ஓடிச்சென்று உதவ முதுமை தடுக்கிறது! - கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - என்ற வள்ளலாரின் மீது பற்றும், சத்தியம் அஹிம்சை என்ற காந்தியத்தின் மீது நம்பிக்கையும், இந்த பூமி அனைவருக்குமானது உழைப்பவனுக்கே அது உரிமையானது
ஓடிச்சென்று உதவ முதுமை தடுக்கிறது! - கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - என்ற வள்ளலாரின் மீது பற்றும், சத்தியம் அஹிம்சை என்ற காந்தியத்தின் மீது நம்பிக்கையும், இந்த பூமி அனைவருக்குமானது உழைப்பவனுக்கே அது உரிமையானது என்று எளிய மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய வினோபா பாவே மீது பக்தியும் கொண்டு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்.
முதுமையால் தளர்ந்த உடல். ஆனால் தளராத நம்பிக்கை. சுருக்கம் நிறைந்த கைகள். இன்னும் பலரது வாழ்வை நிமிர்த்த உறுதி கொண்டுள்ளன. 
குரலில் தோன்றும் நடுக்கம் மொழியில் இல்லை. 94 வயதில் மனவலிமையும் தீர்க்கமான சிந்தனையும் கொண்டவரான இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதற்கேற்ப இவரின் மகனும் மகளும் மருத்துவர்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் சேவை மனப்பான்மை இவர்களுக்கும் இருக்கிறது.
நகைகள், பட்டுப்புடவைகளை தன் வாழ்நாளில் என்றும் அணியாதவர். கதராடை மட்டுமே அணிந்து ஒரு தபஸ்வினி போல வாழ்ந்து வருபவர் கிருஷ்ணம்மாள். அவர், தனது அனுபவங்களை, கடந்து வந்த பாதையை நம்மோடு பகிர்ந்து கொண்டார்:
"11 வயதில் அருட்பெருஞ்சோதி என்னை ஆட்கொண்டது. அன்றிலிருந்து சமரச சன்மார்க்கம் தான் என் கொள்கையாயிற்று. 14 -ஆவது வயதில் மதுரையில் செளந்தரம் அம்மாள் அறிமுகம் கிடைத்தது. ஆதரவற்ற கைம்பெண்களுக்காக அவர் ஆற்றிய தொண்டினை உடனிருந்து காணும் பாக்கியம் கிடைத்தது. அவருக்கும் என் மீது மிகுந்த அன்பு இருந்தது. 52 பெண்களை என் பொறுப்பில் விட்டு அவர்களுக்கு கல்வி கற்பிக்க சொன்னார். நானும் எல்லாருக்கும் "அ ஆ' சொல்லிக் கொடுப்பதில் தொடங்கி படிக்க உதவினேன். எல்லாரும் படித்து நான்காம் பாரத்தில் தேர்ச்சி பெற்று வேலையில் சேர்ந்து மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையுமாய் வாழ்ந்தார்கள். இது எனக்கும் ஒரு நல்ல பாடமாகவும் அனுபவமாகவும் அமைந்தது. செளந்தரம் அம்மாளின் தாயாரும் பெண்கள் படிக்க வேண்டும் அடுப்பங்கரைக்குள் அடைந்துவிடக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். எங்கள் கிராமத்திலேயே முதல் முதலாக கல்லூரிக்கு போன பெண் நான் தான். என் பெற்றோரும் அதற்கு துணை நின்றார்கள்.
அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். 1946 பிப்ரவரி 22 - ஆம் தேதி காந்தி மதுரை வந்திருந்தார். அப்போது திருவிழா போல மக்கள் குடும்பம்குடும்பமாக வந்து காத்திருந்தார்கள். செளந்தரம் அம்மாள் அன்றைக்கு காந்தியை பார்ப்பதற்கு என்னையும் அழைத்துப் போனார்கள். அவருக்கு சேவை செய்வதற்காக நாங்கள் அவரோடே தங்கியிருந்தோம். ஒருமுறை அவரது கையைப் பிடித்து அவரோடு நடந்தேன். அது ஓர் அற்புதமான தருணம். பழனிக்கும் அவரோடு பயணம் செய்தேன்.
ஆலயப் பிரவேசம் செய்த வைத்தியநாத அய்யர் சொந்த செலவில் மீனாட்சி ஹாஸ்டல் வைத்து 40 பெண்களை படிக்க வைத்து கொண்டிருந்தார். அங்கு தங்கி தான் நானும் படித்தேன். ஹாஸ்டலில் எங்களுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுப்பார். கக்கன்ஜியும் அவரோடு கூட இருப்பார். வைத்தியநாத அய்யர் வீட்டின் முற்றத்தில் எப்போதும் எங்களை போல படிக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுவார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களை எல்லாம் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தது.

புத்தர், வள்ளலார், விவேகானந்தர், பாரதி இவர்களைத் தான் அதிகம் படிப்பேன். இப்போது அதிகம் படிக்க முடியவில்லை திருவருட்பா மட்டும் தான் படிக்கிறேன். அப்போது கிருபானந்த வாரியார், வள்ளலார் கதையோடு அருட்பாவும் பாடுவார், அதைக் கேட்பது எனக்கு ஆனந்தமாய் இருக்கும். அப்போது தான் எனக்கு ஒரு மந்திர சொல் கிடைத்தது. "எல்லாம் செயல் கூடும் " என்ற அந்த மந்திர சொல் தான் இன்றும் எனக்கு நம்பிக்கை தந்து செயல்பட வைக்கிறது. எந்தப் பிரச்னையை கையிலெடுத்தாலும் இந்த மந்திரத்தைத் தான் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறேன். காரியம் சித்தியாகிறது.
1951-இல் சென்னையில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடங்களில் இன்ஸ்பெக்டர் வேலைக்கு காமராஜரிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. இப்படி வேலைக்குப் போய் என்னத்தை செய்யப் போகிறோம் என்று பேசாமல் இருந்துவிட்டேன். பிரார்த்தனை பண்ணிக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தினமணியில் வினோபா பாவேயின் பூதான இயக்கத்தை ஆதரித்து நிறைய எழுதுவார்கள். அதைப் படித்தபின் அவரோடு பணியாற்ற வேண்டுமென விழைந்தேன். அப்போது அவர் நாடு முழுவதும் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரோடு காசிக்குப் போய்ச் சேர்ந்து கொண்டேன். 
நிர்மலா தேஷ் பாண்டே, கேரளாவிலிருந்து ராஜம்மாள், குஜராத்திலிருந்து மீரா பட், தமிழகத்திலிருந்து நான், நால்வரும் ஒரே நாளில் வினோபா அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அங்கு தான் என் கடமை என்ன? எதற்காகப் பிறந்தோம் என்றே புரிந்தது. அற்புதமான அனுபவங்கள் நிறைந்த காலம் அது. வினோபா கூடவே அன்றாடம் நடந்தேன். கொஞ்சம் தயிர் தான் அவரது சாப்பாடு. வேறு எதுவும் சாப்பிட மாட்டார். பிரார்த்தனை நேரங்களில் திருவாசகம் பாடுவார். அர்ப்பணிப்பும் உன்னதமும் தியாகமும் தான் வினோபா. அவர் தங்கும் இடங்களில் பெரும் நிலப்பிரபுக்கள் தாங்களே வந்து நிலத்தை தானமாகக் கொடுப்பார்கள். சிலர் தங்களிடம் உள்ள சொற்ப நிலத்தையும் அவருக்கே சமர்ப்பித்து விட்டு அவரின் வழியில் நடக்கத் தொடங்கியதையும் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் தெய்வத்தின் காட்சி தான். 
ஜே.சி.குமரப்பா எங்கள் வீட்டய்யா (கணவர்) இருவரும் சகோதரர்கள் போல. குமரப்பா தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். எங்கள் வீட்டய்யா நிலங்களை பூதான இயக்கத்தில் போராடிக் கொண்டு வருவார். அதைக் கொண்டு எப்படி முனேற்றப் பணிகளை மேற்கொள்வது என்று குமரப்பா திட்டமிடுவார். 
தமிழ் நாட்டில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி இருக்கிறேன். எத்தனையோ அனுபவங்கள், ரணங்கள், துரோகங்கள், அடிகள், ஆனந்தம் கிடைத்திருக்கின்றன. சில அனுபவங்களை சொல்கிறேன். நிலமற்ற எளிய மக்களின் அதிலும் பெண்களின் துன்பங்கள் சொல்லி முடியாதவை. அவர்களின் முன்னேற்றம் சாத்தியமாக வேண்டும் என்று முதலில் "குலமாணிக்கம்' என்ற ஊரில் தான் போராடி நிலசுவான்தார்களிடமிருந்து நிலங்களை வாங்கி நிலமில்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தேன். தொடர்ந்து போராட்டங்களில் சிறை சென்றேன். சிறையில் கழிவகற்றும் வேலை வரை செய்து பல இன்னல்களையும் அனுபவித்தேன், என்னோடு பல பெண்களும் சிறைபட்டு துன்பப்பட்டனர். அவர்கள் வாழ்வெல்லாம் இன்றைக்கு முன்னேற்றம் கொண்டிருப்பதே மகிழ்ச்சி. 

திருவாரூர் மாவட்டத்தில் பல போராட்டங்கள். அப்போது எங்கள் வீட்டு அய்யாவோடு சேர்ந்து LAND FOR THE TILLERS FREEDOM 
அமைப்பைத் தொடங்கினோம். 1981இல் கிராம வளர்ச்சித் திட்டத்தில் 1112 ஏக்கர் நிலத்தை வங்கி கடனில் பெற்று 1112 குடும்பங்களுக்கு வழங்கினோம். 19 கிராம மக்கள் இதனால் பயனடைந்தனர். அதன் பின் நான்கு ஆண்டுகள் போராடி 5000 ஏக்கர் நிலங்களை 175 நில உடமையாளர்களிடம் இருந்து பெற்று 5000 குடும்பங்களுக்கு வழங்கினோம். எத்தனை சோதனைகள் வந்தாலும் பயம் எனக்கு வந்ததில்லை. பிரார்த்தனை ஒன்றினாலேயே எல்லாவற்றையும் கடந்து விடுவேன். 
ஒரு கிராமத்தில் நில உடமையாளர் வீட்டின் முன் போய் அங்கிருந்த சிதிலமான கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து விட்டேன், சாப்பாடு, தண்ணீர் எதுவும் கிடையாது. மூன்று நாட்கள் இருந்த இடத்தை விட்டு அசைய வில்லை. அதைப் பார்த்தவர் சாப்பாட்டைத் தட்டில் எடுத்துக் கொண்டு வந்து வைத்து "சாப்பிட்டுவிட்டு என்ன வேண்டுமோ கேள்' என்றார்கள். மனிதர்களின் மனதில் அன்பும் மனிதாபிமானமும் இருப்பதற்கு இதை விட வேறென்ன சொல்ல இருக்கிறது? 
கீழ வெண்மணி படுகொலை நடந்த அன்று நல்ல நிலா பகல் போலக் காய்ந்துகொண்டிருந்தது. தூக்கம் இல்லை. மனதில் எதோ தவிப்பு. அப்படியே வெட்ட வெளியில் அமர்ந்து விடியும் வரை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். காலையில் பத்திரிகை வந்தது. செய்தி தெரிந்ததும் குன்றக்குடி அடிகளாருக்கு சொல்லி அவர் கொண்டு வந்த வண்டியில் எங்க வீட்டு அய்யா கூட கீழ வெண்மணிக்குப் போய் சேர்ந்தோம். அந்த மக்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். கீழவெண்மணி முழுவதும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தது. மக்கள் பயத்தோடு இருந்தார்கள். யாரையும் அங்கே தங்க போலீஸ் அனுமதிக்க மாட்டார்கள். அந்த மக்களுக்கும் என்னாலான உதவிகளை செய்திருக்கிறேன். அந்த மக்களும் என்னுடன் வருவார்கள். சொல்ல முடியாத வேதனைகளும் துயரங்களும் நிறைந்த காலம் அது. 
நாங்கள் போராடிய காலத்திற்கும் இன்றைக்குத் தமிழகம் இருப்பதையும் பார்த்தால் அன்று இருந்த அவலம் இப்போது இல்லை. நில உடமையாளர்களும் மாறி விட்டார்கள், உழைப்பாளர்களும் தெளிவாய் இருக்கிறார்கள். இனி யாரும் யாரையும் துன்பப்படுத்த முடியாது. ஆனால் இப்போது பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் செய்திகள் என்னை நிலைகுலைய செய்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளைப் பார்த்தால் அன்பு மிகுந்து அந்தக் குழந்தைகளைக் கொஞ்ச வேண்டுமென்று தானே மனம் விரும்பும், எப்படி இந்தக் குழந்தைகளை பலாத்காரம் செய்யவும் கொலை செய்யவும் மனம் வருகிறது? ஆனால் வயோதிகத்தின் காரணமாக என்னால் ஓடி சென்று உதவ முடியவில்லையே என்று வேதனைப் படுகிறேன். (சொல்லும் போதே குரல் உடைந்து கண்களில் நீர் தளும்புகிறது.)
"இப்போது என்ன செய்கிறீர்கள்?' என்றால், வேதாரண்யம் தலைஞாயிறில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் பணியில் இருக்கிறேன். இந்த விருது (பத்ம பூஷண்) கிடைத்திருப்பது இந்த வேலை நல்லபடியாக முடிய வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். டெல்லிக்குப் போனால் அங்கே அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் எல்லாரையும் பார்த்து இந்த வீடுகளைக் கட்டி முடிக்க உதவி பெற்று வரவேண்டும். மாதா அமிர்தானந்த மயி அவர்களை சந்திக்கப் புறப்படுகிறேன் என்று ஆயத்தமாகிறார். அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு முன்னேற இன்னொரு தலைமுறை முன் வந்தால் புதிய இந்தியா சாத்தியம் தான் என்ற நம்பிக்கை நம் மனதிலும் நிறைகிறது.
- கோதை ஜோதிலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com