சமையல்! சமையல்! (08/01/2020)

பூசணிக்காய் ஓலன், கத்தரிக்காய் ஸ்பெஷல் கிரேவி, வெண்டைக்காய் புளி பச்சடி 

பூசணிக்காய் ஓலன்

தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 4
மிளகாய்வற்றல் - 4
முழு தேங்காய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
காராமணி - 25 கிராம்
பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய் எண்ணெய் - அரை தேக்கரண்டி
செய்முறை: பூசணிக்காயை பெரிய பெரிய துண்டுகளாக ரொம்ப மெல்லிசா இல்லாமல் சிறிதளவு கனமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், மிளகாய் வற்றலைக் கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவலோடு ஊற வைத்திருந்த பச்சரிசியையும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். காராமணியை சட்டியில் நன்கு வெடிக்கவிட்டு அதை குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடி கனமானப் பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் பூசணிக்காயை அதில் சேர்த்து அதனுடன் கிள்ளி வைத்திருந்த பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், தேவையான உப்பு சேர்த்து பூசணிக்காயை வேக வைக்கவும். பூசணிக்காய் நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பச்சரிசி விழுதைச் சேர்த்து வேக வைத்து வடித்து வைத்திருக்கும் காராமணியைச் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அரைக் கரண்டி தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மூடி வைத்து விடவும். சாப்பிடுவதற்கு முன்னால் கிளறிவிட்டு பரிமாறவும். பூசணிக்காய் ஓலன் தயார்.

கத்தரிக்காய் ஸ்பெஷல் கிரேவி

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - அரை கிலோ
வாழைக்காய் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
புளி - ஒரு எலுமிச்சம் பழம் அளவு
தக்காளி - 3
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெந்த துவரம் பருப்பு ஒரு கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெல்லம் - 1 சிறு துண்டு
செய்முறை: கத்தரிக்காயையும், வாழைக்காயையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கரண்டி துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பின்னர், அடி கனமானப் பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, சிறிதளவு பெருங்காயம், கிள்ளி வைத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய், வாழைக்காய் சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். ஓரளவு வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். முக்கால் பதம் வெந்தவுடன், கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். நன்றாக கொதிவந்தவுடன், வேக வைத்துள்ள துவரம்பருப்பு, வெல்லம் சேர்த்து கெட்டியாக இல்லாமலும் அதேசமயம் நீர்க்க இல்லாமலும் இருக்கும்படி கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான கத்தரிக்காய் ஸ்பெஷல் கிரேவி ரெடி.

வெண்டைக்காய் புளி பச்சடி

தேவையான பொருட்கள்:
கடுகு - 1 மேசைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி -1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
வெந்த துவரம் பருப்பு - ஒரு கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
வெல்லம் - துளியளவு
செய்முறை: வெண்டைக்காயை நன்றாக அலம்பிவிட்டு தலைப்பகுதியையும் நுனிப் பகுதியையும் நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு வரமிளகாயை தாளிப்பதற்கு வைத்துக் கொண்டும் நான்கு பச்சைமிளகாயை குறுக்கே வெட்டியும் வைத்துக்கொள்ள வேண்டும். புளியை ஓரளவு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு வெந்த துவரம்பருப்பை ஒரு கரண்டி அளவு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கனமான பாத்திரத்தில், எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய் , மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் இவற்றைத் தாளித்து, அதில் நறுக்கிய வெண்டைக்காயைச்சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். வெண்டைக்காய் நன்கு வதங்கியவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின், முக்கால் பதம் வெந்தவுடன் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரைவிட்டு கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனைப் போனதும், வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் கொஞ்சம் பெருங்காயப் பொடியையும் சேர்த்து சிறிது வெல்லத்தையும் சேர்க்கவும் கொதிக்கவிட்டு இறக்கவும். சூப்பரான வெண்டைக்காய் புளி பச்சடி ரெடி .
(புளி ரொம்ப பிடிக்காதவர்கள் பாதி புளியும் மீதி பாதி புளிக்கு பதிலாக தக்காளியும் பயன்படுத்தி கொள்ளலாம்)
-ஜெயந்தி சுரேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com