Enable Javscript for better performance
மனத்திருப்தி அளிக்கும் மக்கள் சேவை- Dinamani

சுடச்சுட

  

  மனத்திருப்தி அளிக்கும் மக்கள் சேவை

  By DIN  |   Published on : 12th February 2020 11:29 AM  |   அ+அ அ-   |    |  

  REKHA

  எத்தனை வேலை செய்தாலும் மக்கள் சேவைக்கு ஈடு இணையில்லை என ஆத்ம திருப்தியுடன் பேசுகிறார் ரேகா. ஐ.டிதுறையில் பார்த்த வேலையை உதறி விட்டு தற்போது ஊராட்சி மன்ற தலைவராகியிருக்கிறார்.
   யார் இந்த ரேகா?
   திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிறிய ஊரான பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த ரேகா. விவசாயியின் மகள். தன்னை போல் தன் மகளும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவரை நன்றாக படிக்க வைத்தார். அப்பா விரும்பியபடியே படித்த ரேகா ஐ.டித்துறையில் பணிக்கு சேர்ந்தார். லட்சங்களில் ஊதியம் வாங்கினார். அடுத்தது நடந்தது என்ன? அவரே சொல்கிறார்:
   "என்னுடைய கணவரும் என்னைப் போல் ஐ.டித்துறை சேர்ந்தவர் தான். எப்போதும் வேலை என்று பரபரப்பாகவே வாழ்க்கை கழிந்தது. நாம் ஆரோக்கியமாக இருப்பதால் தான் தொடர்ந்து பரபரப்பாக இயங்க முடிகிறது என்று நினைத்த தருணத்தில் நடந்தது அந்த நிகழ்வு. ஒரு நாள் திடீரென என்னுடைய கணவருக்கு பேச்சு வராமல் போனது. மருத்துவரிடம் சென்ற போது அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியளித்தது. என்னுடைய கணவருக்கு தைராய்டு பிரச்னையால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சொன்னார். நாங்கள் இருவரும் ஆரோக்கியமான உணவைத் தானே சாப்பிட்டோம். எப்படி இந்த நோய்த்தாக்குதலுக்கு ஆளானோம் என்று சிந்திக்க தொடங்கினோம்.
   அது மட்டுமல்ல, என்னுடைய குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. நான் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தான் என்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன். ஆனால், எப்படி அவளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் போனது என்று யோசனை ஒரு புறம்.
   இந்த காலகட்டத்தில் இயற்கை விவசாயி நம்மாழ்வாரை சந்திக்க நேர்ந்தது. அப்போது செயற்கை ரசாயனங்களால் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடுவதன் விளைவு தான் இது போன்ற நோய்கள் ஏற்படுகிறது என்று எங்களுக்கு விளக்கம் அளித்தவர், "நீ ஒரு விவசாயியின் மகள் நீயே விவசாயம் செய்து சாப்பிடு' என்றார். சரி, அவர் சொல்வதை செய்து பார்ப்போம் என்று நினைத்தோம். என்னுடைய கணவர் ஐ.டி வேலை ராஜினாமா செய்து விட்டு எங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். பொருளாதார தேவை என்பதால் நான் மட்டும் ஐ.டித்துறையில் தொடர்ந்து பணியாற்றினேன். என்னுடைய கணவர் விவசாயத் தொழிலை வெற்றிகரமாக செய்யத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் நானும் ஐ.டி வேலைக்கு டாட்டா சொல்லிவிட்டேன்.
   இருவருமே சேர்ந்து விவசாயத்தை கவனிக்க ஆரம்பித்தோம்.
   இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இறங்கினோம். அப்போது சில அரசியல் நெருக்கடிகளை சந்தித்தோம். ஏன் நாமும் அரசியல் இறங்கினால் என்ன? என்று தோன்றியது. அதற்கு ஏற்றாற் போல் திருவள்ளூர் மாவட்டம் பாண்டேஸ்வரம் பகுதி தனித் தொகுதியாகவே இருந்தது. இப்போது பெண்களுக்கான பொது தொகுதியாக மாறியது.

   ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். வெற்றிப்பெற்றால் செய்ய வேண்டியவை என்ன என்பதை எங்கள் பகுதியில் ஒவ்வொருவரின் வீட்டிற்குச் சென்று நானே எடுத்து கூறினேன். அவர்கள் என்னை நம்பி , எனக்கு வாக்களித்தார்கள். தேர்தலில் வெற்றிப்பெற்று பொறுப்பு ஏற்றுள்ளேன். படித்த பெண்கள் அரசியலுக்கு வருவது குறைவு என்பதால் தேர்தலில் நான் வெற்றி பெற்றதையடுத்து பல ஊடகங்களின் வெளிச்சம் என் பக்கம் திரும்பியது. நான் ஊர் மக்களுக்கு செய்ய வேண்டியத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பு நான் என்ன செய்ய போகிறேன் என்று பலரது கவனம் என் மீது திரும்பியுள்ளது.
   அதனால் இப்போது என்னுடைய கவனம் எல்லாமே என்னுடைய கிராமத்தை முன்னேற்றுவது தான். லட்சங்களில் சம்பளம் வாங்கும் போது கிடைக்காத மனத்திருப்தி மக்கள் சேவையில் கிடைக்கிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
   கிராம முன்னேற்றத்திற்காக கைவசம் உள்ள திட்டங்கள் என்ன?
   அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி, நோய் இல்லாத ஆரோக்கியமான கிராமம் இது இரண்டும் தான் முக்கியமான திட்டங்கள். நாங்கள் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை என்னுடைய கிராம மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்து அவர்கள் பயனடைய வேண்டும். குறிப்பாக என்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டது போல் எங்கள் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு எந்த வித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்த உள்ளேன்'' என்கிறார் ரேகா.
   -வனராஜன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai