துணிவே துணை!

உலகிலுள்ள பல நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் மீது அமிலம் வீசுவது அதிகரித்துள்ளது.
துணிவே துணை!

உலகிலுள்ள பல நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் மீது அமிலம் வீசுவது அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகமாக அமில வீச்சால் பெண்கள் பாதிக்கப்படும் நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.
 முதன்முதலாக தெற்காசியாவிலேயே 1967- ஆம் ஆண்டில்தான் பங்களாதேஷில் அமிலவீச்சால் பெண் பாதிக்கப்பட்டதாக வழக்கு பதிவாயிற்று. அடுத்து 1982- ஆம் ஆண்டு இந்தியாவிலும், 1993- ஆம் ஆண்டு கம்போடியாவிலும் அமில தாக்குதல்கள் நடந்துள்ளன.
 இந்தியாவில் இதுவரை அமிலவீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களில் 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பின் நலமாக வாழ்ந்து வருவதாக "மேக் லவ் நாட் ஸ்கேர்ஸ்' என்ற மறுவாழ்வு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சிகிச்சைக்குப் பின்பும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருபவர்களில் ஒருவர்தான் ரேஷ்மா குரேஷி , எந்த தவறும் செய்யாதவர். அமில தாக்குதலுக்கு ஆளாகி முகத்தில் தழும்புடன், இடது கண் பார்வையை இழந்தார்:
 "2014 -ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதியன்று காலை 7.30 மணிக்கு என்னுடைய மூத்த சகோதரி குல்ஷனுடன் தேர்வு எழுத கல்லூரிக்குப் புறப்பட்டோம். வழியில் திடீரென யாரோ எங்களை அழைப்பது போன்ற குரல் கேட்கவே திரும்பி பார்த்தோம். என் சகோதரியின் கணவர் எங்களை நோக்கி அமிலத்தை வீசினார். முதலில் என் சகோதரியின் கை மீது அமிலம் விழுந்ததால், அவள் உடனே என்னை அங்கிருந்து தப்பி ஓடும்படி கூறினாள். அதற்குள் இருவர் என் கைகளை பிடித்துக் கொண்டதால் என் முகத்திலும் அமிலம் வீசப்பட்டது. தாக்கியவர்கள் அனைவரும் தப்பியோடினர். அந்த சமயத்தில் அருகில் இருந்தவர்கள் யாருமே எங்களுக்கு உதவ முன்வரவில்லை. தாக்கியவர்களுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றபோது, வழக்கம்போல் போலீஸில் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யும் வரை சிகிச்சையளிக்க முடியாதென மறுத்துவிட்டனர்.
 போலீஸில் புகார் கொடுக்கச் சென்றபோது என்னுடைய வலியையும், எரிச்சலையும் பொறுக்க முடியாமல் கதறினேன். தாக்குதலுக்கு ஆளாகி ஏழுமணி நேரமாகியும் எனக்கு சிகிச்சை அளிக்க முன்வராததால் என்னுடைய இடது கண் பார்வையை இழக்க வேண்டியதாயிற்று. என்னுடைய தந்தை மருத்துவ செலவுக்காக பணத்தை ஏற்பாடு செய்ய அலைந்து கொண்டிருந்தார். சிகிச்சைக்குப் பின் மேற்கொண்டு சிகிச்சைக்காக இன்றளவும் எங்கள் சொத்துகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்கிறார் ரேஷ்மா.
 "இத்தனை கடினமான சூழ்நிலையிலிருந்து மீண்டு நானும், என் குடும்பத்தினரும் இந்த சமூகத்தை எதிர்கொள்ளத் தொடங்கினோம். துணிவே வாழ்க்கை என தீர்மானித்தேன். பழையபடி என்னால் வாழமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
 இந்நிலையில்தான் 2015-ஆம் ஆண்டு தன்னார்வ தொண்டு அமைப்பான "மேக் லவ் நாட் ஸ்கேர்ஸ்' எனக்கு உதவ முன் வந்தது. என்னைப்போல் அமில வீச்சால் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு புனர்வாழ்வு அளித்து வரும் அந்த அமைப்பு "எண்ட் ஆசிட் சேல்' என்ற பிரசாரத்தை துவங்கியிருந்தது. அதில் ஒருத்தியாய் என்னை இணைத்துக் கொண்டேன். கூடவே, அந்த அமைப்பு நான் தரும் அழகு குறிப்புகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டது. இவை நல்ல வரவேற்பைப் பெற்றன.
 வெளிச்சந்தையில் அமில விற்பனையை தடை செய்ய வேண்டுமென சுமார் 3,50,000 கையெழுத்தைப் பெற்று மனு ஒன்றைக் கொடுத்தோம். பார்வையாளர்கள் அதிகரித்து வருவது எனக்கு பலத்தையும், இந்த சமூகத்தை மாற்றுவதற்கான சக்தியையும் கொடுத்தது. அமில தாக்குதலால் நான் என்னுடைய வாழ்க்கையை இழந்து விட்டதாக கருதவில்லை'' என்று கூறும் ரேஷ்மா. 2016- ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த பேஷன் ஷோவில் நடை அணிவகுப்பில், அமில வீச்சில் பாதிக்கப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். நியூயார்க் மக்கள் அவரைப் பாராட்டி உற்சாகப் படுத்தியபோது நெகிழ்ந்து போனார்.
 தீ விபத்தொன்றில் சிக்கி பாதிக்கப்பட்ட தன்யாசிங் என்பவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று, அங்கு நவீன மருத்துவ முறைகளால் தீக்காயங்களை குணப்படுத்தி கொண்டவர், மீண்டும் இந்தியா திரும்பியபோது "மேக் லவ் நாட் ஸ்கேர்ஸ்' அமைப்பை பற்றி கேள்விப்பட்டு அதில் சாதாரண தொண்டராக சேர்ந்தார். ஆரம்பத்தில் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டம் மற்றும் சிகிச்சைமுறை மற்றும் அரசு அளிக்கும் உதவி போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சேவையாளராக பணியாற்றிய தன்யா சிங், நாளடைவில் அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியானார். அந்த அமைப்பிலிருந்த ரேஷ்மாவைச் சந்தித்த அவர், அவரது துணிவையும், சேவையையும் அறிந்து பாராட்டி "பீயிங் ரேஷ்மா' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
 அண்மையில் பெங்களூரில் நடந்த "இலக்கிய சந்தை' நிகழ்ச்சியில் கூட இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் புத்தகம் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கொடுத்து வருகிறோம்.
 இப்போது ரேஷ்மாவும், தன்யாவும் சேர்ந்து அமில வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சம்பவம் நடக்கும் இடத்தில் உள்ள மக்கள் உடனடியாக உதவ முன் வரவேண்டும். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவுடன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்க மருத்துவர்களிடம் வற்புறுத்த வேண்டும். சிகிச்சை முக்கியம் என்பதால் போலீஸில் புகார் கொடுப்பது, வழக்குப் பதிவு செய்வது போன்றவைகளை பிறகு செய்யலாம். உடனடியான குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகிச்சைமுறைகளை நவீனப்படுத்த வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com