Enable Javscript for better performance
இசை நாயகியின் சாதனை!- Dinamani

சுடச்சுட

  

  இசை நாயகியின் சாதனை!

  By DIN  |   Published on : 19th February 2020 11:35 AM  |   அ+அ அ-   |    |  

  mm12

  அனைத்து நாட்டு மக்களுக்கும் பொதுவான மொழி இசை என்று கூறுவர். மகிழ்ச்சி, துக்கம், புத்துணர்ச்சி என அனைத்து உணர்வுகளுமே இதற்குள் அடங்கி விடுகிறது.
   சென்னைக்கும்,கர்நாடக சங்கீதத்திற்கும் எப்போதுமே நல்ல உறவு உண்டு. "பாரம்பரிய இசை நகரம் சென்னை' என யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. அந்த வகையில்,கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி, கர்நாடக இசை, குச்சுப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் ஒரே நாளில் மூன்று கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 700 கர்நாடக இசைப் பாடகர்கள்,வாத்தியக் கலைஞர்கள் அடங்கிய குழுவினர் ஒரே நேரத்தில் இணைந்து பாடி, வாத்தியங்கள் இசைத்து, இசைக் கச்சேரி நடத்தினர்.இதுவரை இசைத்துறையில் நடந்திராத சாதனையாக இந்நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. மேலும்,குச்சுப்புடி கலையின் மூத்த கலைஞர்களான மூர்த்தி, கிருஷ்ணகுமார் ஆகியோர் வழிநடத்த 1,183 கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைக்குழுவின் பாடலுக்கு குச்சுப்புடி நடனத்தை அரங்கேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து, 436 பரதநாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, அதே பாடலுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
   திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இதை முன்னின்று நடத்தியவர் கர்நாடக இசைப் பாடகி பத்மபூஷன் சுதா ரகுநாதன். வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த நிகழ்வைப் பற்றி அவரிடமே கேட்டோம்:
   உங்களுக்கு இந்த எண்ணம் எப்படி வந்தது?
   இசைக்காக ஏதாவது செய்ய வேண்டும் ,கர்நாடக இசையை பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அது நம் மாநிலத்தின் கலாசாரத்தையும், கலையையும் வளர்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
   இம்முயற்சியில் உங்களோடு பணியாற்றியவர்கள் பற்றி?
   இந்த முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவரே தியாகய்யா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் , பிரபல சாக்ஸபோன் கலைஞருமான ஜனார்த்தனன். அவரின் மனதிலும் இதே எண்ண ஓட்டங்கள் இருந்ததால் என்னை அணுகினார். அதன்பிறகுதான்,ஏன் ஒரு கின்னஸ் சாதனை முயற்சி செய்யக்கூடாது என தோன்றியது. உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். குச்சுப்புடி நடனக் கலைஞர்கள் மூர்த்தி, கிருஷ்ணகுமார்,பரதநாட்டியக் கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோரும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

   இவ்வளவு கலைஞர்களை எப்படி உங்களால் ஒருங்கிணைக்க முடிந்தது?
   அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இருப்பினும், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் எங்கள் குழு அயராது பாடுபட்டது . 700 பாடகர்கள்,இசைக் கலைஞர்கள்,வாத்திய கலைஞர்கள் ஆகியோர் இணைந்து இசை மழை பொழிந்தார்கள்
   .அதற்கேற்றாற்போல் குச்சுப்புடி நடனக் கலைஞர்கள், பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரு சேர நடனம் ஆடியது கண்கொள்ள காட்சியாக இருந்தது.
   நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?
   கடந்த ஐந்து மாதங்களாக இச்சாதனை படைக்கும் முயற்சியில் எங்கள் குழு தீவிரமாக ஈடுபட்டது. பிப்ரவரி 2 -ஆம் தேதி கின்னஸ் அமைப்பால் எங்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலாவதாக 700 பேர் அடங்கிய கர்நாடக இசைக்குழுவின் சார்பில் ஸ்ரீ ராகத்தில் அமைந்துள்ள "எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு' என்று தொடங்கும் கீர்த்தனை பாடப்பட்டது. "பெருமைக்குரியவர்கள் (உலகில்) எங்கிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வணக்கம்' என்பதுதான் அதன் பொருள். அப்போது குரல் அசைவு பொருந்தாதது, ஒலிப்பெருக்கி பிரச்னை மற்றும் பரதநாட்டியக் கலைஞர்கள் அரங்கத்துக்கு வருவதில் சிக்கல் என ஏகப்பட்ட டென்ஷன். இவற்றையெல்லாம் முறியடித்து சாதனை படைத்து விட்டோம். முறையான சான்றிதழ் கிடைத்ததில் எங்களுக்குப் பெருமிதம் என்று கூறும் இவர், பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு என்கிறார்.

   இசையோடு நடனத்தையும் சேர்த்தது ஏன்?
   இசையும், நடனமும் நமது மாநிலத்தின் இரு கண்கள். எனவேதான் இந்த வித்தியாசமான முயற்சி எனக் கூறி அழகாகச் சிரிக்கிறார்.
   இவ்வளவு நாள் இசை நாயகியாக இருந்த சுதா ரகுநாதன் , இப்போது சாதனை நாயகியாகவும் மிளிரத் தொடங்கி விட்டார்.
   -கலைச்செல்வி சரவணன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai