"குடிசையில் தொடங்கி...'

பத்து குழந்தைகள் பிறந்தால் இரண்டு இறந்துவிடும் அபாயம் அந்தப் பகுதியில் வசித்து வந்த பழங்குடி மக்களை வாட்டியது
"குடிசையில் தொடங்கி...'

பத்து குழந்தைகள் பிறந்தால் இரண்டு இறந்துவிடும் அபாயம் அந்தப் பகுதியில் வசித்து வந்த பழங்குடி மக்களை வாட்டியது. இந்தப் புள்ளி விவரம், இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் இறக்கும் எண்ணிக்கையையுடன் ஒப்பிடும் போது மிக மிக அதிகமாக சிட்டிலிங்கி பகுதியில் இருந்தது. தவிப்பதைத் தவிர அந்தப் பகுதி பழங்குடி மக்களுக்கு வேறு வழியில்லை... இந்த நிலைமை லலிதா அவரது கணவர் ரெஜி ஜார்ஜ் அந்தப் பகுதிக்கு வருகை தரும் வரை தொடர்கதையாகியிருந்தது. லலிதா - ரெஜி ஜார்ஜ் ஆங்கில மருத்துவர்கள். கேரளத்தில் ஆலப்புழை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர்கள். காதல் திருமணம்.
 மருத்துவர் லலிதா தொடர்கிறார்:
 "1990 -இல் மருத்துவப் படிப்பு முடிந்ததும் காந்திகிராமத்தில் பணி புரிந்தோம். மருத்துவ வசதி கிடைக்காத மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். சிட்டிலிங்கி எங்கள் கனவிற்குப் பொருத்தமானதாக அமைந்தது. நாங்கள் சிட்டிலிங்கிப் பகுதிக்கு 1992- இல் வருகை தந்தோம். அத்துவான காட்டுப் பகுதி. சிட்டிலிங்கியை எங்கள் ஊராக மாற்றிக் கொண்டோம். அந்தப் பகுதியில் வாழும் மக்களை எங்கள் குடும்ப உறுப்பினர்களாக மாற்றும் முயற்சியைத் தொடங்கினோம்.
 ஒரு சிறிய குடிசையில் நோயாளிகளைப் பரிசோதிக்க மருத்துவ நிலையத்தைத் தொடங்கினோம். நாங்கள் அமர இரண்டு நாற்காலிகள்.. ஒரு மேசை.. நோயாளிகள் அமர ஒரு பென்ச். ஒரு மின்விளக்கு... இப்படித்தான் எங்கள் தொடக்கம் அமைந்தது. தொடக்கத்தில் அந்தப் பகுதி மக்கள் எங்களை அதிசயமாகப் பார்த்தாலும்.. அத்தனை எளிதில் மருத்துவம் பார்க்க வந்துவிடவில்லை. சில மாதங்கள் பிடித்தன. குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற சுகவீனங்கள் வந்தால் காத்து கருப்பு அடிச்சிருச்சு என்பார்கள். உடனே மந்திரிக்க பூசாரியிடம் போவார்கள். பாம்பு கடித்தால் வைத்தியம் செய்யாமல் பூஜை செய்வார்கள். ஆரம்பத்தில் நாங்கள் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. "இங்கே மருத்துவ சிகிச்சை நடக்கட்டும். நீங்க உங்க நம்பிக்கையின்படி எதை வேண்டுமென்றாலும் செஞ்சுக்குங்க" என்று சொல்லிவிடுவோம். அப்படித்தான் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எவ்வளவு முக்கியம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியவைத்தோம்.
 நான் மகப்பேறு மருத்துவர் என்பதால் பிரசவம் பார்க்க ஆரம்பித்தேன். ரெஜி.. சிறு சிறு அறுவை சிகிச்சைகள் செய்தார். எங்கள் சேவையால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றோம். நண்பர்கள்.. நல்ல மனசு கொண்டவர்கள் செய்த நிதி உதவியால் பத்து படுக்கை கொண்ட மருத்துவமனை உருவானது. அது இப்போது முப்பத்தைந்து படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவடைந்திருக்கிறது. தீவிர சிகிக்சை அறையும், வென்டிலேட்டர் வசதியும், பல் சிகிச்சைப் பிரிவும், அவசர சிகிச்சைக்கான வசதிகளும், பரிசோதனை வசதிகள் என்று ஒரு நவீன மருத்துவமனைக்கான அனைத்தும் உள்ளது. பிறந்த குழந்தைகள் விரைவில் இறக்கும் சதவீதத்தையும் குறைத்துக் காட்டியுள்ளோம். கடந்த பத்து ஆண்டுகளில் பிரசவிக்கும் எந்தத் தாயும் இங்கு இறக்கவில்லை. இது ஒரு பெரிய சாதனை. முன்பெல்லாம் பிரசவங்கள் வீட்டில் நடைபெற்றன. அதனால் தாயம் சேயும் இறக்கும் அபாயம் இருந்தது. நாங்கள் வந்ததிலிருந்து பிரசவம் மருத்துவமனையில் நடைபெறுவதால் சேய் மரணங்கள் குறைந்து. தாய் மரணமடைவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

பள்ளி வசதி இல்லாதால், எனது இரண்டு மகன்களுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்தோம். ஐந்தாம் வகுப்பிற்காக வெளியூர் செல்ல நேர்ந்தது. கட்டணம் என்று நிர்ணயித்திருந்தாலும் பழங்குடியினர் கொடுப்பதை வாங்கிக் கொள்வோம். ஆர்வலர்கள் நிதி உதவி செய்வதால் மருத்துவமனையை நடத்திச் செல்ல முடிகிறது. மருத்துவக் காப்பீடு திட்டம் ஒன்றினையும் அறிமுகம் செய்திருக்கிறோம். இந்தக் காப்பீட்டுக்காக ஆண்டுக்கு நூறு ரூபாய் கட்ட வேண்டும்.
 பழங்குடியினருக்கு பயிற்சி அளித்து அவர்களையும் மருத்துவமனை ஊழியர்களாக்கியுள்ளோம். மொத்த ஊழியர்களில் சுமார் 95 சதவீத ஊழியர்கள் பழங்குடியினர்தான்'' என்கிறார் டாக்டர் லலிதா.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com