Enable Javscript for better performance
போட்டியாக யாரையும் பார்ப்பதில்லை!- Dinamani

சுடச்சுட

  

  போட்டியாக யாரையும் பார்ப்பதில்லை!

  By DIN  |   Published on : 05th February 2020 02:50 PM  |   அ+அ அ-   |  

  mm3

  "எனக்கு பூர்வீகம் கேரளா. அப்பா ராணுவத்தில் இருந்ததால், அவ்வப்போது டிரன்ஸ்பரில் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறோம். இதனால் வெவ்வேறு பள்ளியில் படித்துதான் வளர்ந்தேன். அப்படி மாற்றலில் வந்தபோது, சென்னை வந்தோம். எனக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க இங்கே செட்டில் ஆகிட்டோம்' என்கிறார் "தென்றல்' தொடரில் துளசி கேரக்டரில் "செல்ல குட்டிம்மா'வாக வந்து ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தவர், தற்போது "அழகு' தொடரில் வக்கீலாக நடிக்கும் ஸ்ருதி ராஜ். மேலும், அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
   "தென்றல்' தொடங்கி "அழகு' வரை வந்துள்ள இந்த பயணத்தில் என்ன கற்றுள்ளீர்கள்?
   2009-இல் தென்றல்தான் எனக்கு முதல் தொடர். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். சீரியலைப் பொருத்தவரை அப்போது எனக்கு எதுவுமே தெரியாது. எப்படி நிற்க வேண்டும், கேமராவை எப்படி பார்க்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் இருந்தேன். இப்போ அவற்றையெல்லாம் கற்றுக் கொண்டேன்.
   தென்றல் ஆரம்பித்த சமயத்தில், "இதற்கு முன்பு 5 ஆண்டுகள் தேவயாணியின் "கோலங்கள்' தொடர் ஒளிப்பரப்பான நேரம் இது. நீங்க இதை எப்படி செய்யப்போறீங்களோ, நல்லா இல்லன்னா அவ்வளவுதான்' என்று லோகேஷனில் இருந்த எல்லாரும் சொல்லி சொல்லி எனக்குள் என்ன செய்யப்போறோம், எப்படி செய்யப்போறோம் என்று பயம் வந்துவிட்டது.
   அதன்பின் தென்றலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்க மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் சிலர் என்னை "குட்டிம்மா' என்று கூப்பிடுகிறார்கள் என்றால் அந்த கேரக்டர் மக்கள் மனதில் எந்தளவு பதிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனக்கு "லைப்' கொடுத்தது தென்றல் சீரியல்தான், அதற்கு குமரன் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் அன்று அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுக்கவில்லை என்றால், இன்று ஸ்ருதி வெளியே தெரியாமலேயே போயிருப்பா.
   அதுபோன்று இப்போது "அழகு' சுதா. வக்கீலாக இருந்தாலும், வீட்டில் உள்ளவர்களுக்கு விட்டுக் கொடுத்து போகிற சாப்ட்டான கேரக்டர். சமீபத்தில் ஒருமுறை வெளியே சென்றிருந்தபோது, என்னை பார்த்த ஒரு அம்மா பக்கத்தில் வந்து என் கையைப் பிடித்துக் கொண்டு, "ஏம்மா பூர்ணாவுக்காக இவ்வளவு விட்டுக் கொடுக்கிற, கொஞ்சம் போல்டா பேசு, பிரச்னை அதிகமான கவலைப்படாதேம்மா, எங்க வீட்டுக்கு வந்துடு உன்னை நல்லா பார்த்துக்குறோம்'னு சொன்னாங்க. இதுபோன்ற ரசிகர்களை சந்திக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும். இதைத்தான் நான் இதுவரை கடந்து வந்த பயணத்தின் வெற்றியாக நினைக்கிறேன்.
   நிஜத்தில் ஸ்ருதி எப்படி?
   நிஜத்திலும் நான் சாப்ட்டான கேரக்டர்தான். ஆனால் அழகு சுதா அளவுக்கு பொறுமையாக இருப்பேனா என்பது தெரியாது.
   "அழகு' தொடரைப் பொருத்தவரை உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீங்க?
   போட்டியாக யாரையும் பார்ப்பதில்லை. ஒரு தொடரைப் பொருத்தவரை எல்லாமே டீம் ஒர்க்தான். எல்லாருமே அவுங்கவுங்க கேரக்டரை சரியா செய்தால்தான் தொடரை பார்க்க நேர்த்தியாக இருக்கும். இரண்டரை வருஷமா எல்லாருமே ஒன்னா ஒரே குடும்பம் மாதிரிதான் இந்தத் தொடரில் பழகிட்டு இருக்கிறோம்.
   சீனியர் ஆர்ட்டிஸ்ட்டான நடிகை ரேவதியுடன் நடிப்பது குறித்து?
   எனக்கு சின்ன வயதிலிருந்தே ரேவதி மேடத்தை ரொம்பப் பிடிக்கும். அதை நான் அவரிடமே பலமுறை சொல்லியிருக்கிறேன். சின்ன வயதில் அவங்களோட படம் பார்க்கறது. பாட்டு போட்டுகிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு டான்ஸ் ஆடிப் பார்ப்பதெல்லாம் செய்திருக்கிறேன். இப்போ அவங்களோடவே நடிக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவங்க என் கையைப் பிடிக்கும்போது, கட்டிப்பிடிக்கும் போது, ரேவதி மேடம் என்னை தொடுறாங்களேன்னு ஒருவித மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். அவங்க பெரிய நடிகையாக இருந்தாலும், அந்த நினைப்பே இல்லாமல் எல்லாருடனும் ரொம்ப இயல்பாக பழகுவாங்க. சின்ன சின்ன விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பாங்க. அவங்களைப் போலவே "தலைவாசல்' விஜய் சாரும் ரொம்ப இயல்பானவர். செட்ல ரொம்ப ஜாலியா அரட்டை அடிச்சுகிட்டு இருப்பார். அதுபோன்று காயத்திரி அக்கா, நானும், அவங்களும் அம்மா, பொண்ணாக நடித்தாலும், செட்ல ரொம்ப ஜாலியா இருப்போம். அதுபோன்று டைரக்டர் செல்வம் சார் ரொம்ப அன்பானவர். எப்போதும் எல்லாரையும் ஒரு "காம்போர்ட் ஜோன்'லயே வெச்சிருப்பார்.
   டயட் ரகசியம்?
   டயட் ரகசியம் என்று எதுவும் இல்லை. சாதத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்வேன். மற்றபடி எதுவும் தள்ளுபடி இல்லை. நல்லா சாப்பிடுவேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நல்லா தூங்குவேன். ஜஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும்.
   - ஸ்ரீ
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai