சமையல்! சமையல்! (12/02/2020)

பாதாம் பருப்பு பர்ஃபி, ஜவ்வரிசி பழ பர்ஃபி, பொட்டுக்கடலை தேங்காய் பர்ஃபி, கோவா பர்ஃபி 

பாதாம் பருப்பு பர்ஃபி 

தேவையானவை:
பாதாம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 400 கிராம்
செய்முறை: பாதாம் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி துண்டுகள் போட வேண்டும்.

ஜவ்வரிசி பழ பர்ஃபி 

தேவையானவை:
ஜவ்வரிசி - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
பால் - 200 மில்லி
சாத்துக்குடி பழச்சாறு - அரை கிண்ணம்
ஆப்பிள் - 1 பழம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
வாழைப்பழம் - 2
செய்முறை: முதலில் ஜவ்வரிசியைச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின்னர், அடிகனமான பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரும், 2 டம்ளர் பாலும் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்து வரும் பொழுது ஜவ்வரிசியைப் போட்டு கிளற வேண்டும். ஜவ்வரிசி முக்கால் பதம் வெந்ததும் வாழைப் பழத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி மசித்து ஜவ்வரிசியில் போட்டு சர்க்கரையை சேர்க்கவும். எல்லாம் நன்றாக வெந்து குழைந்து அல்வா பதத்தில் வந்ததும் ஏலப்பொடி, கேசரிப்பவுடர் தூவி நன்றாகக் கிளற வேண்டும். அதில் சாத்துக்குடிப் பழச்சாறு சேர்க்கவும். கைவிடாமல் கிளற வேண்டும். ஒரு தட்டில் நெய் தடவி ஜவ்வரிசி குழைவைப் பரவலாக தட்டில் கொட்ட வேண்டும். ஆப்பிளைத் தோல் சீவி சிறு துண்டங்களாக நறுக்கி மேலே அலங்காரமாக வைக்கவும். ப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து துண்டுகள் போடவும்.

பொட்டுக்கடலை தேங்காய் பர்ஃபி

தேவையானவை:
தேங்காய் - 1
பொட்டுக் கடலை - 200 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
நெய் -50 கிராம்
ஏலக்காய் - 2
கேசரிப் பவுடர் - 1 சிட்டிகை
பாதாம் எசென்ஸ் - சில துளிகள்
செய்முறை: பொட்டுக் கடலையைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். தேங்காய், ஏலக்காய்ச் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு வெண்ணெய்ப் போல அரைக்க வேண்டும். இந்த விழுதை அடிகனமான ஒரு பாத்திரத்தில் போட்டு கலர் சேர்த்து சர்க்கரையையும் போட்டு அடிபிடிக்காமல் கிளற வேண்டும். அவ்வப்பொழுது நெய்விட்டு கிளறி ஒட்டாமல் சுருண்டு வரும்போது எசன்ஸ் சேர்த்து நெய் தடவிய தட்டில் விட்டு ஆறியவுடன் துண்டுகள் போட வேண்டும்.

கோவா பர்ஃபி

தேவையானவை:
கோவா - 100 கிராம்
மைதா மாவு - 300 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 150 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
புட் கலர் - தேவையானவை
செய்முறை: கோவாவை வெறும் வாணலியில் சூடாக்கிக் கொள்ள வேண்டும். நெய்யில் மைதாமாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு கோவாவுடன் அதைக் கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் சர்க்கரைப் பாகு வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு பாகை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து கோவா மைதா சேர்ந்ததை இதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். கிளறக் கிளற நன்கு கெட்டியாகும். நன்றாக சேர்ந்த பின் நெய் தடவிய தட்டில் கொட்டி கத்தியால் துண்டு போட வேண்டும்.
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com