குறைந்த செலவில் கனவு இல்லம்!

வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப் பார் - என்பது பழமொழி. சொந்த வீடு கட்டுவது என்பது அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ள கனவாகும். அதிலும் தற்போது கட்டுமான பொருட்களின் விலை மிகவும் அதிகரித்துள்ள
குறைந்த செலவில் கனவு இல்லம்!

வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப் பார் - என்பது பழமொழி. சொந்த வீடு கட்டுவது என்பது அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ள கனவாகும். அதிலும் தற்போது கட்டுமான பொருட்களின் விலை மிகவும் அதிகரித்துள்ள நிலையில் குறைந்த செலவில் வீடு கட்டுவது என்பது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் மிக குறைந்த செலவில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார் க.கோமகள் அனுபமா. சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கட்டடவியல் பட்டதாரியான(எம்.ஆர்க்) இவர், கடந்த 20 வருடங்களாக மிக குறைந்த செலவில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து கோமகள் கூறியதாவது:
 "ஆங்கிலேயர்கள் வீடு கட்டுவதற்கு உபயோகித்த முறையையே தற்போதும் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். அதனை "இங்கிலிஷ் பான்ட்' என்று கூறுவர். அதற்கு பதிலாக "ரேட் டிரேப் பான்ட்'(எலி வளை) எனும் புதிய முறையை பயன்படுத்தி வீடுகள் கட்டுவதன் மூலம் மிக குறைந்த செலவில் வீடுகள் கட்டிவிடலாம். "ரேட் டிராப் பான்ட்' முறை என்பது செங்கற்களை பயன்படுத்தாமல் பிளை ஆஷ் என்னும் கற்களை உபயோகித்து நெருக்கமாக கற்களை அடுக்கி சுவர் எழுப்பாமல் காற்று செல்லும் அளவிற்கு சற்று இடைவெளி விட்டு கட்டுவது ஆகும்.
 இதன் மூலம் வெயில் காலங்களில் கூட வீடுகளில் வெப்பம் தங்காமல் எப்போதும் காற்றோட்டமாகவே காணப்படும். வீட்டில் எப்போதுமே ஈரப்பதமும், காற்றும் தங்குவதால் குளிர்சாதன வசதி பொருத்துவதற்கு அவசியம் இருக்காது. மேலும் இதன்மூலம் மின் கட்டணமும் குறையும். இந்த "ரேட் டிராப்' முறையில் வீடு கட்டினால் கற்களின் தேவையும் குறையும். உதாரணத்திற்கு 100 செங்கற்கள் தேவைப்படும் இடத்தில் வெறும் 75 பிளை ஆஷ் கற்கள் இருந்தாலே போதுமானதாகும்.
 இக்கற்கள் செங்கற்களை விட மிக குறைந்த விலையில் ரூ.6 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. செங்கற்கள் மரத்தை எரித்தால் மட்டுமே பெற முடியும். எனவே இக்கற்களை உபயோகிப்பதன் மூலம் காற்று மாசு அடைவதையும் தடுக்கமுடியும். இந்த பிளை ஆஷ் கற்கள் நிலக்கரி வெப்ப மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து பெறப்படும் சாம்பல், லைம் ஸ்டோன் உள்ளிட்டவை 90 சதவீதமும், சிமெண்ட் 10 சதவீதமும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இக்கற்கள் செங்கற்களை விட உறுதித்தன்மையும் கொண்டது. இக்கற்களுக்கு வெப்பத்தைக் கடத்தும்திறன் மிக குறைவு.
 இந்த முறையில் வீடுகள் கட்டுவதில் ஆற்று மணல் உபயோகிப்பதையும் தவிர்க்கலாம். அதற்கு மாறாக எம் சாண்ட் எனும் மணலை உபயோகிக்கலாம். எம் சாண்ட் எனப்படுவது கிரானைட் கற்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பொருளாகும். அதுபோன்று வெளிபூச்சு, உள்பூச்சு , பட்டி பார்ப்பது போன்றவை தேவையற்றதாகும். இதற்காக அதிக சிமெண்ட் பயன்படுத்தி பணத்தை செலவிடுவதும் தேவையற்றதாகும். இதற்குப் பதிலாக தண்ணீர் சுவரினுள் புகுந்துவிடாமல் இருக்க வாட்டர் ப்ரூப் பூச்சு மட்டும் மேலோட்டமாக அடிக்க வேண்டும்.
 இதையடுத்து கட்டுமான பணிகளில் சாதாரண மரக்கட்டைகளுக்கு பதிலாக பைன் வுட் கட்டைகளை உபயோகிக்கலாம். இதுவும் மறுசுழற்சி முறையில் கிடைக்கப்பெறும் பொருளாகும். இவ்வாறு மறுசுழற்சியின் மூலம் பெறப்படும் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் உயரும்.
 மேலும் தரையில் பொருத்துவதற்கு ஆத்தங்குடி பூ கல் உபயோகிக்கலாம். சாதாரண மார்பிள் மற்றும் டைல்ஸ் கற்களை உபயோகிப்பதனால் கால் வலி ஏற்படும். மாறாக இந்த ஆத்தங்குடி கற்களை பயன்படுத்துவதன் மூலம், வீடு எப்போதும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். இக்கற்கள் உடலிலுள்ள ஐம்புலன்களையும் சமப்படுத்தும் ஆற்றல் உடையதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 வீட்டிற்கும் கேட்டிற்கும் நடுவே திண்ணை அமைத்து முகப்பு சுவரில் ஜாலி வொர்க் முறைப்படி காற்றோட்டத்திற்காக துளைகளை அமைக்கலாம். ஜாலி வொர்க் எனப்படுவது முகலாயர் காலத்தில் காற்றோட்டத்திற்காக சுவரில் பல வடிவங்களில் துளை அமைப்பதாகும். மேலும் இது 50-க்கும் மேற்பட்ட வடிவங்களில் தற்போது அமைக்கலாம்.

 வீட்டின் மேற்கூரையை வெறும் சிமெண்ட், கான்கிரீட் கொண்டு அமைப்பதனால் பெரிதளவு பிரம்மாண்டமாக காட்சியளிக்காது. அதனால் விளக்குகள் பொருத்துவதால் அதிக பணம் செலவாகக் கூடும். அதற்குமாறாக மேற்கூரையில் பில்லர்ஸ் ஸ்லேப் எனும் முறைப்படி ஓடு, மண்பானை, தேங்காய் ஓடு ஆகியவற்றை கொண்டு அமைப்பதனால் பார்க்க பிரம்மாண்டமாக காட்சியளிப்பதோடு, கான்கிரீட் உபயோகத்தையும் குறைப்பதனால் செலவும் குறையும். மேலும் இவ்வாறு தேங்காய் ஓடு, பானை போன்ற குளிர்ச்சி பொருந்திய இயற்கை பொருட்களை பயன்படுத்துவதால் வெப்ப சலனத்தையும் குறைக்க முடியும். மேலும் ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் கோர்ட் யார்டு அமைக்க வேண்டும். இதன்மூலம் தொலைக்காட்சி, செல்லிடபேசி ஆகியவற்றை மறந்து குழந்தைகளும் பெரியோர்களும் பேசி மகிழ்ந்து நேரத்தை கழிக்க உதவும். அதுபோன்று வீட்டினுள் அமைக்கும் படிக்கட்டுகளை கால்வனைஸ்டு இரும்புடன் பைன் வுட் கட்டைகளை பயன்படுத்தி அமைக்கலாம்.
 அதுபோன்று வீட்டின் கதவுகள் அமைக்க மர கட்டைகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக கால்வனைஸ்டு இரும்பு தகடால் அமைக்கிறோம். இதன்மூலம் கதவின் உறுதித்தன்மை அதிகரிப்பதோடு செலவும் குறையும். மேலும் வீட்டின் மேற்கூரையில் க்ளாஸ் ப்ளாக் முறைப்படி கண்ணாடிகளை அமைக்கிறோம். இதனால் வீடு இருட்டடைந்து காட்சியளிப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தனித் தொட்டி அமைத்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பின்பற்றி வருகிறோம். இதன்மூலம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிகரிக்கலாம்.
 இதுதவிர வீட்டின் செலவினங்களை தாண்டி வீட்டின் மாடியில் குறைந்தது 10 மூலிகை செடிகள் அமைப்பது மிகவும் நல்லது. இந்த முறையில் வீடு கட்டுவதால் மொத்த கட்டுமான செலவிலிருந்து 20 சதவீதம் வரை குறைக்க முடியும்'' என்கிறார் கோமகள்.
 - எஸ்.ஷேக் முகமது
 படங்கள்: வே.சக்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com