கலப்படம்  கண்டுபிடிப்பது  எப்படி?

உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பதை கண்டறிய எளிமையான சில வழிமுறைகள் உள்ளன.
கலப்படம்  கண்டுபிடிப்பது  எப்படி?


உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பதை கண்டறிய எளிமையான சில வழிமுறைகள் உள்ளன. அன்றாடம் நாம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களில் இருக்கும் கலப்படங்களை நாமே பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். உணவின் பாதுகாப்பே உயிரின் பாதுகாப்பு எனலாம். 

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படமே நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது. எந்த உணவுப் பொருள்களில் எதைக் கலப்படம் செய்திருக்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்து கொண்டே விரைவாக கண்டறிவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.  கலப்படம் குறித்து தகவல்கள்:

பாலில் நீர் கலந்திருந்தால்:

பளபளப்பான சாய்தளப் பரப்பின் மீது ஒரு சொட்டு பாலை ஊற்றவும். பாலாக இருந்தால் அப்படியே இருக்கும்; அல்லது வெண்மைத் தடம் பதித்து மெதுவாக கீழிறங்கும். நீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வெண்மைத் தடம் பதிக்காமல் உடனே கீழிறங்கி விடும்.

ஒரு  டம்ளரில் 5 அல்லது 10 மில்லி பால் மற்றும் அதே அளவுள்ள நீரை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக குலுக்கி கலக்கவும். பாலுடன் சலவைத்தூள் கலந்திருந்தால் தடிமமான படலம் உருவாகும். தூய பாலாக இருந்தால் மெலிதான படலம் உருவாகும். 

பாலில் கஞ்சிப்பசை கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய, 2 அல்லது 3 மில்லி மாதிரியை 5 மில்லி நீருடன் கலந்து கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு டிங்சர் அயோடினை 2 அல்லது 3 சொட்டுகள் சேர்க்கவும். கலவையில் நீல வண்ணம் உருவாகியிருந்தால் கஞ்சிப்பசை கலந்துள்ளது என்று அர்த்தம்.

நெய்யில்:

கண்ணாடிக் கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய்யோ அல்லது வெண்ணெய்யோ எடுத்துக் கொள்ளவும். டிங்சர் அயோடினை 2 அல்லது 3 சொட்டுக்கள் சேர்க்கவும். நீல வண்ணம் தோன்றினால் நெய்யில் பிசைந்த உருளைக்கிழங்கோ அல்லது வேறு கஞ்சிப் பசையோ கலந்துள்ளது என்பதை அறியலாம்.

காபித் தூளில்:

காபித்தூளில் சிக்கரி கலந்துள்ளதா என்பதை அறிய, ஒரு கண்ணாடி தம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளை சேர்க்கவும். காப்பித்தூள் மிதக்கும்; சர்க்கரைத் தூள் மூழ்கும்.

தேயிலையில் கலப்படத்தை அறிய:

வடிகட்டும் தாளை எடுத்து அதில் சில தேநீர் இலைகளைப் பரப்பி வைக்கவும். பின்னர் குழாய் நீரில் வடிகட்டித்தாளை கழுவவும். அதில் கறை இருந்தால் கலப்படம் என்பதை அறியலாம். தூய தேநீர் இலைகள் வடிகட்டித்தாளில் கறை இருக்காது. 

தேயிலைத்தூளில் இரும்புத் துகள்கள் கலந்துள்ளனவா 

என்பதை அறிய, ஒரு கண்ணாடித் தட்டில் சிறிதளவு தேநீர் இலைகளை எடுத்து வைத்துக்கொண்டு காந்தத் துண்டை அதனுள் நகர்த்தவும். தூய தேயிலையாக இருந்தால் இரும்புத் துகள்கள் இருக்காது. கலப்படத் தேயிலையாக இருந்தால் காந்தத்தில் இரும்புத் துகள்கள் ஒட்டியிருக்கும்.

பச்சை நிறத்தைச் சேர்த்திருந்தால்:

நீர் அல்லது தாவர எண்ணெய்யில் நனைத்தப் பஞ்சை எடுத்துக்கொண்டு அதை பச்சைக் காய் அல்லது மிளகாய் மீது தேய்க்கவும். பஞ்சு பச்சையாக மாறினால் பச்சை நிறக் கலப்படம்  உள்ளது என்று பொருள்.

மஞ்சள் பொடி:

மஞ்சள் பொடியில் செயற்கை வண்ணத்தை கலந்திருப்பதை அறிய, கண்ணாடி தம்ளரில் நீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியை சேர்க்கவும். இயற்கையான மஞ்சள் பொடி கீழிறங்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். கலப்பட மஞ்சள் பொடியாக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும். 

மஞ்சள் கிழங்கில் லெட் குரோமேட் வேதிப்பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை அறிய, கண்ணாடி தம்ளரில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு முழு மஞ்சள் கிழங்கைப் போடவும். தூய மஞ்சளாக இருந்தால் கிழங்கு நிறத்தை  வெளிக்  காட்டாது. கலப்பட மஞ்சளாக இருந்தால் பார்ப்பதற்கு பிரகாசமாகவும், நீர் மஞ்சள் நிறமாகவும் மாறி விடும்.

மிளகாய்ப் பொடியில் கலப்படமா?: 

ஒரு கண்ணாடி தம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய்ப் பொடியை தூவவும். மரத்தூள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். மிளகாய் பொடி நீரின் அடியில் தங்கும்.

மிளகில் பப்பாளி விதைகள் கலந்திருந்தால்..

சிறிதளவு மிளகை எடுத்து கண்ணாடி டம்ளரில் போடவும், தூய மிளகாக இருந்தால் டம்ளரின் அடியில் தேங்கும். கலப்பட மிளகாக இருந்தால் பப்பாளி விதைகள் நீரில் மிதக்கும்.

கடுகு விதையில்:

கண்ணாடித் தட்டில் சிறிதளவு கடுகை எடுத்துக்கொண்டு அதை கண்களால் உற்றுப் பார்க்கவும். கடுகு வழவழப்பான மேற்பரப்புடனும், உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். கடுகில் பிரம்ம விதைகள் கலந்திருந்தால் தானியங்கள் போன்று சொரசொரப்பான மேற்பரப்புடனும், கருப்பு நிறத்திலும் இருக்கும். அழுத்தினால் உட்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பெருங்காயத்தில்:

துருப்பிடிக்காத கரண்டியில் சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து நெருப்பில் எரிக்கவும். தூய பெருங்காயம்  கற்பூரம் எரிவது போல பிரகாசமான ஒளியுடன் எரியும். கலப்பட பெருங்காயம் அப்படி எரியாது.

தேனில் கலப்படம்:

கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். தூய்மையான தேன் நீரில் கலக்காது. தேன் நீரில் கலந்தால் அதில் சர்க்கரை கலப்படம் உள்ளது என்பதை உணரலாம்.

ஆப்பிள் மீது...:

ஆப்பிள் மீது மெழுகு பூசப்பட்டதை அறிய, ஒரு கத்தியை எடுத்து ஆப்பிளின் மேற்பரப்பைச் சுரண்டவும். மெழுகு தடவப்பட்டிருந்தால் அது கத்தியில் ஒட்டும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய, ஒளி புகக்கூடிய கண்ணாடி தம்ளரில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு அதை குளிர்சாதனப் பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும். குளிர்பதனம் ஆன பிறகு தேங்காய் எண்ணெய் திண்ம நிலைக்கு மாறும். கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வேறு எண்ணெய் தனிப்படலமாகத் தெரியும்.

கோதுமை மாவில்:

ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அந்த நீரின் மேற்பரப்பின் மீது கோதுமை மாவைத் தூவுங்கள். தூய கோதுமை மாவாக இருந்தால் நீர்ப்பரப்பின் மீது அதிகமான தவிடு இருக்காது.கலப்படக் கோதுமை மாவாக இருந்தால் நீர்பரப்பின் மீது அதிகமான தவிடு இருக்கும்.

பச்சைப் பட்டாணியில்:

ஒரு கண்ணாடி தம்ளரில் சிறிதளவு பச்சைப் பட்டாணியை எடுத்து அதில் நீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை மணிநேரம் அப்படியே நிலையாக வைத்திருக்கவும். நீரின் நிறம் மாறினால் அது கலப்படப் பட்டாணி என்பதை அறியலாம்.

உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பது தெரிய வந்தால் உணவின் தரம் பற்றிய புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். 

இ-மெயில் முகவரி:  unavupukar@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com