Enable Javscript for better performance
தனியாக விமானம் ஓட்டுவதில்  சாதனைப் படைத்தவர்!- Dinamani

சுடச்சுட

  

  தனியாக விமானம் ஓட்டுவதில்  சாதனைப் படைத்தவர்!

  By - அ.குமார்  |   Published on : 15th January 2020 06:00 PM  |   அ+அ அ-   |    |  

  mn14

  மும்பை போரிவெலியை சேர்ந்த கேப்டன் ஆரோஹி பண்டிட் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா உனாலாக்லீட் நகரத்திலிருந்து தனியாக லைட் ஸ்போர்ட்ஸ் விமானம் (எல்.எஸ்.ஏ) மூலம் கிளம்பி பசிபிக் பெருங்கடலின் பேரிங் கடலை கடந்து ரஷ்யாவில் உள்ள அனடிர் விமான நிலையத்தில் இறங்கி, பின்னர் அங்கிருந்து கிளம்பி கடலைக் கடந்து அலாஸ்காவில் உள்ள நோம் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.

  இவர் பயணித்த மொத்த தூரம் 1,100 கி.மீ. இதற்காக இவர் எடுத்துக் கொண்ட நேரம் 3 மணி 50 நிமிடங்கள். இதன்மூலம் பசிபிக் பெருங்கடலை எல்.எஸ்.ஏ மூலம் கடந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். ஆரோஹி இதற்கு முன் கடந்த மே மாதத்தில் இதே போன்று எல்.எஸ்.ஏ மூலம் தனியாக சென்று அட்லாண்டிக் கடலை கடந்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

  பசிபிக் பெருங்கடலை கடந்ததைவிட, அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த பயணம்தான் அழகாகவும், மனதில் பசுமையாகவும் இருக்கிறது என்று கூறும் ஆரோஹி, இந்தியன் கமர்ஷியல் பைலட் மற்றும் லைட் ஸ்போர்ட்ஸ் விமானம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளார். உலகிலேயே முதன்முதலாக எல்.எஸ்.ஏ ஓட்டும் அனைத்து மகளிர் அமைப்பொன்றை மாஹி என்ற பெயரில் துவங்கிய இவர், 2018- ஆம் ஆண்டு ஜூலை 30- ஆம் தேதி, தன்னுடைய சிநேகிதியும், சக பைலட்டுமான கைதார் மிஸ்க்குட்டாவுடன் சேர்ந்து, புல்லட் மோட்டார் சைக்கிளை விட எடை குறைவான, முதன்முதலாக சிவில் ஏவியேஷன் இந்தியா பதிவு செய்த எல்.எஸ்.ஏ விமானத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மாநிலங்களிலும், பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சைபீரியா, ஸ்லோவேனியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து திரும்பினார்.

  சிங்கிள் எஞ்சின் சைனஸ் 912 எனப்படும் இந்த விமானத்தில் விமான ஓட்டியின் அறை சிறியதாக இருந்தாலும், அவசர தேவைக்கான ஆக்ஸிஜன், பாதுகாப்பு சாதனங்கள், தொலை தொடர்பு வசதிகள் அனைத்தும் இருப்பதால், ஆரோஹி தனியாகவே விமானத்தில் சென்று அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலை கடக்க திட்டமிட்டு, அதன்படியே விமானத்தை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

  இந்த பயணங்களை மேற்கொள்வதற்கு முன் ஏழு மாதங்கள் இந்தியா, கிரீன்லாந்து, சைபீரியா, இத்தாலி ஆகிய நாடுகளை சார்ந்த கடல்கள், அங்குள்ள சிதோஷ்ண நிலை, பனி, அளவுக்கு மீறிய பருவநிலை, காற்று மற்றும் பல்வேறு சூழ்நிலைகளை ஏற்கும் வகையில் தன் உடல் தகுதி, மனநிலை அனைத்தையும் பரிசோதனை செய்து கொண்ட பின்னரே ஆரோஹி தனிமைப் பயணம் மேற்கொள்ள துணிந்தார். இந்த பயணங்களின் மூலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி, அனைத்துப் பெண்களுக்கும் பெருமைத்தேடி தந்ததாக கூறுகிறார் ஆரோஹி.

  கடந்த 13 மாதங்களில் முந்தைய பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் பல சாதனைகள் நிகழ்த்திய ஆரோஹி, தெற்கு வழியாக வடகிழக்கிலிருந்து வடமேற்காக கனடாவை கடந்த முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவர் தனக்கு முன்னோடியாக கருதுவதுயாரைத் தெரியுமா ?'

  "87 ஆண்டுகளுக்கு முன் 1932 - ஆம் ஆண்டு மே 20- ஆம் தேதி அமெரிக்க பெண் விமானி அமேலியா இயர்ஹார்ட் என்பவர், மிகப் பெரிய டிரான்ஸ் அட்லாண்டிக் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவர்தான் என் ஆர்வத்திற்கு காரணம்' என்று கூறும் ஆரோஹி, இதுவரை தன்னுடைய எல்.எஸ்.ஏ விமானத்தில் மூன்று கண்டங்களையும், 20 நாடுகளையும், 50 பயணங்கள் மூலம் கடந்த வகையில் 29,500 கி.மீ. தொலைவு தனியாக விமானத்தை ஓட்டி சாதனைப் படைத்துள்ளார்.

  ""பெண்கள் சக்தியை நிரூபிக்கவும். தன்னம்பிக்கையையும், நட்புறவையும் வெளிப்படுத்தவே இந்தப் பயணங்களை மேற்கொண்டேன். மேலும் தனிமையில் பல பயணங்களை மேற்கொள்ளும் திட்டமும் உள்ளது'' என்கிறார் ஆரோஹி பண்டிட்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai