கால்பந்தாட்டத்தில் சாதனை..!

பெண்கள் விளையாட்டில் முத்திரை பதிப்பது இன்றைக்கு சாதாரணமாக நிகழ்வது. புகழ் பெற்ற வெளிநாட்டு கால்பந்து அமைப்பிற்காக தேர்வு பெறுவது என்பது
கால்பந்தாட்டத்தில் சாதனை..!

பெண்கள் விளையாட்டில் முத்திரை பதிப்பது இன்றைக்கு சாதாரணமாக நிகழ்வது. புகழ் பெற்ற வெளிநாட்டு கால்பந்து அமைப்பிற்காக தேர்வு பெறுவது என்பது இந்திய ஆண் நட்சத்திர விளையாட்டு வீரர்களுக்கு கூட கனவுதான். சவால் தான். எளிதில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. நிதர்சனம் இப்படி இருக்கும் போது , வெளிநாட்டின் புகழ் பெற்ற கால்பந்தாட்ட கிளப் ஒன்றிற்காக விளையாடப்போகும் "முதல் இந்திய வீராங்கனை' என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருப்பவர் கங்கோம் பாலா தேவி.
 இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையான பாலா தேவி ஸ்காட்லாந்தின் "ரேஞ்சர்ஸ் எஃப்.சி' அணியின் சார்பில் விளையாட பதினெட்டு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெர்சி எண் 10, பாலாவுக்குத் தரப்பட்டுள்ளது. எந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கும் ஏன்? எந்த ஒரு ஆசிய வீராங்கனைக்கும் கிடைக்காத பெருமை, பாலா தேவிக்கு வந்து சேர்ந்துள்ளது.
 கால்பந்தாட்டத்தில் பாலா தேவியின் அனுபவத்தின் வயது 14. நட்சத்திர கால்பந்தாட்டக்காரர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருக்கும் பலா தேவி, மணிப்பூர் காவல்துறையில் காவலராகப் பணி புரிகிறார். வயது முப்பது. இந்திய பெண்கள் கால்பந்தாட்ட சரித்திரத்தில் அதிக கோல்கள் அடித்த வீராங்கனையும் பாலா தேவிதான். 58 போட்டிகளில் 52 கோல்கள். பாலா தேவியின் பங்களிப்பு.
 பாலா தேவியின் சொந்த மாநிலம் மணிப்பூர். கால்பந்தாட்டத்தில் சிறு வயதிலேயே ஆர்வம் கொண்ட பாலா, ஆண் பிள்ளைகளுடன் விளையாடி அனுபவத்தை பெருக்கிக் கொண்டவர். படிப்படியாக முன்னேறி அகில இந்திய புகழ் பெற்றவர். இந்திய கால்பந்து கூட்டமைப்பின் "கால்பந்தாட்ட வீராங்கனை' விருது 2014 -இல் பாலா தேவிக்கு வழங்கப்பட்டது. 2016 -இல் நடந்த தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் பங்கேற்று மூன்று கோல்கள் அடித்து கவனத்தை பாலா கவர்ந்தார். குறிப்பாக, எஸ்.ஏ.எஃப்.எஃப் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் 2016-இல் இந்திய அணியின் தலைவியாக வழிநடத்தி வெற்றிக் கோப்பையையும் பாலா வென்று வந்தார்.
 "வெளிநாட்டு கால்பந்தாட்ட அமைப்பு ஒன்றில் ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு இது. நிச்சயமாக எனது திறமைகளைக் காட்டி விளையாடுவேன். இதர இந்தியப் பெண் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு முனைப்பூட்டுவேன்.. அவர்களும் வெளிநாட்டு விளையாட்டு அமைப்புகளில் சேர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டு முத்திரை பதிக்கலாம். நான் ரேஞ்சர்ஸ் எஃப்.சி அணிக்கு விளையாடுவது, ஒரு வகையில் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். இங்கு விளையாடுவதினால் கிடைக்கும் பயிற்சியும், அனுபவமும் இந்திய அணிக்காக விளையாடும்போது உதவியாக இருக்கும்'' என்கிறார் பாலா தேவி.
 - பிஸ்மி பரிணாமன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com