Enable Javscript for better performance
21 வயதில் உலகம் சுற்றிவந்தவர்!- Dinamani

சுடச்சுட

  

  21 வயதில் உலகம் சுற்றிவந்தவர்!

  Published on : 19th February 2020 10:37 AM  |   அ+அ அ-   |    |  

  mm1

  வயது 21-இல் ஆச்சரியக் குறியாகியிருக்கிறார் லெக்சி அல்ஃபோர்ட் கின்னஸ் சாதனையாளர். இவரது சாதனை, உலகின் 196 நாடுகளை சுற்றிப் பார்த்திருப்பதுதான்!
   இந்த இளம் வயதில், மூன்று ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளில் (196 ) தங்கி சுற்றி பார்த்து வந்ததற்காக லெக்சிக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது. அடுத்ததாக சுற்றுலா செல்ல புதிதாக நாடு ஒன்று உருவாக காத்திருக்கிறார் இவர். லெக்சியால் இந்த சாதனையை எப்படி நிகழ்த்த முடிந்தது ?
   லெக்சியே விளக்குகிறார்:
   "நான் அமெரிக்காவில் கலிபோர்னியாவைச் சேர்ந்தவள். எங்களுக்குச் சொந்தமாக டிராவல் ஏஜென்சி இருக்கிறது. அதனால் சுற்றுலா பற்றிய தகவல்கள் எனக்கு அத்துப்படி. குறைந்த செலவில் பயணத்தை நடத்த முன்பே திட்டமிட வேண்டும். எனது அம்மாவுக்கு சுற்றுலா துறையில் முப்பதாண்டு அனுபவம். நானும் சுற்றுலா துறையில் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளேன். அம்மாவின் வழிகாட்டல், எனது அனுபவம் எனது பயண திட்டமிடலுக்குப் பெரிதும் உதவியாக அமைந்தது. செல்லும் நாடுகளில் தங்கும் விடுதியைத் தேர்வு செய்த பிறகு அவர்களிடம் விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு வர டாக்சிக்கு எவ்வளவு கட்டணம் போன்ற விவரங்களை முன்பாகவே கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் டாக்சிக்கு அதிகம் கொடுக்க வேண்டிவரும்.
   பெரும்பாலான பயணங்களுக்கு பெற்றோர் தந்த பணம் தான் உதவியது. எனது சேமிப்பும் செலவானது. சில பயணங்களுக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தார்கள். உலக நாடுகளை சுற்ற விமானம், தொடரிகள், பேருந்துகள் சேவைகளை பயன்படுத்திக் கொண்டேன். "டெல்டா' விமானத்தில் அனைத்து பயணங்களையும் வைத்துக் கொண்டதால், அதிக தடவைகள் பயணம் செய்தால் கிடைக்கும் "ஊக்கப் புள்ளிகள்' விமான கட்டணங்களில் சலுகை பெற வசதியாக இருந்தது. என்னுடன் மடிக்கணினி, கேமரா, டிரோன்( வானத்திலிருந்து படம் பிடிப்பதற்காக) கொண்டு சென்றிருந்தேன். அதனால், கின்னஸ் அலுவலகத்தில் நான் அனைத்து உலக நாடுகளை சுற்றி வந்ததிற்கான சுமார் பத்தாயிரம் ஆதாரங்களைத் தர முடிந்தது. உலக நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளில் பலவும், பாகிஸ்தானும் சுற்றுலாவில் முன்னேற்றம் காணவில்லை. ஆனால் சுற்றுலா இடங்கள் அநேகம் உள்ளன. வடக்கு பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கினையும், வயோதிகம் நெருங்காமல் நீண்ட ஆயுளுடன் இளமையாக வாழும் மக்களைக் காணவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
   சுற்றுலாவில் பல மாதங்கள் பயணத்தில் கழிந்தன. உடல் நலக்குறைவு, உணவுப் பிரச்னை, செலவுகள் போன்றவை நமது சுற்றுலா உற்சாகத்தை குறைக்கும் காரணிகள். நான் சுற்றி வந்த 196- ஆவது நாடு வட கொரியா. பதினெட்டு வயதாகும் போது 72 நாடுகளை சுற்றி முடித்திருந்தேன். அப்போது 2016 -ஆம் ஆண்டு . அதன் பிறகுதான் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 24 வயதில் ஒருவர் இந்த சாதனையை செய்து முடித்திருந்தார். அவர் ஆண். 21 வயதில் இந்த சாதனையை செய்து முடிக்க வேண்டும் என்று மீண்டும் சுற்றுலா கிளம்பினேன். சென்ற மே மாதம் எனது உலக சுற்றுலா வட கொரியாவில் இனிதே நிறைவுற்றது.
   மூன்று ஆண்டுகளில் 124 நாடுகளை சுற்றி வந்ததில் சுற்றுலாவில் மிகவும் பிடித்த இடம் வெனிசுலா நாட்டின் "தேவதை நீர் வீழ்ச்சி'. இனி பார்க்க வேண்டிய இடம் காங்கோ நாட்டின் மலைச் சிகரமான நியிரகாங்கோவைப் பார்க்க வேண்டும். அங்கே தான் உலகின் மிகப் பெரிய எரிமலைக்குழம்பு ஏரி உள்ளது'' என்கிறார் லெக்சி
   அல்ஃபோர்ட்.
   - பிஸ்மி பரிணாமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai