Enable Javscript for better performance
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?- Dinamani

சுடச்சுட

  

  புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

  By DIN  |   Published on : 12th February 2020 11:42 AM  |   அ+அ அ-   |  

  GAYATHRI

  இந்திய பாட்மிண்டன் ஜாம்பவான் கோபிசந்த் மகள் காயத்ரி (16) திறமை வாய்ந்த இளம் வீராங்கனையாக உருவாகி வருகிறார்.
   இந்திய பாட்மிண்டன் என்றாலே சையத் மோடி, பிரகாஷ் பதுகோன் போன்ற வீரர்கள் பிரசித்தி பெற்றவர்
   களாக இருந்தனர். அவர்களுக்கு அடுத்து எழுச்சி ஏற்படுத்தியவர் பி.கோபிசந்த். கடந்த 2001-இல் கெளரவமிக்க ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.
   ஹைதராபாதை அடிப்படையாகக் கொண்ட கோபிசந்த் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு வகிக்கிறார். அவரது மனைவி பிவிவி. லட்சுமியும் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஆவார். இவர்களது குழந்தைகள் காயத்ரி, சாய் விஷ்ணு இருவருமே பாட்மிண்டன் ஆடி வருகின்றனர்.
   தனது பெற்றோரைப் போலவே காயத்ரிக்கும் பாட்மிண்டனில் 7 வயது முதல் ஆர்வம் ஏற்பட்டது. ஹைதராபாதில் பயிற்சி அகாதெமியை நடத்தி வரும் கோபிசந்த் அங்கு பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு பயிற்சி அளித்தார்.
   அவர்களைப் பார்த்து ஈடுபாடு கொண்ட காயத்ரி மூத்த வீரர்களுடன் தொடர்ந்து ஆடி வந்ததால், சிறந்த வீராங்கனையாக தயாரானார். 16 வயதான காயத்ரி சர்வதேச தரவரிசையில் 200-ஆவது இடத்தில் உள்ளார்.
   ஜூனியர் வீராங்கனையான காயத்ரி, கடந்த 2019 ஜூன் மாதம் நடைபெற்ற அகில இந்திய சீனியர் ரேங்கிங் போட்டியில் பங்கேற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றிகளால் தேசிய சீனியர் அணியிலும் தேர்வு செய்யப்பட்டார்.
   கடந்த டிசம்பர் மாதம் நேபாளம் காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி தனது இருப்பை வெளிப்படுத்தினார் காயத்ரி.
   முதன்முறையாக ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் ஆடி வரும் காயத்ரி, சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
   கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணியில் உள்ள உலக சாம்பியன் பி.வி.சிந்துவை எதிர்கொண்டு ஆடினார். அதில் சிந்து எளிதாக வென்ற போதிலும், காயத்ரிக்கு சிறந்த அனுபவமாக விளங்கியது.

   இதுதொடர்பாக காயத்ரி கோபிசந்த் கூறியதாவது: "எனது தந்தை கோபிசந்த் கண்டிப்பானவர். காலை, மாலை என தலா 3 மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபடுவேன். அகாதெமியில் எனக்கு என்று தனி கவனிப்பு எதுவும் தரமாட்டார். மற்ற சிறுவர், சிறுமியரைப் போலவே நடத்துவார்.
   குடும்பமாக மேசையில் அமர்ந்து உணவு அருந்தும் போதும், நாங்கள் 4 பேரும் பாட்மிண்டன் குறித்தே விவாதிப்பது வழக்கம். பொதுவாக இரவு உணவின் போது தான் ஒரே நேரத்தில் உணவருந்துவோம்.
   சர்வதேச பாட்மிண்டனில் கரோலினா மரின், டை சூ யிங் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும். பி.வி.சிந்துவுடன் அடிக்கடி ஆடுவதால் பெரிய போட்டிகளை தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் கிடைத்தது.
   சீனியர் அளவில் சிறப்பாக ஆடி, ஆசிய, ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டுக்கு பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம்'' என்றார் காயத்ரி.
   - பா.சுஜித்குமார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai