப்பா சொல்லுவாரு. மழையில்லேன்னா, விளைச்சல் இல்ல. ஏதோ, தங்கள் புள்ளைங்க நாலு எழுத்து படிக்கட்டும்னு அனுப்பறாங்க. கணக்கு சரியா போடத் தெரியாதவங்களைத் தேர்ந்தெடுத்து தினம் மாலை அப்பா டியூஷன் எடுக்கறாரு''.

""அம்மா தாயே, உன்கிட்ட வாயைக் கொடுத்தா அவ்வளவுதான்; அப்பா புராணத்தைப் பாட  ஆரம்பிச்சுடுவே. உங்க அப்பாவோட தயாள குணத்தைக் காட்ட'' 

""ஞாயிற்றுக்கிழமையிலும் பாடம் எடுக்கணுமோ'' என்று சபித்தபடி சொல்லிக்கொண்டே வந்து மீண்டும் படியருகே வந்து குரல் கொடுத்தாள்.

சர சரவென்று கணேசன் கோபத்துடன் படியிறங்கி வந்தார். ""இப்ப என்ன குடிமுழுகிப் போச்சுன்னு இப்படி கத்தற?''.

""ஆமாம், நான் கூப்பிட்டா கத்தறமாதிரிதான் இருக்கும், கொஞ்சம் பாய்கடை வரை போயி, ஆட்டுக்கறி கால்கிலோ  வாங்கியாங்க. தினமும் சைவம் சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு. இன்னைக்குக் கறிக்குழம்பு சாப்பிட ஆசையா இருக்கு''.

""நல்ல நேரம் பார்த்த கறிக்குழம்பு சாப்பிட, இன்னும் ஐந்து நாளிலே முழு பரீட்சை வரப்போகுதுன்னு புள்ளைங்களுக்கு முழு போர்ஷன்லேயும் டெஸ்ட் வெச்சிருக்கேன் இப்ப போய் கறி அது இதுன்னு''.

""ஆமாம், டியூஷன் எடுத்து சம்பாதிச்சு கிழிச்சது போதும், உங்களுக்கு சிலை வெச்சு, கும்பிடப்போறாங்க''.

""சே,  நீயும் உன் வாயும்'' என்று கடுப்பாக சொல்லிவிட்டு, மள மளவென்று படியேறி கணேசன் மீண்டும் வகுப்பு எடுக்கச் சென்றுவிட்டார்.

இன்றைக்கு கறிக்குழம்பு ஆசையில் மண் விழுந்த ஆத்திரத்தில் தொம் தொம் என்று பூமி அதிர தன் ஸ்தூல சரீரத்தைச் சுமந்தபடி, கணேசனைத் திட்டிக்கொண்டே சமையலறைக்குள் மறைந்தாள், விசாலாட்சி.

பன்னிரண்டாம் பரீட்சையின் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. அத்திப்பட்டி என்ற அந்தச் சிறிய கிராமத்தின் பெயர் எல்லாப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவந்தது. ஒரு சிறிய அரசாங்க பள்ளியில் பரீட்சை எழுதிய முப்பது மாணவர்களுமே கணக்கில் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் இருபது பேர் பெற்றிருக்க, மீதம் பத்துபேர் அறுபதுக்கும் மேல் மதிப்பெண்களை எடுத்திருந்தனர்.

தேர்வில் தோல்வி அடைந்த இரண்டு மாணவர்கள்கூட கணக்கில் வெற்றி பெற்றிருந்தனர். கடந்த சில வருடங்களில் கணக்கில் சரியான சதவீதத்தில் மாணவர்கள் மதிப்பெண் எடுக்காததால், இப்படி தன் வீட்டில் அவர்களை வரவழைத்து ஸ்பெஷல் கோச்சிங் கொடுத்து கணேசன் இந்த சாதனையை நடத்திக் காட்டிவிட்டார்.

தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் பேட்டி கொடுத்த மாணவர்கள் தங்களது வெற்றிக்கு ஆசிரியர் கணேசனையே சுட்டிக் காட்டினர். மாணவர்களின் பெற்றோர் மனம் மகிழ்ந்து போயினர்.

கணேசனுக்கு மாலை மரியாதைகள் செய்து, தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். தொலைக்காட்சியில் கணேசனை சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேட்டி கண்டனர். பேர் தெரியாமல் இருந்த அத்திப்பட்டி 
கிராமம் உலகளவில் புகழ்பெற்றது.

பல செல்வந்தர்கள், அத்திப்பட்டி கிராமத்து மாணவர்களின் எதிர்கால படிப்புச் செலவை ஏற்க முன்வந்தனர்.

விசாலாட்சி, பெருமை பொங்கும் முகத்துடன், கணவனுடனும் மகளுடனும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நின்றாள். பத்திரிகைகளில் தனது  குடும்ப புகைப்படத்தையும்,  கணவர் கணேசனின் சேவையைப் பற்றி புகழ்ந்து எழுதியிருப்பதையும் படித்து உள்ளம் குளிர்ந்தாள்.

தன்னலமற்ற தன்கடும் உழைப்பால் கணேசன் சாதித்ததை உலகம் போற்றிப் புகழ்ந்தது.

அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்
புறத்த; புகழும் இல.
(குறள் எண்: 39)

பொருள்:தூய்மையான நெஞ்சுடன்நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பம். பிற வழிகளில் வருவன துன்பமே, புகழும் ஆகாது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com