Enable Javscript for better performance
மாணவர்களின் பசியாற்றும் மூதாட்டிகள்!- Dinamani

சுடச்சுட

  

  மாணவர்களின் பசியாற்றும் மூதாட்டிகள்!

  By -  வெ.செல்வகுமார்  |   Published on : 15th January 2020 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mn12

  பெற்றெடுத்த வாரிசுகளும்  உற்றார்  உறவினர்களும் கைவிட்ட  நிலையில், வாழ்வின் எஞ்சிய நாள்களை காப்பகத்தில் கழித்துவரும் மூதாட்டிகள், ஏழை மாணவர்களுக்கு உணவு சமைத்துத் தந்து பசியாற்றும் மனிதநேயம் வியக்க வைக்கிறது.

  கோவை, ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி வீதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், "ஈர நெஞ்சம்' அறக் கட்டளையின் பராமரிப்பில் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதியவர்கள், 56 மூதாட்டிகள் என 62 பேர் உள்ளனர். 

  வாரிசுகளால் கைவிடப்பட்டோர், முதுமையில் சுயநினைவை இழந்து தவிப்பவர்கள், ஆதரவின்றி சாலையில் திரிபவர்கள் எனப் பலரையும் இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் கண்டறிந்து, காப்பகத்துக்கு அழைத்து வந்து உணவு, உறைவிடம் அளித்துப் பராமரிக்கின்றனர். 

  இந்தக் காப்பகத்தில் அதிகாலை 5 மணிக்கு எழும் முதியவர்கள், காப்பக வளாகத்தில் தோட்ட வேலை செய்வதுடன்,  கோயில்களுக்கு விபூதி, குங்குமப் பொட்டலங்கள் தயாரித்துத் தரும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்தக் காப்பகத்தில், கடந்த 2016- ஆம் ஆண்டு தன்னார்வலர்களின் உதவியுடன் சமையலறை அமைக்கப்பட்டது. அதன் பிறகு, மூதாட்டிகள், தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றனர். இதுதவிர, காப்பகத்தின் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரித்துத் தரும் பணியிலும், கடந்த 3 ஆண்டுகளாக  ஈடுபட்டு வருகின்றனர். 

  தங்கள் சேவையின் அடுத்த கட்டமாக, அப்பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் படிக்கும் 10- ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பிஸ்கட், சுண்டல், தேநீர் போன்ற சிற்றுண்டிகளை வழங்கியும் சேவையாற்றி வருகின்றனர்.  இந்த மூதாட்டிகளின் சேவையைப் பாராட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடை வழங்கி தங்கள்  நன்றியைத் தெரிவித்துள்ளனர். 

  இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மகேந்திரன் கூறியது:  

  ""எங்கள் அமைப்பின் சேவையை அறிந்த பலரும், சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் தவிக்கும் முதியவர்களைப் பற்றி எங்களுக்கு செல்லிடப்பேசியில் தகவல் அளிக்கின்றனர்.

  எங்கள் அமைப்பின் நிர்வாகிகள் உடனே அங்கு சென்று அவர்களை அழைத்து வந்து ஆதரவு அளிக்கிறோம். மீட்கப்படும் முதியவர்கள் ஆதரவற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் காப்பகத்தில் தங்க வைத்துப் பராமரிக்கிறோம். வழிதவறியோ, வீட்டில் கோபித்துக் கொண்டோ வெளியெறும் முதியவர்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கிறோம். 

  நாங்கள் மீட்கும்போது சில முதியவர்கள் சுயநினைவில்லாத நிலையிலும் காணப்படுவதுண்டு. அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி அளிக்கப்படும் பட்சத்தில், குணமடைந்த பிறகு தங்கள் குடும்பத்தினரின் விவரங்களைக் கூறுவார்கள். அதன் பிறகு, அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்து, வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைப்போம். இவ்வாறாக கடந்த 5 ஆண்டுகளில் 400 முதியவர்களை அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளோம். 

  காப்பகத்தை ஒட்டியுள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலர் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், அவர்கள் காலையில் உணவு சாப்பிடாமல்  பள்ளிக்கு வந்து, பிரார்த்தனைக் கூட்டத்தில் மயங்கி விழுவதாகவும் கேள்விப்பட்டோம். 

  தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் உதவியுடன் காப்பக மூதாட்டிகள் தயாரிக்கும் இட்லி, பொங்கல், சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவது ஆரம்பமானது.  
  தினசரி அதிகாலை 5 மணிக்கே உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கி விடும் காப்பக மூதாட்டிகள், காலை 8 மணிக்கு தாங்கள் தயாரித்த உணவுப் பதார்த்தங்களை பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். 

  இது குறித்து மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி கூறுகையில்:
  மாலைநேரத்தில் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் 10- ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் வீடு செல்லத் தாமதமாவதால், அவர்களுக்கு தேநீர், சுண்டல், பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிகளை வழங்குவதும் கடந்த ஒரு மாதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  மற்ற மாநகராட்சிப் பள்ளிகளிலும் இதேபோல, காப்பகத்தில் தங்கியுள்ள முதியவர்கள் மூலமாக ஏழை மாணவர்களுக்கு உணவு வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்கிறோம்'' என்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai