தங்கப் பதக்கம் தந்தைக்கு சமர்ப்பணம்

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
தங்கப் பதக்கம் தந்தைக்கு சமர்ப்பணம்

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் குத்துச்சண்டையில் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை கலைவாணி சீனிவாசன் (48 கிலோ) பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
 ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த கலைவாணி தன்னுடைய தீவிர முயற்சியால் இந்தத் தங்கப்பதக்கத்தை வென்று திரும்பியுள்ளார். இனி அவரே தொடர்கிறார்:
 "சென்னை தான் சொந்த ஊர். தற்போது, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லுôரியில், பி.எஸ்சி., உடற்கல்வி பிரிவில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். என்னுடைய அப்பா சீனிவாசன். விவசாயி. அம்மா- அப்பாவும் சேர்ந்து திருத்தணியில் விவசாயம் செய்து வருகின்றனர்.
 சிறுவயதிலேயே குத்துச்சண்டை மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக நான்காம் வகுப்பு படிக்கும் போதே அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய தந்தை சீனிவாசன், சிறுவயதிலேயே குத்துச்சண்டை பயின்றவர். ஆனால் வீட்டில் ஆதரவு இல்லாததால் தொடர முடியவில்லை. அதன் காரணமாக என்னை குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடுத்தி அவரே பயிற்சியும் அளித்தார்.தொடர்ந்து நானும் சிறந்த முறையில் பயிற்சி செய்து பல பரிசுகளைப் பெற்று வந்தேன்.
 பெல்லாரியில் 2019 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 3-ஆவது தேசிய பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினேன். ஆனால் தங்கத்தைத் தவறவிட்டு வெள்ளி பதக்கம் பெற்றேன். அன்றிலிருந்து இரவு தூக்கம் இல்லாமல் தவித்தேன். எப்படியாவது தங்கப் பதக்கம் வெல்வது தான் என்னுடைய கனவாக இருந்தது. அதற்காகத் தீவிர பயிற்சி மேற்கொண்டேன்.

பூடான் நாட்டு வீராங்கனைகளுடன் போட்டியிட்டு, இறுதிச் சுற்றுக்கு வந்தேன். அதில், நேபாளம் நாட்டு வீராங்கனையை வென்று, தங்கப் பதக்கத்தை பெற்றேன். இந்தப் பதக்கத்தை என்னுடைய தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன்.
 இப்போட்டியில், இந்தியாவில் இருந்து, 10 ஆண்களும், ஆறு பெண்களும் கலந்து கொண்டோம். குத்துச்சண்டை, சுய பாதுகாப்பு கலை தான். அதை அனைத்துப் பெண்களும் கற்றுக்கொள்வது அவசியமாகும். யாராவது பிரச்னை செய்தால், எளிதாக எதிர்கொள்ள கூடிய தைரியம் தானாக வந்துவிடும்.
 கர்நாடக மாநிலத்தில், தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளர் ரொனால்ட் சிம்ஸிடம் பயிற்சி பெற்று வருகிறேன். என்னுடைய வெற்றிக்கு பயிற்சியாளர் முக்கியக் காரணம். விளையாட்டுத்துறையில் சாதனை புரிபவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு அதிகம் வழங்க வேண்டும்.
 என்னுடைய அடுத்த இலக்கு 2020-இல் நடக்கும், ஒலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். முன்பை விட இந்த தலைமுறை பெண்களுக்கு, சுதந்திரம் அதிகம். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். பெண்கள், விளையாட்டுகளில் அதிகம் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் ஆரோக்கியம் என்பது சீராக இருக்கும். '' என்றார் கலைவாணி.
 -வனராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com