எல்லாமே சவால்கள்தான்! - எம்.பி.நிர்மலா ஐ.ஏ.எஸ்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை எஸ்.எச்.ஆர்.சி (State Human Right Commission), கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர் மீட்பு, பெண் சிசு கொலை தடுப்பு என
எல்லாமே சவால்கள்தான்! - எம்.பி.நிர்மலா ஐ.ஏ.எஸ்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை எஸ்.எச்.ஆர்.சி (State Human Right Commission), கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர் மீட்பு, பெண் சிசு கொலை தடுப்பு என தமிழக அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி, ஆளுமைமிக்க பெண்மணியாக வலம் வந்தவர் எம்.பி.நிர்மலா ஐ.ஏ.எஸ்.. அண்மையில் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கணீர் குரலும், கம்பீரத் தோற்றமும், குழந்தை உள்ளமும் கொண்ட இவர் தான் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
"என் குடும்பத்தில் நான் 2-ஆவது பெண். எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் குறைவு என்பதால், என் பாட்டி சாமிக்கு வேண்டிக்கிட்டு நான் பிறந்ததாக சொல்வார்கள். படித்தது, வளர்ந்ததெல்லாம் சென்னை சாரதா வித்யாலயா பள்ளியில்தான். பூர்வீகம் திருக்கோவிலூர். ஆனால், என் தாத்தா காலத்திலேயே சென்னை வந்து செட்டிலாகிவிட்டோம். 1935 -இல் சென்னை தி.நகரில் "பூங்கோவில் நிலையம்' என்று தாத்தா கட்டிய வீடு இன்றும் உள்ளது. அது ஒரு புராதனமான வீடு. பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் வாழ்ந்த வீடு அது. 
அந்தக் காலத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதெல்லாம் மிகவும் அரிது. எங்கள் வீட்டிலும் அதுதான் நிகழ்ந்தது. பள்ளி படிப்பு முடிந்ததும் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன். பள்ளி வரை படிக்க வைத்ததே பெரிய விஷயம். உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப் போறேன்னு அப்பா சொன்னார். 
கல்யாணத்தில் இருந்து தப்பிக்க மேலே படிக்க முடிவு செய்தேன். ஆனால், அப்பா அனுமதியில்லாமல் எப்படி காலேஜ் அப்ளிகேஷன் வாங்குவது என்று தெரியவில்லை. அதனால அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அவர் மனதை மாற்றினேன். "சரி, நீ கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் தமிழ்தான் படிக்கனும்'னு சொன்னார். காரணம், தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று நினைத்து அப்படி சொன்னார்.
அப்பா சம்மதித்ததே பெரிய விஷயம். அதனால் எந்த படிப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டேன். பி.ஏ. முடித்ததும் அப்பாவிடம் மெல்ல, எம்.ஏ. படிக்க வேண்டும் என்று சொன்னேன். வீடே போர்களம் ஆனது. 
நான் பி.ஏ. தமிழ் முதல் வகுப்பில் பாஸ் செய்து "இந்திராகாந்தி அவார்ட்' வாங்கியிருந்தேன். அது இல்லாமல், கல்லூரி படிக்கும்போது வெவ்வேறு போட்டிகளில் கலந்து 29 பரிசுகளுக்கு மேல் வாங்கியிருந்தேன். அதனால், என் டீச்சர் பரிசளிப்பு விழாவுக்கு நீ உங்க அம்மாவை அழைத்து வா, நான் பேசுகிறேன் என்றார். 
அம்மாவை அழைத்து போய் டீச்சர் பக்கத்தில் உட்கார வைத்தேன். என் பெயரைச் சொல்லி ஒவ்வொரு பரிசாக கொடுக்க கொடுக்க, இந்த பெண்ணையா வீட்டில் உட்கார வைக்கப் போகிறீர்கள் என்று என் டீச்சர், சொல்ல, சொல்ல அம்மாவுக்கு மனசு மாறி, வீட்டில் வந்து அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கித் தந்தார். 
உறவுக்காரர்கள் எல்லாம் நம்ம குடும்ப பாரம்பரியமே போய்விட்டதாக திட்டினார்கள். நான் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எம்.ஏ.தமிழ் படித்தேன். 
படிச்சிக்கிட்டு இருக்கும்போதே குரூப்-2 விளம்பரத்தை பார்த்துவிட்டு அண்ணனிடம் சொல்லி அப்ளிகேஷன் வாங்கி வந்து போட்டேன், இண்டர்வியூவுக்கு வரச்சொல்லி கடிதம் வந்தது. 
அப்பா கடிதத்தை பார்த்துவிட்டார். மீண்டும் போர்க்களம்தான். நான் அப்பாவிடம் சொன்னேன். இண்டர்வியூ எல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நேரில் பார்க்கிறேன்னு கேட்டேன். என் பிடிவாதத்தை பார்த்துவிட்டு சரி வான்னு அழைத்துப் போனார். போகிற வழியில் எஸ்.கே.சி (ஸ்வீட், காரம், காபி) எல்லாம் வாங்கி கொடுத்து ஒரு கண்டிஷன் போட்டார். "உள்ளே போய் வேலை பிடிக்கலன்னு சொல்லி விடு' என்றார். இண்டர்வியூ எல்லாம் நல்லபடியா முடிந்தது. என்னோடு இண்டர்வியூவுக்கு வந்தவர்களுடன் வந்திருந்தவர்கள் எல்லாம் இண்டர்வியூ நல்லா பண்ணினியான்னு கேட்க, எங்கப்பா மட்டும், "வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டியா'ன்னு கேட்டார். 
சில நாள்ல சீனியர் இன்ஸ்பெக்டர் ஆப் கோ-ஆஃப் ரெட்டிவ் சொசைட்டிக்கான ஆர்டர் வந்துவிட்டது. அப்பா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல், நீங்க ஒத்துக்கலன்னா எதுவும் சாப்பிட மாட்டேன்னு ரெண்டு நாள் உண்ணாவிரதம் இருந்ததும் அப்பா ஒத்துக்கிட்டார்.
நான் டிரெயினிங்ல போய் சேர்ந்திட்டேன். முதல்நாள் டிரெயினிங் முடித்துவிட்டு வெளியே வர, சித்தப்பா பார்த்து விட்டார். இங்க என்ன செய்யறேன்னு கேட்டார். டிரெயினிங் போறேன்னு சொல்ல, உடனே சித்தப்பா எனக்கு முன்னாடி வீட்டுக்கு போய் தாத்தா, பாட்டி, அப்பா, இன்னொரு சித்தப்பான்னு வீட்டில் உள்ள எல்லாரையும் கூட்டி வைத்து பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்கு. அப்பா அழுதுக்கிட்டு இருக்கார். 
நான் எல்லாரிடமும் சொன்னேன். என்னோட பிடிவாதத்தினாலதான் அப்பா ஒத்துக்கிட்டார். நான் உயிரோட இருக்கனும்ன்னா என்னை வேலைக்குப் போக அனுமதிங்கன்னு. அதன்பிறகு யாரும் எதுவும் பேசல. நானும் வேலையில் சேர்ந்துவிட்டேன். அப்போ என் வயது 22. அந்த காலகட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலேயே பெண்களில் எக்ஸிக்யூட்டிவ் பதவிக்கு தேர்வானது நான்தான் முதன் முதலில்.
எங்க செட்டிலதான் முதன்முதலில் பெண்களைத் தேர்வு செய்தது. அடுத்து குருப் -1க்கு செலக்ட் ஆனேன். இண்டர்வியூ சமயத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால நான் இண்டர்வியூக்கு கிளம்பும்போதே லேட் ஆகிவிட்டது. பஸ்ûஸவிட்டு இறங்கினதும் கேம்பசுக்குள் சுத்தி போறதுக்குள்ள லேட் ஆகிடும்னு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்த குறுக்கு சுவரை ஒரே எட்டாக தாண்டி உள்ளே போனேன். என் பின்னால் வந்தவங்க, "டெபுடி கலெக்டர் இல்ல அதான் தாண்டுதுன்னு' சொன்னாங்க. நான் யாரையோ சொல்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு போனேன். அங்கப் போனதும்தான் தெரிந்தது. டெபுடி கலெக்டர் பதவிக்கு செலக்ட் ஆகியிருப்பது நான்தான்னு. 
இப்படித்தான் நான் கலெக்டர் ஆனது. முதல் போஸ்டிங் காஞ்சிபுரத்தில்தான். முதல் நாள் என்னை அழைத்துப் போக தாசில்தாரரும், சிலரும் வந்திருந்தனர். வீட்டு வாசலில் வந்து நிற்க வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருந்த என் தாத்தாவிடம், கலெக்டர் அம்மா இருக்காங்களான்னு கேட்க, என் தாத்தா அப்படியெல்லாம் யாரும் இல்லன்னு சொல்லிட்டாரு. அவங்க ஒன்னும் புரியாமல் நிற்க, தாத்தா தெற்கு வாசல்ல இருக்க நான் பின் வாசல் பக்கம் வந்து, தாசில்தாரிடம், நான்தாங்க கலெக்டர் வாங்க போகலாம்னு சொல்லி அழைத்துப் போனேன்.
டிரெயினிங் காலம் முடிந்தபின். மயிலாடுதுறையில்தான் முதன்முதலாக போஸ்டிங் போட்டாங்க. என் பீரியட்லதான் மாயவரம்னு இருந்த பெயரை மயிலாடுதுறைன்னு மாத்தினது. இப்படி நான் பதவியில் இருந்தபோது பல ஊர்களுக்கு பெயர் மாற்றம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்வெண்மணி பிரச்னை நடந்திருந்த நேரம். அந்த நேரத்தில் உணவு பஞ்சம் வேற இருந்தது. தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும்தான் விளைச்சல் இருந்தது. அதனால அங்கிருந்து தமிழ்நாடு முழுவதற்கும் அரிசி கொண்டு போய்ச் சேர்த்தோம். அது போல அந்த சமயத்தில்தான் காவிரி பிரச்னையும் தொடங்கி இருந்த நேரம். அப்போ நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஆயிரம் ஃபில்டர் பாயிண்ட் அமைக்க ஏற்பாடு செய்தேன். விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்தேன். இப்போ அதை பார்க்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. 
இப்படி பல ஊர்களில் பல பிரச்னைகளை சந்தித்திருக்கிறேன். நான் எந்த ஊரில் இருக்கிறேனோ, அந்த ஊர் மக்களும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்திருக்காங்க. அதன்பிறகு டிக் (TIIC) வந்தேன். அங்கேயும் நான்தான் முதல் பெண் அதிகாரி. அங்க இரண்டரை ஆண்டு இருந்தேன். அப்போது தான் திருமணம் ஆனது. 
அதன்பிறகு பைனான்ஸ் இன்ஸ்டிடியூஷனல் என்பது புதிதாக தொடங்கப்பட்டது. அதில் சில காலம் இருந்துவிட்டு தொழிலாளர் நலத் துறைக்கு மாற்றம் பெற்றேன். அதில் பல பதவிகளில் இருந்தேன். அங்கேயும் நிறைய சாவல்கள். உதாரணமா, அந்த சமயத்திலே சென்னையில 30 ஆயிரம் குழந்தைகள் சாலை ஓரத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். அது 87-88 காலகட்டம். அதை கேட்டதும் ரொம்ப அதிர்ந்து போனேன். 
அதில் 15 சதவிகிதம் பெண் குழந்தைகள்ன்னு தெரிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. இதில் சில குழந்தைகள் பெற்றோருடன் தான் இருந்தார்கள். சில குழந்தைகள் சாலைகளில் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். பையன்கள் அதில் கிடைக்கும் பணத்தை கையில் வைத்திருந்தால் உயிருக்கு ஆபத்து என்று சாம்பாதிக்கும் பணத்தை அன்றே நைட் ஷோ சினிமா, பிரியாணி, தண்ணி என செலவு செய்து விடுவார்கள். 
சின்ன பையன்கள் பிரவுன் சுகர் பற்றியெல்லாம் சர்வ சாதாரணமாக பேசுவார்கள். இவர்களை எப்படியாவது மாற்ற வேண்டும், இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் பேசி இந்த குழந்தைகளுக்காக "ஸ்டிரிட் அன்ட் ஓர்க்கிங் சில்ரன் புரோகிராம்'னு ஒரு திட்டம் கொண்டு வந்தோம். இதில் 5 என்.ஜி.ஓவை வைத்து, ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக பிரித்தோம். பெண்களுக்கு பாரிஸ் கார்னரில் ஒரு கார் ஷெட்டில் தொடங்கினோம். அதிலிருந்து இதுவரை நல்லபடியாக வளர்ந்து வெளியே வந்தவர்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். 
அதன்பிறகு, பெண்சிசு கொலை தடுப்பு சட்டத்தின் கிழ் பணியாற்ற சிவகாசிக்கு அனுப்பினாங்க. அதிலும், நல்ல ரிப்போர்ட் கொடுத்தேன். அடுத்தபடியா மும்பை ரெட் லைட் ஏரியாவில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மறுவாழ்வு திட்டம் கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்புத்தினோம். அதில் பாதி பேருக்கு எச்.ஐ.வி. இருந்தை கண்டுபிடித்து, முறையான வைத்தியம் கிடைக்க ஏற்பாடு செய்தேன். இப்படி சோஷியல் வெல்பர் துறையில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்தேன். 
அதன்பிறகு பல துறைகளில் இருந்தேன். ஒருமுறை சிவகங்கை மாவட்டத்தில இருந்தபோது, சில காலிகள் சேர்ந்து வன்னி மரத்தை வெட்டிவிட்டார்கள். நான் என்ன செய்தேன். அந்த மரத்தை கொண்டு வரச்சொல்லி, அதை கலெக்டர் ஆபீஸ் வாசலில் நிற்க வைத்து தோற்றம், மறைவு என்று எழுதி, பாவிகள் என்னை வெட்டிவிட்டார்கள் என்று எழுதி வைத்திருந்தேன். 
இதை பார்த்த அந்த ஊர் மக்கள். இதைவிட எங்களை அசிங்கப்படுத்த முடியாதும்மா.. இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்கிறோம்னு சொன்னாங்க. 
அதன்பிறகு, மீண்டும் பலதுறைகள், அதில் ஒன்று உசிலம்பட்டியில் பெண் சிசு கொலை. அதற்காக அப்போ ஒரு திட்டம் கொண்டு வந்தோம். பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள். எங்கள் அமைப்பில் குழந்தையை கொடுத்து விடலாம் என்று, இப்படி 450-க்கும் மேற்பட்ட குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறோம். இதில் ஒரு நல்ல விஷயம் என்னன்னா, பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்த அதே ஊரில்தான். பெண் குழந்தைகளை நிறைய தத்தெடுக்கவும் முன் வந்தனர். அதில் 300 குழந்தைகளை தத்து கொடுத்தோம். இப்பவும் அந்த ஊர் பக்கம் செல்லும்போது அந்த குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்துவிட்டுதான் வருவேன். 
அதுபோன்று, கொத்தடிமைகளாக இருந்த ஏராளமான குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தோம். இதற்காக ஒரு அமைப்பை தொடங்கினோம். இதில், கொத்தடிமைகளை மீட்கும் தனியார் நிறுவனமான ஐ.ஜி.எம் அமைப்பும் எங்களுக்கு குழந்தைகளை மீட்க உதவியாக இருந்தனர். இவர்களுக்கான எதிர்காலத்திற்காக 291 பள்ளிகளை பல மாவட்டங்களில் தொடங்கினோம்.
இன்றைய பெற்றோர்களுக்கு நான் சொல்லுவது, பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்ப்பது போன்று, ஆண் குழந்கைகள் மீதும் கவனம் செலுத்துங்கள், அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள், அவர்கள் பிரச்னை என்னவென்று கேட்டு தீர்வு காணுங்கள். அவர்கள் சில விஷயங்களில் அவமானங்களை சந்திக்கும்போது உடைந்துவிடாமல் இருக்க தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். இதைச் செய்தாலே வருங்காலத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்மங்கள் குறையும்'' என்றார்.
- ஸ்ரீதேவிகுமரேசன்
படம் : அகிலா ஈஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com