கதம்பம்!

மங்களுருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஆதி ஸ்வருபா, ஒரே நேரத்தில் தன் இரு கைகளையும் பயன்படுத்தி நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை எழுதும் திறமையைப் பெற்றுள்ளார்.
கதம்பம்!

இருகைகளாலும் எழுதும் திறமைசாலி!

மங்களுருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஆதி ஸ்வருபா, ஒரே நேரத்தில் தன் இரு கைகளையும் பயன்படுத்தி நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை எழுதும் திறமையைப் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் கோபால் கோபாட்கர் மற்றும் சுமாட்கர் நடத்தும் ஸ்வருபா அத்யாயனா கேந்திரா என்ற பள்ளியிலேயே படித்து வரும் ஆதி ஸ்வருபா, இரண்டரை வயது முதலே இருகைகளையும் பயன்படுத்தி ஒரே சமயத்தில் எழுதும் அபூர்வமான பழக்கத்தைக் கற்றுக் கொண்டாராம்.

நாளடைவில் தன்னுடைய கையெழுத்தை ஒரே மாதிரியாக எழுதாமல் ஒரே சமயத்தில் விதவிதமாகவும் எழுத கற்றுக் கொண்டார். இதுமட்டுமின்றி வலது கை வேகம், இடது கை வேகம், வலமிருந்து இடது பக்கமாக எழுதுவது. இடமிருந்து வலது பக்கமாக எழுதுவது, ஒரே நேரத்தில் இருகைகளாலும் சரிசமமான வேகத்தில் எழுதுவது என வித்தியாசமான பயிற்சிகளை பொது முடக்கத்தின்போது செய்து பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.

அது மட்டுமல்ல, ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதும் திறமையையும் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் ஆதி ஸ்வருபாவின் அபூர்வமான திறமையை பாராட்டி ஊக்கமளித்து வருகின்றனர். தன் மகளைப் போலவே தங்கள் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களையும் இருகைகளால் ஒரே சமயத்தில் எழுதவும், சித்திரம் வரையவும் ஆர்வமுட்டி வருவதாக கோபால் கோபாட்கர் கூறியுள்ளார்.

தன்னுடைய திறமைக்காக உலக சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ள ஆதி ஸ்வருபா, இந்துஸ்தானி சங்கீதம் பயில்வதோடு, யக்ஷகானா நாடகத்திலும் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.

- அ.குமார்


பணக்கார பெண்மணிகள்!


இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா முதலிடம் பெற்றுள்ளார். ரோஷினி ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ்நாடாரின் ஒரே மகள்.

இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணியாக பயோகான் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா உள்ளார்.

யூஎஸ்வி நிறுவனத்தின் தலைவர் லீனா காந்தி திவாரி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். யூஎஸ்வி என்பதும் மருந்து தயாரிப்பு நிறுவனம்தான்.

ஹுயுரன் இந்தியா கோடக் வெல்த் இணைந்து இந்தியாவின் முதல் 100 பணக்கார பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 31 பெண்கள் பெரிய அளவில் குடும்ப சொத்துகள், தொழில்கள் இல்லாமல் தாங்களாக உழைத்து பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பணக்காரர்களாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்களில் கிரண் மஜும்தார் ஷா முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஹோகோ நிறுவனத்தின் ராதா வேம்பு, மூன்றாவது இடத்தில் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஜெயஸ்ரீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

- கோட்டாறு ஆ.கோலப்பன்.

படகில் சென்று உணவு வழங்கும் பெண்!

கரோனா தொற்று காரணமாக, பொதுமுடக்கம் அறிவித்த காலத்திலிருந்து நர்மதை நதிக்கரையில் இருக்கும் இரண்டு பழங்குடி கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் யாரும் அங்கன்வாடி மையத்திற்கு வராததால், அவர்களுக்கான அங்கன்வாடி மைய ஊழியரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 27 வயதாகும் ரெலு வசவே, ஒரு சிறிய படகை வாடகைக்கு எடுத்து, தானாகவே படகை இயக்கிச் சென்று சத்துணவு வழங்கி வருகிறார். இவர் கொண்டு வரும் சத்துணவுக்காக கர்ப்பிணிப் பெண்களும், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளும் தினமும் காத்திருக்கின்றனர்.

- ரிஷி


சமையலில் உலக சாதனை..!

58 நிமிடங்களில் 46 உணவு வகைகளை சமைத்து அசத்தியிருக்கிறார் லட்சுமி சாய் ஸ்ரீ. சில வாரங்களுக்கு முன் விசாகபட்டணத்தைச் சேர்ந்த சான்வி பிரஜித் என்ற சிறுமி ஒரு மணி நேரத்திற்குள் 33 வகை உணவு வகைகளை சமைத்து ஆசிய சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

அந்த சாதனையை சென்னையைச் சேர்ந்த சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ சென்ற வாரம் (15 -12 -2020 ) முறியடித்துள்ளார்.

சாய் ஸ்ரீ 58 நிமிடங்களில் 46 உணவு வகைகளை "யூனிக்கோ புக் ஆ ஃப் வேர்ல்ட் ரெக்கார்டஸ்' நடுவர்கள் முன்னிலையில் சமைத்து அசத்தியுள்ளார். இது புதிய உலக சாதனையாக மாறியுள்ளது. சாய் ஸ்ரீக்கும் ஏறக்குறைய வயது பத்துதான்.

""பொதுமுடக்கக் காலத்தில் பள்ளி இல்லை. வீட்டில் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. அதை வீணடிக்காமல் சமையல் கலையைக் கற்றுக் கொண்டேன். அம்மா தான் சமையல் கலையைக் கற்றுக் கொடுத்தார். சான்வி பிரஜித் என்ற 10 வயது சிறுமி ஒரு மணி நேரத்திற்குள் 33 வகை உணவுவகைகளை சமைத்து நிகழ்த்திய ஆசிய சாதனையைப் பற்றி அப்பா என்னிடம் சொன்னார். "நீயும் சமையலில் உலக சாதனை செய்ய வேண்டும்' என்று ஊக்குவித்தார். அப்பா, அம்மா தந்த உற்சாகம் இந்த உலக சாதனையைச் சாதிக்க வைத்திருக்கிறது. நான் சமைத்த உணவுவகைகளில் தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைளும், நூடுல்ஸ், பிரெட்.. போன்ற நவீன உணவுவகைகளும் அடங்கும்'' என்கிறார் லட்சுமி சாய் ஸ்ரீ.

- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com