சமையல்! சமையல்! (05/02/2020)

வள்ளிக் கிழங்கு ஸ்வீட் ரோல், சேனைக் கிழங்கு கபாப்,  சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,  சிறுகிழங்கு பொரியல் 

வள்ளிக் கிழங்கு ஸ்வீட் ரோல்

 தேவையானவை
 மைதாமாவு - 500 கிராம்
 வெல்லம் - 250 கிராம்
 வள்ளிக் கிழங்கு - 250 கிராம்
 ஏலக்காய் - 5
 நெய் - 100 கிராம்
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து வேக வைத்து தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு ஏலக்காயைப் பொடி செய்து போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். மைதாமாவை உப்புப் போட்டு பிசைந்து பூரிகளாக இட வேண்டும். ஒரு பூரி சற்று பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இட வேண்டும். பெரிய அளவு பூரியால் இரண்டு கரண்டி வள்ளிக்கிழங்கு கலவையை வைத்து அதன்மேல் சிறு பூரியில் மூடி ரோல் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான வள்ளிக்கிழங்கு ஸ்வீட் ரோல் தயார்.

சேனைக் கிழங்கு கபாப்

தேவையானவை
 சேனைக்கிழங்கு - 500 கிராம்
 பெரிய வெங்காயம் - 1
 மிளகாயத்தூள் - 1 கரண்டி
 பச்சைமிளகாய் - 5
 சுக்கு - அரை தேக்கரண்டி
 தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
 கரம்மசாலா - அரை தேக்கரண்டி
 கடலைப் பருப்பு - 50 கிராம்
 நெய் - 100 கிராம்
 இஞ்சி - 1 துண்டு
 கொத்துமல்லி - 1 கட்டு
 ரொட்டித்தூள் - 50 கிராம்
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை: சேனைக்கிழங்கை வேக வைத்துத் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி மற்ற சாமான்களோடு சேர்த்துக் கிழங்கு விழுதில் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். கலவையைச் சிறுசிறு உருண்டைகளாக்கி வடை போன்று தட்டிக் கொண்டு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்து பொன்னிறமாக அதில் வடைகளைப் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும்.
 
 சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை:
 சேப்பங்கிழங்கு - 100 கிராம்
 புளி - நெல்லிக்காய் அளவு
 மிளகாய்த் தூள் - 1தேக்கரண்டி
 அரிசி மாவு - 1 தேக்கரண்டி
 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
 செய்முறை: சேப்பங்கிழங்கை முக்கால் பதமாக வேக வைத்து தோலுரித்து வட்டவட்டமாக நறுக்க வேண்டும். புளி, உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். நறுக்கிய சேப்பகிழங்கில் மிளகாய்த் தூள், அரிசி மாவு, உப்பு, கரைத்த புளி தண்ணீர் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர், தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மசாலாவில் பிசறி வைத்துள்ள கிழங்கை சுட்டு எடுக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.
 
 சிறுகிழங்கு பொரியல்

தேவையானவை:
 சிறுகிழங்கு - கால்கிலோ
 தேங்காய் - 1 மூடி
 பச்சை மிளகாய் - 10
 கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
 பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி
 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
 செய்முறை: சிறுகிழங்கை மண்போக அலசிவிட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து தோலுரித்து கையால் உதிர்த்து வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவவும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய மிளகாய்ப் போட்டு தாளித்து உதிர்த்த சிறுகிழங்கு, தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மொறு மொறுவென்று வரும் வரை வதக்கி இறக்கவும். சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி.
 - ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com